பக்கம் எண் : 33
  

பதிப்புரை
 

     சங்கர நமச்சிவாயரின் மறுப்புரை அமைப்பு அவர் உரைநெறியின் மற்றொரு
சிறப்பியல்பு. பிறருடைய உரைகளை மறுக்கும் போது வெவ்வேறு உத்திமுறைகளை
அவர் பயன்படுத்துவார். மூலபாடச் சான்று (நன். 358), மூலநூல் விதிகள் (நன். 254),
நூற்பாக்களின் இயைபு (நன். 124), முதல்நூல் ஆணை (நன். 316), இலக்கிய வழக்கு
(நன். 397), காரணங்களின் தொகுப்பு38 (நன். 398), அழகான உவமைகள் (நன். 152)
முதலியவற்றை எடுத்துக்காட்டி மறுப்பது அவருடைய முறைகளில் சில. என்றாலும்
தம்முடைய ஆசிரியரைப் போலக் கடுமையான நடையை அவர் கையாளவில்லை.
பொருந்தா உரைகளைப் பொருத்தமான உவமைகளால் மறுப்பதற்கு நல்ல உதாரணம்,
“இனைத்தென் றறிபொருள்” (நன். 399) என்னும் பொதுவியல் நூற்பாவின் உரை.
பவளக்கோட்டு நீலயானை போன்ற உலகில் இல்லாப் பொருள் காலத்தோடு பட்டது
அல்ல. அதனால் அதனை வினையோடு சேர்த்துக் கூறும் போது காலப்பெயரோடு
முற்றும்மை கொடுத்துப் பவளக்கோட்டு நீலயானை என்றும் இல்லை என்று கூற
வேண்டும் என்பார் சங்கர நமச்சிவாயர். இவ்வாறன்றிக் காலத்தோடு பட்டதுபோல்
பவளக்கோட்டு நீலயானை பண்டும் இல்லை என்று எச்சவும்மை கொடுத்து மயிலைநாதர்
கூறுவார். அவ்வாறு கூறுவது, “யானை குடத்திலும் இல்லை; குழிசியிலும் இல்லை
என்பது போலும்.”
என்று நகைச்சுவை தோன்றச் சங்கர நமச்சிவாயர் மறுப்பார்.
தொகுத்துச் சொன்னால் சங்கர நமச்சிவாயர் உரை தோன்றியதால் மூலநூல் மேலும்
விளக்கம் பெற்றது; பவணந்தியின் ஆக்கத்திறன் புலப்பட்டது; இலக்கணக் கலை
வளர்ந்தது; உரைநெறி செழித்தது; பழைய உரைமரபு தொடர்ந்தது.

     சங்கர நமச்சிவாயர் உரையோடு தொடர்புள்ள ஒருசில கருத்துகளையும் இங்கே
குறிப்பிட்டாக வேண்டும். தமிழிலக்கணக் கல்வியில் வடமொழியின் செல்வாக்கு
வளர்ந்திருந்த காலத்தில் வாழ்ந்த சங்கர நமச்சிவாயர் சாமிநாத தேசிகரின் மாணவர்.
ஆகவே அவர் வடமொழியை ஓரளவேனும் கற்றிருக்க வாய்ப்பு உண்டு. அவர்
உரையில் (நன். 62, 133, 134, 269) காணப்படும் வடமொழிக் கருத்துகள் இதை
உறுதிப்படுத்தும். என்றாலும், “தமிழ்நூற் பயிற்சி ஒன்றுமே உடையார்” என்று
சிவஞான முனிவர் (நன். 125) அவரிடம்39 குறை காண்பார். சங்கர நமச்சிவாயர் எந்த
வடமொழி நூலுக்கும் வியாக்கியானம் எழுத முற்படவில்லை; ஒப்பியல் நோக்கில்
---------------------------
     38அவர் இம்முறையைத் தம்முடைய ஆசிரியரிடம் கற்றிருக்கக் கூடும்.
பவணந்தி முனிவர் ஓதிய தெரிநிலை விகுதிகள் (நன். 140) சிறப்பு விகுதிகளே
என்று நிறுவுதற்குச் சாமிநாத தேசிகர் பத்துக்கு மேற்பட்ட காரணங்களை
அடுக்கிக் காட்டுவது (இல. கொ. 117 உரை) இக்கருத்தை மெய்ப்பிக்கும்.
     39இவ்வாறே, “தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்”
(தொல். விரு. பக். 46) என்று அவர் இளம்பூரணரிடத்தும் குறை காண்பார்.