பக்கம் எண் : 28
  

பதிப்புரை
 

அருகில் இருந்து கண்டவர். மயிலைநாதர் உரையையும் இலக்கண விளக்கத்தில் தாம்
எடுத்தாண்ட நன்னூல் நூற்பாக்களுக்கு மயிலைநாதர் உரையைத் தழுவி
வைத்தியநாததேசிகர் வரைந்திருந்த உரையையும் சங்கர நமச்சிவாயர் கற்றுத்
தேர்ந்தவர். அதனால் அவற்றின் நிறை குறைகளை அவர் நன்றாக அறிந்திருந்தார்.
எனவே நன்னூலுக்குப் புதிய உரை ஒன்றை இயற்றும் எண்ணம்34 இளமையிலேயே
அவருக்கு அரும்பியிருக்க வேண்டும். அந்த எண்ணத்துக்கு அவருடைய ஆசிரியரும்
ஊக்கம் அளித்திருக்கக் கூடும். அனைத்திற்கும் மேலாக, மருதப்பன் என்னும்
ஊற்றுமலைப் புரவலர்,
 
     “நன்னூற் குரைநீ நவையறச் செய்து
பன்னூற் புலவர்முன் பகர்தி”
 
என்று (பாயிர உரை) அவரைக் கேட்டுக்கொண்டார். இவ்வாறு கல்விச் சூழலும் புலவர்
தொடர்பும் புலவலர் அரவணைப்பும் சங்கர நமச்சிவாயப் புலவருக்கு ஒருங்கே
வாய்ததிருந்தன. அதனால் அவருடைய எண்ணம் ஈடேறியது; புலமை புலப்பட்டது;
நன்னூலுக்கு நல்லதொரு விருத்தியுரை அமைந்தது.

     சங்கர நமச்சிவாயர் உரையே நன்னூலுக்கு எழுந்த உரைகளுள் சிறந்தது என்பதில்
இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. அவர் உரை மூலநூலின் உட்பொருளை
முழுமையாக விளக்கத் தக்கது; அழகான உரைநடையில் அமைந்தது; தெளிவான
பொழிப்புரை, கருத்தாழம் மிக்க நயவுரைப் பகுதிகள், பொருத்தமான உதாரணப்
பாடல்கள், தருக்கநெறி தவறாத வினாவிடைகள், மனதில் நிற்கும் உவமைகள், மாற்றார்
மதிக்கும் மறுப்புரைகள் முதலிய விருத்தியுரைப் பண்புகளைக் கொண்ட பேருரை.
எனவே அவருடைய உரையைத் தமிழுலகு இருகை ஏந்தி ஏற்றுக்கொண்டது; தமிழ்
மாணவர்கள் விரும்பிக் கற்றனர். சிவஞான முனிவரைப் போன்ற ஆசிரியர்கள் அவர்
உரையைக் கற்பித்துச் சுவை கண்டனர்; பயன் கொண்டனர்.

     இலக்கண நூல்கள் கூறும் விருத்தியுரைப் பண்புகள் அனைத்தும் அவருடைய
உரையில், ஒவ்வொரு நூற்பாவுக்கும் அமைந்துள்ளன என்று சொல்ல முடியாது.
என்றாலும் உரை நெடுக இப்பண்புகள் விரவிக் கிடப்பது உண்மை. உதாரணத்துக்கு,
“ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கும்” (நன். 291) என்ற நூற்பாவைக் குறிப்பிடலாம்.
சூத்திரக் கிடக்கை முறையில் அமைந்த பொழிப்புரை, முன்னும் பின்னும் உள்ள
நூற்பாக்களோடு இந்நூற்பா கொண்டுள்ள பொருளியைபு, நூற்பாவின் தொடரியல்
-------------------------
     34இலக்கண விளக்கத்தைத் தாழ்வுபடுத்தும் குறுகிய நோக்கத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தார் நன்னூலுக்குப் புதிய உரை எழுதுமாறு சங்கர நமச்சிவாயரைத் தூண்டினர் (சி. வை. தாமோதரம் பிள்ளை, 1889. பதிப்புரை பக். 7) என்றும் சொல்லப்படுகிறது.