3.0 பாட முன்னுரை

தமிழ் நாட்டில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து 19-ஆம் நூற்றாண்டு வரை மக்களிடையே மிகச் சிறப்புடன் இருந்த ஒரு வகைக் கூத்துக்கலை இலக்கியமே பள்ளு ஆகும். 96 வகை பிரபந்தங்களுள் பள்ளும் ஒருவகை என்று சிற்றிலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். பள்ளு என்பது பள்ளர்கள் எனப்படும் ஒரு சாதி மக்களின் வாழ்வியல் முறைகளைக் கதைப் போக்கில் விளக்கிக் கூறும் நாடக இலக்கியம். பள்ளு இலக்கியத்தின் மூலம் உழவர்களின் பழக்க வழக்கங்கள், ஒழுகலாறுகள், வேளாண்மைச் செயல் முறைகள், பள்ளர்களிடையே வழங்கும் சமூகப் பழக்க வழக்கங்கள், மரபுகள், சடங்குகள், குடும்ப வாழ்வியல் முறைகள் முதலான பல்வேறு செய்திகளை அறிய முடிகின்றது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓரளவு பாடுபொருள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அரசன் இறைவன் ஆகியோரைத் தலைமக்களாகக் கொண்டு இலக்கியங்கள் பாடப்பெற்றன. பள்ளு இலக்கியம் சமூக அடிமட்ட மக்களைத் தலைவர்களாக மாற்றியது.

இந்தப் பாடத்தில் தமிழில் சிறந்து விளங்கும் பள்ளு இலக்கிய வகைமை பற்றிய செய்திகளை நாம் அறிய இருக்கிறோம்.