அழித்து, அவ்விரவில் இறைவியோடு தனித்திருந்து திருக்கூத்தியற்றி,
மீண்டும் உலகைப் படைக்கும் சங்கற்பராயினர்.
உலகமெல்லாம் அழிந்தும் அழியாது தன்காப்பில் விளங்கும் காஞ்சியில்
சோதிலிங்கமாக வெளிநின்று தமது சத்தியால் முன்போல விளங்க
உலகங்களையும் உலகிடைப் பொருள்களையும் சிருட்டித்தனர். அச்சோதி
லிங்கத்தைப் பிரமன் சரசுவதியுடன் வணங்கிப் படைப்புத் தொழிலிற்
றலைமை பெற்றான்.
முன்னொரு கற்பத்திற் றேவர்கள் பாற்கடலைக் கடைவுழித் திருமால்
ஆமையாய் மந்தர மலையைத் தாங்கி அமுதம் கண்டு உபகரித்தமையால்
செருக்குக் கொண்டு உலகம் அழியுமாறு கடலைக் கலக்குகையில் உயிர்களின்
அச்சம் கெடவும், திருமால் அகந்தை நீங்கி அறிவுறவும் அவ்வாமையை
அழித்து அதன் ஓட்டினை வெண்டலை மாலையிடையே கோத்தணிந்தனர்.
திருமால் குற்றம் நீங்கிச் சோதிலிங்கத்தை வழிபாடு செய்து
மெய்யன்பும், வைகுந்த பதவியும் அவர் அருள்செய்யப் பெற்றனர்.
அச்சிவலிங்கத்திற்குக் ‘கச்சபேசன்’ என்னும் திருப்பெயர் விளங்கவும்,
என்றும் அதன்கண் விளங்கவும், காசியினும் அவ்விடம் சிறப்புறவும் வரம்
வேண்டிய திருமாலுக்குச் சிவபெருமான் அவற்றை வழங்கினர். கச்சபேசப் பெருமானை எண்ணினோரும் சென்று கண்டவரும்
இவ்வுலகத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெற்று முடிவில் முத்தியையும்
பெறுவர்.
அக்கச்சபேசப் பெருமானைத் துர்க்கை, ஐயனார், சூரியன் வயிரவர்,
விநாயகர் இவர்களும் வழிபட்டு அத்திருநகரைக் காவல் செய்வாராயினர்.
கச்சபேசருக்குத் தென்மேற்கில் திருமால் பூசித்த ‘சத்தியமொழி
விநாயகர்’ வீற்றிருக்கின்றனர். அப்பெருமானை வணங்கினவர்கள்
எப்படிப்பட்ட இடையூறுகளும் தவிர்ந்து விரும்பிய பயனைப் பெறுவார்கள்.
பணாதரேசம்: கருடன் சிவபிரானை வணங்கிப் பெற்ற பேற்றினால் தம்
குலத்தை அழிக்கக் கண்ட பாம்புகள் வேகவதியின் வடகரையில் ஆதீபி
தேசத்திற்குத் தெற்கில் பணாதரேசப் பெருமானைத் தாபித்துப் பூசித்துத் தம்
குறை தீர வேண்டப், பெருமானார் தமது திருமேனியில் அவற்றை
அணிகலமாகத் தரித்துக் கொண்டனர். திருமாலுடன் வந்த கருடனை
இறைவன் திருமேனியிலுள்ள பாம்புகள் ‘ஏன் கருடா சுகமோ’ என வினவின.
இஃது உலகிற் பழமொழியாகவும் விளங்கும். சிறியர் சார்பினை விடுத்துப்
பெரியோரைச் சார்தல் வன்மை தரும் என்பது பெறப்படும். இத்தலம்
ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு அணித்தாக வடக்கில் உள்ளது.
|