| பதிப்புரை | இருந்தது என்னும் புனைகதையை இலக்கிய வரலாறு ஏற்றுக்கொள்ளாது. உரையின் நடுநடுவே வினா எழுப்பி விடை கூறுவது உரைநெறி. ஆசிரியரும் மாணவரும் நேருக்கு நேர் உரையாடுவது போன்ற உணர்வை உருவாக்கும் இந்த நேரிய முறை சங்கர நமச்சிவாயரின் உரையில் இயல்பாக அமைந்துள்ளது. காட்டாக உத்தியை விளக்கும் இடத்தில், “மதத்தினுள்ளும் அழகினுள்ளும் வருவன சிலவற்றை உத்தியுள்ளும் கூறியது என்னை எனின் கொள்கை வகையான் மதம் என்றும் சிறப்பு வகையான் அழகு என்றும் இம்மதம், அழகு முதலிய எல்லாம் புத்தி நுட்பத்து அமையும் வகையான் உத்தி என்றும் கூறப்படும் என்க. அங்ஙனம் ஆயின் மதம், அழகு எல்லாவற்றையும் உத்தியின்பாற் படுத்துக் கூறாது, சிலவற்றைக் கூறியது என்னை எனின் வரம்பின்றி வரும் உத்தியுள், தலைமைபற்றிக் கூறும் முப்பத்திரண்டில் வந்தன கூறினார் என்க.” (நன். 14) என்று மதம், அழகு, உத்தி ஆகியவற்றை வினாவிடைகளால் அவர் வேறுபடுத்தி விளக்குவதைக் குறிப்பிடலாம். இந்த விளக்க முறையைத் தம்முடைய உரையில் வேறு பல இடங்களிலும் (நன். 109, 152, 153, 156, 161, 162) அவர் கையாளுவார். இலக்கணக் கருத்துகளை அழகான உவமைகளால் சுவைபட விளக்குவது சங்கர நமச்சிவாயருக்குக் கைவந்த கலை. ஆய்தம் உயிர்களோடும் மெய்களோடும் கூடியும் கூடாதும் அலிபோல் நிற்கும் (நன். 60) என்றும் பாலன் விருத்தன் ஆனாற்போலக் குறிலது விகாரமே நெடில் (நன். 72) என்றும் எழுத்தால் அமையும் சொல் மலரால் அமையும் மாலை (நன். 128) என்றும் குடத்தின்கண் மண்போல் வினையாகிய காரியத்தின்கண் முதற்காரணமாகிய செயல் உண்டு (நன். 321) என்றும் அவர் எடுத்துக்காட்டும் உவமைகள்37 நெஞ்சில் நிலைப்பன. சில சமயங்களில் ஒரு இலக்கணக் கருத்தை இன்னொரு கருத்தோடு அவர் ஒப்புமை காட்டுவதும் உண்டு. பண்புப் பகாப் பதங்களின் மைவிகுதியை விளக்கும் இடங்களில் (நன். 135, 136) இம்முறையைக் காணலாம். மெய்யெழுத்து அகரமின்றி இயங்காது; அதுபோலப் பண்புப் பகாப்பதம் மைவிகுதியின்றி இயங்காது. மெய்யோடு உயிர் புணரும் போது அந்த அகரம் நீங்கிவிடும்; அதுபோலப் பண்படியோடு வேறு விகுதி புணரும் போது மைவிகுதி நீங்கிவிடும். இக்கருத்துகளை அவர் தொல்காப்பிய நூற்பாவைச் சான்று காட்டி உவமிப்பது படிப்பவர் நெஞ்சில் பசுமரத்தாணிபோலப் பதிந்துவிடும். ------------------------- 37அவர் உரையில் காணப்படும் உவமைகளைச் சாமிநாதையர் (1935. பக். xxiv) எடுத்துக்காட்டுவார். | |
|
|