6.2
பல்லவர் கோயில் ஓவியங்கள்
|
தமிழ்நாட்டில்
இன்று கண்ணில் காணத் தக்க பழமையான
ஓவியங்கள்
பல்லவர்
காலத்தவையாகும். கி.பி.ஏழாம்
நூற்றாண்டில் ஆட்சி புரிந்த
மகேந்திர வர்மன் சித்திரக்
கலையில் சிறந்தவனாக
விளங்கியுள்ளான். இவனுக்குச்
சித்திரகாரப் புலி என்ற
பட்டப் பெயர் இருந்துள்ளது
தட்சிண சித்திரம் என்ற பழமையான
ஓவிய நூல் ஒன்றிற்கு
மகேந்திரன் உரையெழுதியதாக
மாமண்டூர் மகேந்திர வர்மன்
கல்வெட்டுக் கூறுகிறது. மகேந்திர
வர்மன் தான் தோற்றுவித்த
குடைவரைக் கோயில்களின் சுவர்களில் வண்ண
ஓவியங்களைத்
தீட்டச் செய்துள்ளான். இதற்குச்
சான்றாக மாமண்டூரிலுள்ள
மகேந்திர வர்மன்
குடைவரைக் கோயிலில் ஓவியங்கள்
இருந்தமைக்கான
அடையாளங்கள் காணப்
படுகின்றன.
ஆனால் அவற்றில் உருவங்கள்
எதுவும் புலப்படவில்லை.
மகேந்திர பல்லவனை
அடுத்து, கி.பி.எட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் ஆட்சி
புரிந்த இராசசிம்ம பல்லவன்
(கி.பி.690-730) எடுப்பித்த காஞ்சி
கயிலாச நாதர் கோயில்,
பனமலை தாள
கிரீசுவரர் சிவன் கோயில்
ஆகியவற்றில்
ஓவியங்கள் காணப் படுகின்றன. |
காஞ்சி
கயிலாச நாதர் கோயிலின்
திருச்சுற்றில் பல
அழகிய சிற்றாலயங்கள் உள்ளன. இவற்றின்
அகச்சுவர்களிலும்
புறச்சுவர்களிலும் வண்ண ஓவியங்கள்
இராசசிம்மன் காலத்தில்
தீட்டப் பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பகுதி
அழிந்து
போய்விட்டன. சில காட்சிகள்
மட்டும் இன்று காணத் தக்க
நிலையில் எஞ்சியுள்ளன. காஞ்சி
கயிலாச நாதர் கோயிலில்
இருந்த பல்லவர்
ஓவியங்கள் மீது
கி.பி.பதின்மூன்றாம்
நூற்றாண்டில் ஓவியங்கள் தீட்டப்
பட்டுள்ளன. அவற்றின் மீது
கி.பி.14-15 ஆம்
நூற்றாண்டில்
விசயநகர வேந்தர்
காலத்தில் மீண்டும்
ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன.
பல்லவர் கால கயிலாச நாதர்
கோயில் ஓவியங்கள் மீது
அவற்றின்
பழமையைப்
போற்றாது, பிற்காலத்தார்
அழிவுச் செயலில்
ஈடுபட்டுள்ளனர். சோழர், விசயநகர
வேந்தர் காலத்து
ஓவியங்களை வேதியியல்
முறையில்
அகற்றி, அவற்றின்
அடியில் இருந்த பல்லவர்
காலத்து
ஓவியங்களை, அண்மைக்
காலத்தில் மத்திய தொல்லியல்
துறையினர் மீட்டனர் என்பது
குறிப்பிடத் தக்கது. |
|
காஞ்சி
கயிலாச நாதர் கோயிலின் தென்புற,
மேற்புறச்
சிற்றாலயங்களில் இராச சிம்மன்
காலத்தில் வரையப் பட்ட
சில தெய்வ உருவங்களைக் காண
முடிகிறது. தென்புறச்
சிற்றாலயத்தின் உட்புறச்
சுவர் ஒன்றில், சிவன், கந்தன்,
உமை சேர்ந்திருக்கும்
சோமாஸ் கந்தர் உருவம்
காட்சியளிக்கிறது. இவ்வுருவத்தின் பல
பகுதிகள் அழிவுக்கு
ஆளாகி இன்று இல்லாமல் போனாலும்,
எஞ்சிய பகுதிகள்
பல்லவர் ஓவியக் கலையின்
பேரெழுச்சியைக் காட்டுவனவாக
உள்ளன. பீடம் ஒன்றின்
வலப்புறத்தில் சுகாசனத்தில்
சிவபெருமான்
அமர்ந்துள்ளார்.
இடப் புறத்தில்
உமை அமர்ந்துள்ளாள்
அன்னையின் பாசப் பரிவுடன்.
அவளது மடியில்
கந்தன் அமர்ந்துள்ளான்.
சிவனது
அடியில் சிவகணம் ஒன்று
பக்திப் பரவசத்துடன்
அமர்ந்துள்ளது. பார்வதியின் பக்கத்தில்
அவளது அடியவள்
ஒருத்தி காட்சியளிக்கின்றாள்.
சோமாஸ் கந்தரின் உருவம்
இன்று துண்டு துணுக்குகளாக
இருந்தபோதிலும் அதனை
வரையறுக்கும் வரிகள் வியப்பு
மிக்க வீச்சைக் காட்டப்
போதுமானவை என்று கலை
வரலாற்றாசிரியர் க.சிவராம
மூர்த்தி கருதுகின்றார். |
|
கயிலாச
நாதர் கோயிலின் மேற்புறச்
சிற்றாலயத்தின்
புறச்சுவர்களில் கம்பீரமாக
அமர்ந்த நிலையில் விளங்கும்
நான்முகனின் வண்ணவுருவம்
காட்சியளிக்கிறது. இதன்
எதிர்ப்புற முள்ள சிற்றாலயப்
புறச்சுவரில் சிவபெருமான்
யோக மூர்த்தியாக
யோகாசனத்தில் அமர்ந்துள்ள வண்ணக்
கோலம் காணப்படுகிறது.
அதன் அருகில் கின்னரப்
பறவைகளின் உருவங்களும் காணப்படுகின்றன.
கயிலாச நாதர்
கோயில் சிற்பங்கள்
மீது வெண்சுதை பூசப்பட்டு
அவற்றில்
வண்ணம் பூசப்பட்டமைக்கு
அடையாளங்கள்
உள்ளன.
சிற்பங்களின்
உணர்ச்சிகளுக்கு ஏற்பவும்
ஆடை அணிகலன்களின்
சிறப்பை உணர்த்தவும்
இவ்வோவியப் பூச்சுகள்
தரப்பட்டுள்ளன. இன்றும் கயிலாச
நாதர் கோயில் சிற்பங்கள்
சிலவற்றின் மீது இதனைக் காண
முடிகிறது. |
இராசசிம்மன்
கட்டிய கட்டடக்
கோயில்களில் மற்றொரு
சிறப்பு மிக்க கோயில் செஞ்சிப்
பகுதியிலுள்ள பனமலைச்
சிவன் கோயிலாகும்.
இக்கோயிலிலுள்ள சிற்றாலயத்தின்
பின்புறச் சுவரில் இம்மன்னன்
காலத்து ஓவியம் உள்ளது. |
|
சிவனது தாண்டவத்தைக் கண்டு தன்னை மறந்து ஆட்டத்தில் ஆழ்ந்து நிற்கும் பார்வதியின் உருவம் மட்டும் ஓவியமாக இன்று இக்கோயிலில் எஞ்சி நிற்கிறது. தொங்கல்கள் நிறைந்த விளிம்புகளைக் கொண்ட அழகான வண்ணக் குடையின் கீழே ஒரு காலை மடித்துச் சுவரில் வைத்து மற்றொரு காலைத் தரையில் ஊன்றிப் பார்வதி நிற்கிறாள். வேலைப்பாடு மிக்க மகுடம் அணிந்த தலை வலப்புறம் சாய்ந்துள்ளது. ஆட்டத்தில் ஆழ்ந்து போன நீண்ட கண்கள், வில்போன்ற புருவங்கள், கழுத்திலணிந்த ஆபரணங்கள், பூவேலை மிக்க இடையாடை ஆகியவை பார்வதியின் எழிற் கோலத்தை எடுப்பாகக் காட்டுகின்றன. பல்லவர் காலத்து அரச மகளிரின் எழிற்கோலத்தை இவ்வோவியம் காட்டுகிறது. |