1.6 சமுதாயம்
அறத்துப்பாலை அடுத்துவரும் பொருட்பாலில் அரசியலுக்குரிய
தகுதிகள், தகுதியின்மைகள் விளக்கப்படுகின்றன. கல்விச்
சிறப்பும் சான்றோர் பண்புகளும்
கூறப்படுகின்றன.
பெரியவர்களிடம் தவறு இழைக்காதிருக்க வேண்டும் என்ற
எச்சரிக்கையும் செய்யப்படுகிறது. தாளாண்மை (முயற்சி)
மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதனையும்
எடுத்துரைக்கிறது.
1.6.1
கல்வி
சமுதாயத்தை மேம்படுத்தும் ஆற்றல் உடையது
கல்வி.
தலைமுடி அழகும், ஆடை அழகும், மஞ்சள் அழகும்
அழகல்ல. கல்வி அழகே சிறந்த அழகாகும். கல்விச் செல்வம்
கற்பவர்க்கு இன்பத்தைக் கொடுக்கும். மற்றவர்க்குக் கொடுக்கக்
கொடுக்கக் குறையாது. மாறாக அதிகரிக்கும் பண்புடையது.
கல்வி, புகழைக் கொடுக்கும்; அறியாமையைப் போக்கும் சிறந்த
மருந்து. பிறரால் திருட முடியாதது. அரசரின் சினமும் அதைப்
பறிக்க இயலாது. ஆதலால் கல்விச் செல்வத்தையே ஒருவன்
தன் மக்களுக்குச் சேர்க்க வேண்டும். இத்தகைய கல்வியின்
அழகை,
குஞ்சி
அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு |
 |
(நாலடி - 131)
|
(குஞ்சி = தலைமுடி; கொடுந்தானை = வளைவுள்ள
ஆடை)
என்று பாராட்டுகிறது நாலடியார்.
நெஞ்சத்தில் யாம்
நற்குணமுடையோம் என்று கருதும் கல்வியால்
வரும்
நடுவுநிலைமையே அழகாகும்.
அழகை மட்டுமா தருகிறது கல்வி? இல்லையென்கிறது நாலடி.
வேறு என்ன பயன்களைத் தருகிறது என்று பார்க்கலாமா?
இந்தப் பிறப்பின் பயனைத் தரும். பிறர்க்குக்
கொடுப்பதால்
குறைவுபடாமல் மேன்மேலும் வளரும் தன்மையது. தம்மை
இன்னாரென்று அறியச் செய்யும். அழிதல் இல்லாதது. அதனால்
கல்விபோல் அறியாமை நோயை நீக்கும் மருந்து
யாம்
பார்த்ததில்லை. (நாலடி -132) அறியாமையை நோயாக்கி,
அதனைத் தீர்க்கும் மருந்தாகக் கல்வியை உருவகப்
படுத்தியிருப்பது சிறப்பாகும்.
கற்றவர் நட்பு மகிழ்ச்சி தரும். அவரோடு
செய்யும் நட்பு
கரும்பை நுனியிலிருந்து அடிவரை தின்றது போல் நாள்
செல்லச் செல்ல இன்பம் மிகுப்பதாகும். நற்குணம் இல்லாதார்
நட்பு கரும்பை அடியிலிருந்து தின்பது போல்வதாகும்.
அதாவது நாளாக ஆக இனிமை குறைந்து கொண்டே வரும்
(நாலடி- 138).
கல்வி கரையிலாதது. கற்பவர் வாழ்நாளோ சிறியது. ஆதலால்
பொருத்தமான நூல்களையே கற்றல் வேண்டும். இக்கருத்தை
எவ்வளவு எளிமையாகச் சொல்கிறது இப்பாடல்! பாலையும்
நீரையும் கலந்து வைத்தாலும் நீரை விட்டு விட்டுப் பாலை
மட்டுமே உண்ணும் அன்னப்பறவை. அதுபோல நாமும் தரமற்ற
நூல்களை விட்டு நல்ல நூல்களைக் கற்க வேண்டும் என்கிறது,
கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே - நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து |
 |
(நாலடி
- 135)
|
(அமைவுடைய = தரமான; குருகு = அன்னம்)
பொருட்பாலில் அரசியலில் முதலாவதாகக் கல்வியைப்
பற்றிப்
பேசப்படுகிறது. கல்வியை அரசியலில் வைத்ததால் பொது
மக்களுக்குக் கல்வி தேவையில்லையென்று பொருளில்லை.
மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள். அவன் கல்வியறிவு
உடையவனாய் இருந்தால் மக்களையும் அறிவுடையர்களாக
ஆக்க முயற்சியை மேற்கொள்வான். அதனால் பொருட்பாலில்
கல்வி பேசப்பட்டுள்ளது.
ஆளுகின்றவர்க்குத் தேவையான பண்புகளை
விளக்கிப்
பேசுகிறது நாலடியார். முதலில் கல்வி, பின் குடிச்சிறப்பு. இவை
மட்டும் போதாது. நல்லினத்தைச் சேர்தலும் தேவையாகும்.
1.6.2
குடிச்சிறப்பு
குடிச்சிறப்பு ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய
சிறந்த
பண்பாகும். நற்குணங்கள், நல்லொழுக்கம் இவை இவர்க்கு
இயல்பாகும். தீயனவற்றுக்கு அஞ்சுதல் இவர்தம் இயல்பு,
வறுமையிலும் தம் கடமையை மறக்காமல் செய்வர். வறுமையில்
இவர்கள் செய்யும் அறங்களை அற்பர்கள்
செல்வக்
காலத்திலும் செய்யமாட்டார்கள்.
1.6.3.
நல்லினம் சேர்தல்
நல்லோர் இணக்கத்தால் குற்றங்கள் நீங்கும். பாலோடு சேர்ந்த
நீர் தன் நிறம் மாறுதலைப் போல, பெரியோரைச் சேர்தலால்
சிறியோர் இழிகுணங்களும் வெளிப்பட்டுத் தோன்றாது.
எளியவராயிருப்பினும் நல்லோரைச் சார்ந்தவரைப் பகைவரின்
சினம் ஒன்றும் செய்யாது. சேர்கின்ற இனத்தைப் பொறுத்தே
ஒருவரின் உயர்வும் தாழ்வும் அமையும்.
நல்ல கல்வியும் சிறப்பும் பெற்றிருந்தாலும் நல்ல
இனத்தோடு
ஒருவன் சேர்ந்திருக்க வேண்டும். காலையில் புற்களின் மீது
பனி படர்ந்திருக்கிறது. வெயில் ஏற ஏறப் புற்களின் மீதுள்ள
பனி நீங்கி விடுவதைப்போல முன்னர் தம்மிடத்துள்ள
குற்றங்கள் கூட நீங்கப் பெறுவராம் (நாலடி
-171).
ஒளி பொருந்திய திங்களைச் சேர்ந்திருத்தலால் அதனிடத்துள்ள
முயலும் வணங்கப்படும். பெரியோர் நட்பினைக் கொண்டால்
சிறப்புக் குறைந்தவரும் சிறப்பினைப் பெறுவர். இக்கருத்தை
எளிமையாக விளக்குகிறது நாலடியார் (நாலடி
-176).
பாலோடு கலந்த நீர் பாலாக மாறுமே
தவிர நீராகத் தன்
நிறத்தினை வேறுபடுத்திக் காட்டாது. அதுபோலவே நல்லினம்
சேர்ந்தால் சிறியவரது இழிந்த குணங்களும் தோன்றாமல்
போகும். சேர்கின்ற இனத்தைப் பொறுத்தே ஒருவன் உயர்வும்,
தாழ்வும் அமையும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது
(நாலடி -177).
மனத்தில் குற்றமற்றவர்களாயினும் தாங்கள் சேர்ந்த கூட்டத்தின்
தீமையால் இகழப்படுவர். அதனால் நல்லினத்தைச்
சேர
வேண்டும் என்பதற்கு அழகான உவமை கூறப்படுகிறது.
வெட்டப்பட்ட மரச் செறிவில் நெருப்புப்
பற்றினால்,
அக்காட்டிலுள்ள வாசனை வீசுகின்ற சந்தன மரமும் வேங்கை
மரமும் கூட வெந்து போகும். வாசனை உடைய
மரம்
என்பதால் அது வேகாமலா போகும்? அது
போல,
குற்றமற்றராயினும் தாங்கள் சேர்ந்த கூட்டத்தின் தீமையால்
இகழப்படுவர். (நாலடி
-179) அதனால் நல்லினத்தைச் சேர
வேண்டும் என்பர். இப்படிப்பட்ட உவமைகள்தாம்
அறக்கருத்துகளைக் கூறும்போது இலக்கியச் சுவையைத் தந்து
இனிமை பயக்கின்றன.
1.6.4
பெரியாரைப் பிழையாமை
‘நல்லினம் சேர வேண்டும் என்று கூறிய பின் பெரியோரைப்
பிழையாமை’ வேண்டுமென்று அறிவுறுத்துகிறது நாலடி.
பெரியவர்களைத் துணையாகக் கொண்டால் சமுதாயத்தில்
முன்னேற முடியும். சமுதாயமும் மேம்படும். பெரியோர்தம்
வெறுப்பால் வரும் துன்பங்களை நீக்குதல் அரிது. எனவே
பெரியோர் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்யக் கூடாது.
வளைக்குள் இருக்கும் நாகமும் இடியோசைக்கு அஞ்சும்.
பெரியோரின் சினத்துக்கு ஆட்பட்டவர்கள் கோட்டைக்குள்
ஒளிந்திருந்தாலும் பிழைக்க மாட்டார்கள் என்று பெரியாரைப்
பிழைத்தலின் வரும் துன்பம் கூறப்படுகிறது (நாலடி - 164).
1.6.5
தாளாண்மை
சமுதாய மேம்பாட்டிற்கும் தனி
மனித உயர்வுக்கும்
இன்றியமையாத ஒன்று தாளாண்மை.
ஓடியாடி உழைக்கும் முயற்சி உடையவர்கள்
பெருமை
உடையவர்கள். இவர்களுக்குப் பிறரை எதிர்பார்த்து வாழும்
சிறுமையாகிய குற்றம் உண்டாகாது. எப்படி? இவர்கள்
எக்காலத்திலும் சோர்வு அடைவதில்லை. வலிமை மிக்க புலி,
தக்க இறைச்சி கிடைக்க வில்லையெனில், ஒரு நாள் சிறிய
தவளையையும் பிடித்து உண்ணுமாம். எத்தொழிலையும்
அற்பமான தொழிலென்று கருத வேண்டாம். அதுவே
முயற்சியால் மேலான தொழிலாக மாறும் (நாலடி -193). தவம்,
கல்வி, முயற்சி என்ற இவற்றாலேயே
ஒரு குலம்
உயர்வுடையதாகும் (நாலடி. 195).
1.6.6
நட்பு
நட்பின் பல நிலைகளை நட்பியலில் நாலடியார் விளக்குகிறது.
திருக்குறளை அடியொற்றி, நட்பாராய்தல், கூடாநட்பு போன்ற
அதிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
• நட்பாராய்தல்
நம் வாழ்க்கையின் உயர்வுக்கும் தாழ்வுக்கும்
காரணமாக
அமையக் கூடியவர்கள் நண்பர்கள். எத்தகைய நட்பைப் போற்ற
வேண்டும். யாருடைய நட்பை நீக்க வேண்டும் என்று வாழ்வு
சிறக்க வழி கூறுகிறது, நாலடியார். யானையை
ஒத்தவர்
நட்பினை நீக்குக. நாயைப் போன்றவர் நட்பினைப் போற்றுக
என்றும் நண்பரைத் தேர்ந்தெடுக்க வழி கூறுகிறது.
யானை தினம் தனக்கு உணவு கொடுக்கும் பாகன் ஏதேனும்
ஒரு நாள் தவறு செய்யின் அவனையே அழித்து விடும்.
எவ்வளவு உயர்ந்த மனிதனும் ஏதேனும் தவறு செய்யக் கூடும்.
ஆதலால் ஒருவன் தான் செய்த உதவியினை உள்ளத்தில்
கொண்டு தீங்கு செய்தாலும் பொருட்படுத்தாத ஒருவனையே
தன் நண்பனாகக் கொள்ளுதல் வேண்டும். உதவிகள் பல
செய்தாலும் ஒரு போது செய்த தீங்கினையே
கருத்திற்
கொண்டு, காலம் பார்த்து அழிப்பவன் யானை போன்றவன்.
எனவே யானை போன்றவர் நட்பினை நீக்க வேண்டும்.
ஒரு வேளை உணவிட்டாலும் அதையே நினைத்திருக்கும் நாய்
அந்த நன்றியை மறவாது. அந்த நாயை வேல் கொண்டு
எறிந்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு
நிற்கும்.
அப்படிப்பட்டவரின் நட்பினையே போற்ற வேண்டும் என்று
நட்பாராய்தலில் விளக்குகிறது நாலடியார் (நாலடி - 213).
பக்கத்தில் இருப்பதால் அன்பு பெருகாது.
தூரத்தில்
இருப்பதால் நட்பு விலகாது என்றும் நட்பின் திறத்தினை
வரையறை செய்கிறது.
மூவகை மரங்களை உவமையாக்கி மூவகை
மக்களின்
பண்புகளை வெளிப்படுத்தும் நாலடிப் பாடல் நயமுடையது.
பண்பிலா மக்கள் நாள்தோறும் நீர் பாய்ச்சப் பயன்தரும்
கமுக மரத்தை ஒப்பர். இடைப்பட்டவர் விட்டு விட்டு நீர்
பாய்ச்சப் பயன்தரும் தென்னை மரத்தை ஒப்பர். விதையிட்ட
நாளில் நீர் இடப்பட்டதன்றி, தானே வளர்ந்து பயன்தரும்
பனைமரம் ஒப்பர் மேன்மக்கள் என்று, அன்றாடம் மக்கள்
பார்த்துப்பழகிய பொருள்களையே உவமையாகக் கூறுவது
சிறப்பு (நாலடி - 216).
• கூடாத நட்பு
யாரை நட்பாகக் கொள்ள வேண்டும்
என்று கூறியபின்
யாருடைய நட்பை விலக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
தம்முடைய காரியம் ஆகும் வரை ஒத்திருந்து
காரியம்
முடிந்ததும் விலகிச் செல்பவர் நட்புக் கூடாத ஒன்று. அன்புப்
பிணிப்பு இல்லாதவர் நட்பு வைக்கோலில் பற்றிய தீ போல்
நீடித்து நிற்றலின்றி அழியும் (நாலடி - 234). மன ஒற்றுமை
இல்லாதவர் நட்பு துன்பம் தரும் என்ற எச்சரிக்கையும்
செய்யப்படுகிறது (நாலடி - 237).
|