பக்கம் எண் : 27
  

பதிப்புரை
 

இலக்கணக் கொத்தில் சான்றுகள் இல்லை. மாறாக, மயிலைநாதர் உரையைத் தேசிகர்
மதித்துள்ளார் என்பதை நிறுவ அவர் நூலில் சான்றுகள் உண்டு. எனவே நன்னூலுக்குப்
புதிய உரை ஒன்றை இயற்றுமாறு சங்கர நமச்சிவாயரைச் சாமிநாத தேசிகர்
தூண்டியிருந்தால்31 அதற்கு எந்த வெறுப்புணர்வும் காரணம் அல்ல என்று துணிந்து
கூறலாம்.
 

ஆண்டிப் புலவர்
 

     மயிலைநாதருக்குப் பிறகு பதினாறாம் நூற்றாண்டில் நன்னூலுக்கு ஒரு உரை
எழுந்ததாகத் தெரிகிறது. ஆசிரிய நிகண்டை இயற்றிய ஆண்டிப் புலவர் இந்தப்
புதுவகை உரையின் ஆசிரியர். செய்யுள் நடையில்32 இயன்ற இவ்வுரை
ஆசிரியவிருத்தத்தில் அமைந்தது. ‘நன்னூல் ஆசிரிய விருத்தம்’ என்றும், ‘உரையறி
நன்னூல்’
என்றும்33 இது வழங்கப்பட்டது. ஆசிரிய நிகண்டின் பாயிரப் பகுதியே
இந்தச் செய்திகளுக்கு எல்லாம் ஆதாரம். ஆண்டிப் புலவரின் உரை நன்னூல்
முழுமைக்கும் கிடைக்கவில்லை. “செம்மை சிறுமை” என்னும் நூற்பாவின் (நன். 135)
உரையாக அமைந்த ஒரே ஒரு ஆசிரிய விருத்தம் அவருடைய உரைக்கு
உரைகல்போல நின்று நிலவுகிறது.
 

சங்கர நமச்சிவாயர்


     இலக்கண வரலாற்றில் பதினேழாம் நூற்றாண்டு சிறப்பு வாய்ந்தது. இந்த
நூற்றாண்டில்தான் இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து
முதலியன இலக்கண நூல்கள் தோன்றின. தொகுப்பு நூல் எனினும் இந்நூற்றாண்டில்
தோன்றிய இலக்கண விளக்கம் ஒன்றே நன்னூலுக்குப் பின் வந்த வரலாற்று
முறைத்தமிழ் இலக்கணம். அது மட்டும் அல்ல. நன்னூலுக்குத் தலைசிறந்த உரை
தோன்றியதும் இந்த நூற்றாண்டே. மூலநூலைப் போலவே தோன்றிய காலம் தொட்டு
விரும்பிக் கற்கப்படும் இந்த உரையை இயற்றி அருளியவர் சங்கர நமச்சிவாயப் புலவர்.
அவர் திருநெல்வேலியினர்; சைவ வேளாள மரபினர்; இலக்கணக் கொத்தை இயற்றிய
சாமிநாத தேசிகரின் தலைமாணாக்கர். அவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை
முறையாகப் பாடம் கேட்டவர்; தொல்காப்பிய உரைகளை ஊன்றிக் கற்றவர்;
உரைமரபுகளை உணர்ந்தவர். தம்முடைய ஆசிரியர் நன்னூல் மீது கொண்டிருந்த
மதிப்பை
----------------------------
     31நன்னூலுக்கு உரை எழுதுமாறு சாமிநாத தேசிகர் சங்கர நமச்சிவாயரைத்
தூண்டினார் என்பதற்கு நூல்வழிச் சான்று இல்லை.
     32அகநானூற்றுக்கும் செய்யுள் நடையில் அமைந்த உரை ஒன்று
இருந்ததாகக் (மு. அருணாசலம், 1970. பக். 114-115) கூறப்படுகிறது.
     33சோம. இளவரசு, இலக்கண வரலாறு, சிதம்பரம், 1963. பக். 143.