பக்கம் எண் : 35
  

பதிப்புரை
 

     தமிழ் உரைமரபை இலக்கண உரை, இலக்கிய உரை, சமயச் சார்பான உரை
என்று மு. அருணாசலம்41 மூன்றாக வகைப்படுத்துகிறார். அப்பகுதியில், “இலக்கிய
இலக்கணப் பேருரைகள் 15-ஆம் நூற்றாண்டோடு நின்றுபோகின்றன. பிறகு
தோன்றியவை யாவும் சிறப்புடைய சைவ சாத்திர உரைகளே அன்றி இலக்கிய
இலக்கண உரைகள் எழவில்லை.”
என்று அவர் முடிவு கூறுகிறார். பதினைந்தாம்
நூற்றாண்டோடு பேருரைகள் நின்றுபோகின்றன என்பதை விடவும் குறைந்துபோகின்றன
என்று முடிவு கூறுவது இன்னும் பொருத்தம். பதினாறாம் நூற்றாண்டில
மாறனலங்காரத்திற்கு மிகச் சிறந்ததோர் இலக்கண உரை தோன்றியதாக அவரே42
கூறியுள்ளார். அடுத்த நூற்றாண்டில் சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு ஒரு பேருரை
இயற்றியுள்ளார். பரிமேலழகர், சேனாவரையர் உரைகளோடு ஒப்பிடத்தக்க சங்கர
நமச்சிவாயரின் நன்னூல் விருத்தியுரையை ஊன்றிப் படித்திருந்தால் அவர் அந்த
முடிவுக்கு வந்திருக்கமாட்டார் என்று தோன்றுகிறது.

     பதினெட்டாம் நூற்றாண்டின் உரைவேந்தர் சிவஞான முனிவர். அவரும் கூட
எந்தப் பழந்தமிழ் இலக்கிய இலக்கணத்துக்கும் முழுமையாக உரை இயற்றவில்லை
என்பதால் 17-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இலக்கிய இலக்கணப் பேருரைகள் எதுவும்
தோன்றவில்லை என்பதே பொருந்தக் கூடியது. ஆகவே எழுநூறு எண்ணூறு
ஆண்டுகளாகத் தமிழில் தழைத்து வளர்ந்த பழைய உரைமரபு சங்கர நமச்சிவாயர்
உரையோடு நின்றுவிட்டது என்பது ஏற்கத் தக்கது. உரை வரலாற்றுக்கும் இம்முடிபே
ஒத்துவரக் கூடியது.

     சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு வரைந்தது விருத்தியுரை. சங்கர நமச்சிவாயர்
இயற்றிச் சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட உரைக்குப் புத்தம் புத்துரை என்ற
சிறப்புப் பெயர் இருந்தாலும் அதையும் விருத்தியுரை என்று அழைப்பது பெருவழக்கு.
புத்தம் புத்துரையில் சங்கர நமச்சிவாயர் உரை எது? சிவஞான முனிவர் திருத்திய
உரைப் பகுதி எது என்று அறியுமாறு அடையாளம் செய்து தண்டபாணி தேசிகர் (1957)
திருத்தமாகப் பதிப்பித்தார். எது யாருடைய உரை என்பதில் அதுவரை இருந்து வந்த
குழப்பம் தேசிகர் பதிப்புக்குப் பிறகு பேரளவில் தீர்ந்தது. ஆனால் அவருக்குப்
பின்னால் நன்னூல் விருத்தியுரையைப் பதிப்பித்த சோம. இளவரசு
(அண்ணாமலைநகர், 1981) இந்த நல்ல பதிப்பு முறையை ஏனோ பின்பற்றவில்லை.
அதாவது சிவஞான முனிவரின் திருத்தங்களை வேறுபடுத்திக் காட்டத் தேசிகர

--------------------------
     41இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, திருச்சிற்றம்பலம், 1973. பக். 525.
     42மு. அருணாசலம், இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு-இரண்டாம்
பாகம், திருச்சிற்றம்பலம், 1975. பக். 193.