கற்பியல்

இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், கற்பியல் என்னும் பெயர்த்து. கற்புக்கு இலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். கற்பென்பது யாதோவெனின், அஃதாமாறு இச்சூத்திரத்தில் விளங்கும்.

140கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே.

என்பது சூத்திரம்.

இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் கற்பிலக்கணம் கூறுதல் நுதலிற்று.

கற்பென்று சொல்லப்படுவது. கரணத்தொடு பொருந்திக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழத்தியைக் கொடுத்தற்குரிய மரபினை யுடையார் கொடுப்பக் கொள்வது என்றவாறு.

`கொளற்குரிய மரபின்' என்பதனைக் `கிழத்தி' என்பதனோடுங் கூட்டி யுரைக்க.

களவின்கண் ஒத்தாரிருவர் வேட்கை மிகுதியாற்கூடி ஒழுகிய வழிக் கரணத்தின் அமையாது இல்லறம் நடத்தலாமோ எனின் அஃதாகா தென்றற்குக் `கரணமொடு புணர' என்றார். கரணம் என்பது - வதுவைச் சடங்கு. `கொளற்குரி மரபிற் கிழவோன். என்றதனால் ஒத்த குலத்தானும் உயர்ந்த குலத்தானும் என்று கொள்க. `கொளற்குரி மரபிற் கிழத்தி' யென்றதனால், ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளும் என்று கொள்க. `கொடைக்குரி மரபினோர்' என்றதனால், தந்தையும் தாயும் தன்னையரும் மாதுலனும் இவரில்லாதவழிச் சான்றோரும் தெய்வமும் என்று கொள்க. கொடுப்பக் கொள்வது கற்பு என்றமையால், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும், களவு வெளிப்படாத வழியும், மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளப் புணர்ச்சியான் உரிமைபூண்ட வழியும் கொள்ளப் பெறும் எனக் கொள்க . களவியற் சூத்திரத்துள்,

"இன்பமும் பொருளு மறனு மென்றாங்
கன்பொடு புணர்ந்த".

(களவியல்-1)

என்பதனைத் தந்துரைத்து, ஐந்திணை மருங்கிற் கற்பெனப்படுவது எனக் கூட்டுக.

அஃதேல், கொடுப்பக் கொள்வது கற்பாயின் பிரமம் முதலிய எண் வகையும் கொள்க. `கொடுப்போ ரின்றியும் கரண முண்டே-புணர்ந்துடன் போகிய காலை யான' என்னும் இது கற்பாகுமோ எனின், அவையும் கற்பாதல் ஒக்குமேனும் கந்திருவம்போல ஒத்த அன்புடையார் ஆகல் ஒருதலையன்மையின் கைக்கிளை பெருந்திணைப்பாற் படும் . ஈண்டு ஐந்திணை தழுவிய அகத்திணையே களவு கற்பு எனப் பகுத்தார் என்று கொள்க.

(1)