பக்கம் எண் : 29
  

பதிப்புரை
 

முடிபு, மூலபாடச் சொற்களில் புதைந்துள்ள பொருளை விளக்கும் நயவுரை, பிறநூல்
கோட்பாடுகள், வேறுரை, மறுப்புரை முதலிய உரை உறுப்புகள் இந்நூற்பாவின்
உரையில் ஒட்டு மொத்தமாக அமைந்துள்ளன. சங்கர நமச்சிவாயர் உரையை உணர்ந்து
படிப்போர்க்கு இத்தகைய உரைப் பகுதிகள் தேடாமலே கிடைக்கும்.

     சங்கர நமச்சிவாயரின் உரைநடை இயல்பானது. அவருடைய பொழிப்புரைக்குத்
தெளிவூட்டுவது இந்த நடையே. பொதுவாக அவரது பொழிப்புரை நூற்பாவின்
சொற்கிடக்கை முறையிலேயே அமையும். நூற்பாவின் கிடக்கை முறைக்கு மாறாகச் சொற்றொடர்களை மாற்றிப் பொழிப்புரை எழுதுவதை அவர் இயன்ற வரையில் தவிர்ப்பார்.
இன்றியமையாத இடங்களில் மட்டும் அவர் சொல் வருவித்து எழுதுவார். தாம
வருவிக்கும் சொற்களுக்கு அவர் விளக்கம் கூறத் தவறமாட்டார். காட்டாக,
“அன்ஆன் அள்ஆள்” (நன். 140) என்னும் நூற்பாவில் வினையின் விகுதி என்ற
தொடருக்குத் தெரிநிலை வினையின் விகுதிகள் என்று அவர் சொல் வருவித்துப்
பொருள் கூறுவார். அவ்வாறு தாம் வருவித்த சொல்லுக்குப் “பெயரினுஞ் சில என்ற
மாத்திரையின் குறிப்புவினையினும் சில என்பது கூறாதே அமைதலின் இங்ஙனம் வினை
என்றது அவ்விரண்டும் ஒழிந்த தெரிநிலைவினை என்பது பெற்றாம்.” என்று அவர்
காரணம் காட்டி விளக்குவார்.

     மூலபாடத்தில் அமைந்துள்ள சொற்களுக்கு நயவுரை கூறி விளக்குவதில்
சங்கர நமச்சிவாயர் வல்லவர். “பதசாரம் எழுதுவதில் இவருக்கு யாரும் இணை
இல்லை”
என்று தண்டபாணி தேசிகரும் (1957. முகவுரை பக். 23) இதனை உணர்ந்து
எழுதுவார். சொல்லதிகாரத்தின் முதல் நூற்பாவுக்குத், “தோன்றி அழியும் மாலைய
என்பார், ‘சகம்’ என்றும் உலகமே உருவம் ஆயினான் உயிர் இன்புறுவதே
தான் இன்புறுவது என்பார் அக்கடவுள் முடிமேல் நிழற்றும் குடையை
முச்சகத்திற்கும், ‘நிழற்றும்’ என்றும் நிறைந்த தண்ணளியை உடையன் என்பார்
அதனை உவமை முகத்தால் குடைமேல் வைத்து, ‘முழுமதி முக்குடை’ என்றும்
சுதந்திரமின்றித் தோன்றி அழியும் உயிரும் பிறவும் ஆகிய சகத்திற்கு அவ்வாறு
தோன்றி அழியான் தலைவனாக வேண்டும் என்பார், ‘அச்சுதன்’ என்றும் நம்
செயல் அன்று என்பார், ‘அடிதொழு தறைகுவன்’ என்றும் வரையறைப்படாத
பெருமையை உடையது என்பார் அவ்வாற்றல் தோன்றச், ‘சொல்’ என்றும்
கூறினார்.”
(நன். 258) என்று அவர் வரையும் நயவுரை இதற்கு நல்ல உதாரணம். இது
போன்ற நயவுரைப் பகுதிகளை அவர் உரையில் பல இடங்களில் (நன். 265, 289, 291,
348, 351) காணலாம்.