| பதிப்புரை | சங்கர நமச்சிவாயர் தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஆழ்ந்து கற்றவர். அவருடைய இலக்கியப் பயிற்சி இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்ற தொல்காப்பிய உரையாசிரியர்களோடு ஒருங்கு வைத்து எண்ணத் தக்கது. சங்க இலக்கியங்கள், கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், திருமுறைகள், தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களிலிருந்து பொருத்தமான மேற்கோள்களை அவர் எடுத்தாளுவார். இத்தகைய நூற்பயிற்சி ஒரு நல்ல உரையாசிரியனின் அடிப்படைத் தகுதி என்பதையும் உதாரணமும் ஆசிரிய வசனமும் உரையின் இருகண்கள் என்பதையும் சங்கர நமச்சிவாயர் நன்றாக அறிவார். ஆகவே சிறந்த உதாரணப் பாடல்களால் தமது உரையை அவர் அழகுபடுத்தியுள்ளார். ஒரு நூலின் பல பாடல்களை ஒரு நூற்பாவிலும் ஒரே பாடலை ஒன்றுக்கு மேற்பட்ட சூத்திரங்களிலும் எடுத்துக்காட்டுவது, இசையெச்சத்தை விளக்கும் பகுதியில் (நன். 360) குறட்பாவுக்கு விரிவுரை கூறுவது முதலியவற்றால் இலக்கிய உதாரணங்களுக்கு அவர் சிறப்பிடம் கொடுப்பது தெரிய வரும். அவருடைய உதாரணங்களில் பெரும்பாலானவை அகநானூறு, புறநானூறு, திருக்குறள், நாலடியார், சீவக சிந்தாமணி போன்ற நூல்களைச் சார்ந்தன. இன்னொரு கருத்தும் இங்கே கருதப்பட வேண்டும். கருத்து விளக்கத்துக்கும் ஒப்புமைக்கும் இலக்கண உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் எண்ணற்ற உதாரணப் பாடல்களையும் நூற்பாக்களையும் மேற்கோள் காட்டுவது உரைமரபு. ஆனால் ஒரு உரையாசிரியர் எடுத்தாளும் மேற்கோள்கள் அனைத்தையும் அவரே மூலநூல்களை நேரில் பார்த்து எடுத்துக்காட்டியதாகக் கொள்ள முடியாது; கொள்ளவும் கூடாது. களவியல் உரையாசிரியர், இளம்பூரணர் போன்ற பழைய உரையாசிரியர்களைத் தவிர மயிலைநாதர் உள்ளிட்ட பிற உரையாசிரியர்கள் எல்லோரும் தாம் காட்ட வேண்டிய மேற்கோள்களைப் பழைய உரைகளிலிருந்தும் வாரிக்கொண்டனர். உதாரணம் கருத்தை விளக்க உதவும் கருவி. உரைக்குத் தெளிவும் சுவையும் தருவதால் காரணம் இல்லாமல் உரையாசிரியர்கள் உதாரணங்களை மாற்றுவதில்லை. மாற்றுவதால் உரையின் தெளிவு குறையலாம்; உரையைப் பிறழ உணரும் வாய்ப்பு ஏற்படலாம். அதோடு மனப்பாடக் கல்விமுறைக்கும் இம்மாற்றம் உதவாது. எனவே ஒருவர் காட்டிய உதாரணங்களையே வேறொரு உரையாசிரியரும் காட்டுவதுண்டு. இது வழிவழியாக வரும் மரபு. எல்லா இலக்கணக் கருத்துகளுக்கும் ஏற்ற உதாரணங்கள் கிடைப்பதில்லை. காட்டாக உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை இலக்கியத்தில் | |
|
|