பக்கம் எண் : 36
  

பதிப்புரை


இட்டிருந்த உடுக்குறிகளை அவர் முற்றாக நீக்கிவிட்டார். அதனால் மீண்டும் பழைய
குழப்பம். அதன் விளைவாக ஒருவர் உரையை இன்னொருவர் உரையாகப் பிறழ
உணரும் நிலை ஏற்பட்டுவிட்டது. அது தன்னையும் பாதிக்கும் என்று அவர்
அறிந்திருக்கவில்லை.

     தமது பதிப்பில் ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் (1981. பக். 225-276;
543-572, 1990. பக். 250-310; 617-651) சோம. இளவரசு விளக்கக் குறிப்புகள்
எழுதியுள்ளார். உரையாசிரியர்களின் கருத்துகளுக்கு இப்பகுதியில் விளக்கம் தரும் போது
எது சங்கர நமச்சிவாயர் உரை? எது சிவஞான முனிவர் திருத்திய பகுதி என்று அவரால்
வேறுபடுத்தி அறிய முடியவில்லை. உதாரணத்துக்காக, 152-ஆம் நூற்பாவுக்கு அவர்
கொடுத்துள்ள குறிப்பைப் பார்க்கலாம். இந்நூற்பாவின் உரையில், “வினைத்தொகை,
பண்புத்தொகை, அன்மொழித்தொகை என்னும் அல்வழிப் புணர்ச்சியவாய தொகைநிலைத் தொடர்மொழிகளை ஒருமொழிகள் என்பாரும் உளர். அவர்
கூற்றுத் தாய் மலடி என்றாற் போலும்.”
என்னும் மறுப்புரையைச் சோம. இளவரசு
(1981. பக். 260; 1990. பக். 291) எடுத்துக்காட்டி, அது சிவஞான முனிவர் உரை என்று43
விளக்குவார். உண்மையில் அது சங்கர நமச்சிவாயர் உரை. இவ்வாறு அவர் பிறழ
உணர்ந்த, உணர்த்திய இடங்கள்44 மிகப் பல. அவற்றை எல்லாம் திருத்தி வெளியிடுவது
மாணவர்களுக்கு மட்டும் அல்ல, ஆசிரியர்களுக்கும் நல்லது.
 

கூழங்கைத் தம்பிரான்


     உரைவளம் கொண்ட நன்னூலுக்குச் சங்கர நமச்சிவாயர் உரைக்குப் பின்னர் வேறு
புதிய உரை தோன்றவில்லை என்றால் பலர் வியப்படையக் கூடும். ஆனால் அதுதான்
உண்மை. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கூழங்கைத் தம்பிரானும் சிவஞான முனிவரும்
நன்னூல் உரைப்பணியில் ஈடுபட்டார்கள் என்றாலும் இத்துறையில் அவர்களின்
பங்களிப்பு மிக மிகக் குறைவு. அவர்கள் இருவரும் மாணவர் புடைசூழ வாழ்ந்த
தமிழாசிரியர்கள். நல்ல மாணவர் பரம்பரையை உருவாக்கிய பெருமை இருவருக்கும்
உண்டு. எனவே மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், தாம் பாடம் சொல்லிய
உரையை அவரவர் நோக்கில் மாற்றிச் செப்பம் செய்தனர். கூழங்கைத் தம்பிரான்
மயிலைநாதர் உரையைச் சுருக்கினார்; அதன் பொழிப்புரைப் பகுதிகளைப் பதவுரையாக
மாற்றி எளிமைப்படுத்தினார். முனிவர் சங்கர நமச்சிவாயர் உரையைச் சில இடங்களில்
குறைத்தார்; பல இடங்களில் கூட்டினார்; வேறு சில இடங்களில் கூட்டியும் மாற்றியும்
---------------------------------
     43இப்பதிப்பின் சிறப்பியல்புக்குச் சான்றாக இந்தப் பிழைப் பகுதியை
நா.பாலுசாமி தமது முன்னுரையில் எடுத்துக்காட்டியது அபத்தம்.
    44அவர் தவறாகக் குறித்த பிற இடங்கள்: நூ. 109, 110, 124, 158, 162, 164, 178, 194, 207, 233, 254, 260, 261, 265, 273, 275, 284, 291, 338, 355, 356, 361, 363, 365, 369, 397, 398, 434.