பதிப்புரை | திருத்தினார். ஆகவே அவ்விருவரும் நன்னூலுக்குச் சொந்தமாக உரை இயற்றவில்லை; பிறர் உரைகளை மாற்றி அமைத்தனர். தெளிவாகச் சொன்னால் நன்னூல் உரைப்பணியில் அவர்கள் செய்தது ஒரு வகைச் செப்பப் பணி; மூலப் பணி அல்ல. கூழங்கைத் தம்பிரானும் சிவஞான முனிவரும் ஒத்த காலத்தினர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இருவரும் வாழ்ந்துள்ளனர். என்றாலும் யார் எப்போது இந்த உரைமாற்றப் பணியைச் செய்திருக்கக் கூடும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. கூழங்கைத் தம்பிரான் தமிழகத்தில் இருந்த போது தமது வாழ்நாளின் முற்பகுதியிலும் சிவஞான முனிவர் காஞ்சிபுரத்தில் ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தமது வாழ்நாளின் பிற்பகுதியிலும் இப்பணிகளைச் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படி என்றால் கூழங்கைத் தம்பிரானின் காண்டிகையுரை 1750-க்கு முன்பும் முனிவரின் புத்தம் புத்துரை 1750-க்குப் பின்பும் எழுந்திருக்கலாம் என்று ஒருவாறு ஊகிக்கலாம். இந்தக் காலமுறையை மாற்றிக் கூறவும்45 வாய்ப்பு உண்டு. நன்னூலுக்கு எழுந்த முதல் காண்டிகையின் ஆசிரியர் கூழங்கைத் தம்பிரான். அவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர்; தஞ்சைப் பகுதியிலும் ஈழநாட்டிலும் வாழ்ந்தவர். திருவாரூர் மடத்தில்46 தங்கித் தமிழ் கற்றவர்; கற்பித்தவர். அங்கே நடந்த வன்முறை நிகழ்ச்சியால் அவருக்குக் கை ஊனமாயிற்று என்றும் அதனால் அவருக்குக் கூழங்கைத் தம்பிரான் என்ற பெயர் ஏற்பட்டது என்றும்47 கூறுவார்கள். அந்த நிகழ்ச்சியால் அவர் மனம் நொந்து தாயகத்திலிருந்தும் சைவத்திலிருந்தும் வெளியேறினார் என்றும் சொல்லப்படுகிறது. தமது வாழ்நாள் முழுதும் ஆசிரியப்பணி48 ஆற்றிய கூழங்கைத் தம்பிரான் 1795 வாக்கில் உயிர் நீத்தார் என்று ஈழத்தமிழ் இலக்கிய வரலாறுகள் கூறும். கூழங்கைத் தம்பிரானின் காண்டிகையுரை முழுக்க முழுக்க மயிலைநாதரின் உரையைத் தழுவியது. பொழிப்புரையாக அமைந்துள்ள மயிலைநாதர் உரையை இளநிலை இலக்கண மாணவர்களுக்கு ஏற்பப் பதவுரையாக அவர் மாற்றிச் சுருக்கினார். அந்த உரையின் நடையையும் தம்பிரான் சிறிதளவு எளிமைப்படுத்தினார். புகுமுக ----------------------------- 45க. ப. அறவாணன், 1977. பக். 172. 46அவர் திருவத்தூர் மடத்தில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. 47 Simon Casie Chitty, The Tamil Plutarch, New Delhi, 1982. p. 55; மு. வை. அரவிந்தன், 1968. பக். 479; 1995. பக் 570. 48அவருடைய மாணவர் பரம்பரையை மயிலை சீனி. வேங்கடசாமி (பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், சென்னை, 1962. பக். 312) வரைபடமாகக் காட்டியுள்ளார். | |
|
|