பக்கம் எண் : 31
  

பதிப்புரை
 

அருகி வருவதால் அதற்கு உதாரணம் கிடைப்பது அரிது. எனவே, ‘தகரஞாழல்’
என்று இளம்பூரணர் (தொல். எச்ச. 22 உரை) அதற்கு எடுத்துக்காட்டிய ஒரு
உதாரணத்தையே35 உரையாசிரியர்கள் பலரும் எடுத்துக்காட்டுவார்கள். ஆகவே ஒரு
உரையில் உள்ள நல்ல உதாரணங்களை இன்னொரு உரையாசிரியர் எடுத்தாளும்
உரைநெறி புதிது அல்ல. சங்கர நமச்சிவாயரும் இந்த நெறியைப் பின்பற்றியவரே.
செய்யுளுக்கு வரையறை கூறும் நூற்பாவில் (நன். 268) சங்கர நமச்சிவாயர் காட்டும்
திருக்கோவையார் பாடல் இலக்கண விளக்கத்தில் (நூ. 169) வைத்தியநாத தேசிகரால்
காட்டப்பட்ட உதாரணம். அதனால் சங்கர நமச்சிவாயர் காட்டியுள்ள செய்யுள், நூற்பா
ஆகிய அனைத்தும் மூலநூல்களிலிருந்து அவரே முயன்று தேடி எடுத்தவை என்று
எண்ணக் கூடாது. மயிலைநாதர் உரையோடு சங்கர நமச்சிவாயர் உரையை
ஒப்பிடுவோர்க்கு இது தெற்றெனத் தெரிந்துவிடும். உதாரணமாக,
“வினைமுற்றேவினை” என்னும் நூற்பாவின் உரையில் மயிலைநாதர் (நூ. 350)
எடுத்துக்காட்டிய முப்பதுக்கு மேற்பட்ட இலக்கிய உதாரணங்களையும் சங்கர
நமச்சிவாயர் தமது உரையில் (நூ. 351) எடுத்தாளுவார். இதுபோல அவர் வேறு சில
இடங்களிலும் (நூ. 440, 441, 457, 458, 459) மயிலைநாதர் காட்டிய உதாரணங்களைத்
தழுவிக்கொள்வார்.

     இந்த உண்மையை அறவே எண்ணிப் பார்க்காமல், சங்கர நமச்சிவாயர் உரையில்
உள்ள மேற்கோள்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, அவர் காலத்தில் வழங்கிய
நூல்கள், வழக்கங்கள் முதலியவற்றை எல்லாம் ஆராய முற்படக் கூடாது. காட்டாகச
சங்கர நமச்சிவாயர் பத்து அகத்தியச் சூத்திரங்களைத் தம்முடைய உரையில் (நன். 260,
265, 291, 295, 297, 300, 323, 327, 340, 342) எடுத்தாளுகிறார். “இதனால் இவர்
காலத்தில் அகத்தியம் என்ற பெயரில் ஓர் இலக்கண நூல் உலாவி இருக்கிறது
என்பதுவும் அவ்விலக்கண நூலை இவர் துறைபோகக் கற்றிருக்கிறார் என்பதுவும்
புலனாகின்றன.”
என்று கூறுவது36 பொருந்தாது. இந்த அகத்தியச் சூத்திரங்கள் பத்தும்
மயிலைநாதரால் எடுத்தாளப்பட்டவை. அவர் எடுத்தாளாத அகத்தியச் சூத்திரம்
ஒன்றைக் கூடச் சங்கர நமச்சிவாயர் எடுத்தாளவில்லை. எனவே சங்கர நமச்சிவாயர்
இச்சூத்திரங்களை எல்லாம் அகத்தியத்தைப் பார்த்து எடுத்துக்காட்டினார் என்பதை
விடப் பழைய உரையாகிய மயிலைநாதர் உரையிலிருந்து எடுத்திருப்பார் என்று
கொள்வதே ஏற்புடையது. மேலும் 17-ஆம் நூற்றாண்டில் அகத்தியம் வழக்கில்
-----------------------------
     35இக்கருத்து திருக்குறள் மேற்கோள் விளக்கத்தில் (அ. தாமோதரன், ஹைடெல்பெர்க், 1970. பக். 53-54) விளக்கப்பட்டுள்ளது.
     36க.ப. அறவாணன், 1977. பக். 128.