குரவம்

97. பாலை
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
5
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
10
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
15
ஆழல்' என்றி தோழி! யாழ என்
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
20
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

237.பாலை
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப,
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ,
5
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து
இன்னா கழியும் கங்குல்' என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை
10
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு,
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு,
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும்,
15
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார்