பக்கம் எண் : 26
  

பதிப்புரை
 

தரப்பட்ட ஆணை யாண்டையது என்க.” (இல. சூறா. பக். 129) என்று இம்முறையை
வினாக்கணை தொடுத்து விமர்சிப்பார்.

     “நன்னூலுக்குச் சைனர் உரை என்று ஒன்று உண்டு; அது பயனற்றது.”
என்பதும்28 மயிலைநாதர் உரை நன்னூலுக்குத் தகுதியான உரை அல்ல என்பதால்
சாமிநாத தேசிகர் அவ்வுரையின் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதும்29 ஆதீன
வட்டத்தில் வழங்கிய கதைகளாக இருக்க வேண்டும். சமயக் காழ்ப்பு காரணமாக
எழுந்திருக்கக் கூடிய இவற்றை உறுதிப்படுத்தும் சான்றுகளை எந்த இலக்கண நூலும்
வழங்கவில்லை. சைனர் உரையைப் பற்றிச் சாமிநாத தேசிகர் தமது நூலில் எந்த
இடத்திலும்30 குறிப்பிடவில்லை. மயிலைநாதர் உரையை அவர் தமது நூலில் மறுக்கவும்
இல்லை. அதற்கு முற்றிலும் மாறானது உண்மை. சாமிநாத தேசிகர் மயிலைநாதரை ஏற்று
மதித்திருக்கிறார்; அதனால்தான் அவர் தமது நூலில் இரண்டு இடங்களில் மயிலைநாதர்
உரையைக் குறித்துள்ளார். வினைமுற்று எச்சம் ஆவதை விளக்கும் பகுதியில் “ஏனை
மூன்றும் நன்னூலில், “வினைமுற் றேவினை யெச்சமாகலும்”
(நன். 351) என்னும்
சூத்திரத்தில் காட்டிய உதாரணங்களால் அறிக.”
(இல. கொ. 82 உரை) என்றும்
ஒரு தொடர், பல தொடர் என்பவற்றை விளக்கும் பகுதியில், “வினைமுற் றேவினை
யெச்ச மாகலும்”
(நன். 351) என்னும் சூத்திரத்தில், “கானவ ரிரிய” (சீவக. 452)
என்னும் செய்யுளில் காண்க.”
(இல. கொ. 124 உரை) என்றும் சாமிநாத தேசிகர்
மயிலைநாதர் உரையைக் குறிப்பிட்டுள்ளார்.

     இவற்றை எல்லாம் ஒருங்கு வைத்து நோக்கினால் சாமிநாத தேசிகரால்
(இல. கொ. 8 உரை) மறுக்கப்படுவது இலக்கண விளக்க உரை; “முதல் தனிவரிற
சுட்டே”
(நன். 66) என்னும் தொடருக்கு, “மொழி முதற்கண் தனித்து வரின் சுட்டு”
என்று இலக்கண விளக்க உரையில் (நூ. 6) வைத்தியநாத தேசிகர் வழங்கியுள்ள
உரையே என்பது உறுதி. அத்தொடருக்கு இவ்வாறு அவர் உரை கொண்டதற்கு
மயிலைநாதருடைய உரையும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். என்றாலும்
சாமிநாததேசிகரால் மறுக்கப்படுவது மயிலைநாதரின் உரை அல்ல. மயிலைநாதர்
உரையின் மீது சாமிநாத தேசிகர் வெறுப்புணர்வு கொண்டிருந்தார் என்று
மெய்ப்பிக்கவும்
-----------------------
     28சாமிநாதையர், 1918. முகவுரை பக். ii.
     29சாமிநாதையர், 1925. பக். 20.
     30மயிலைநாதர் உரையிலிருந்து வேறுபட்டதொரு சமணர் உரையைச்
சாமிநாத தேசிகர் குறிப்பிடுகிறார் (க. ப. அறவாணன், 1977. பக். 99) என்னும்
புதுக் கருத்துக்கும் இலக்கணக் கொத்தில் சான்று இல்லை. கி. நாச்சிமுத்து
இக்கருத்தை முன்பே (1986. பக். 51-52) மறுத்துள்ளார்.