பக்கம் எண் : 48
  

பதிப்புரை


என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. தொல்காப்பியத்துக்கு முதல் நூல்
ஐந்திரம் என்பது சுப்பிரமணிய தீக்கிதர் (பி. வி. 1 உரை) கொள்கை; அகத்தியம் என்பது
முனிவர் (தொல். விரு. பக். 9-12) கொள்கை. அல்லாமலும் சுப்பிரமணிய தீக்கிதரைச்
சொல்லியல்பு உணராதவர் என்று இலக்கண விளக்கச் சூறாவளியில் (பக். 101) முனிவர்
கடுநடையில் சாடுவார். மேலும் பிரயோக விவேகம் வழங்கும் இலக்கண கருத்துகள்
பலவும் தமிழ்நடையில் இலக்கணக் கொத்தில் விளக்கப்பட்டுள்ளதை முனிவர் நன்கு
அறிவார். ஆகவே வாயில் நுழையா வடசொற்கள் மலிந்த பிரயோக விவேக உரையை
எடுத்தாள வேண்டிய தேவை முனிவருக்கு ஏற்படவே இல்லை. அப்படி இருந்தும்
நன்னூல் புத்தம் புத்துரையில் பிரயோக விவேக உரைப் பகுதிகள் விரவியுள்ளதாகக்
கருதப்படுவதற்கு எளிய காரணம் ஒன்று உண்டு.

     சாமிநாத தேசிகர் பிரயோக விவேக உரைப் பகுதிகளைப் பல இடங்களில்
தழுவிக்கொண்டார். அதோடு அந்த உரையில் காட்டப்பட்டுள்ள உதாரணங்களையும்
தேசிகர் தமது உரையில் எடுத்து அமைத்துக்கொண்டார். அதனால் இலக்கண
கொத்திலிருந்து சிவஞான முனிவர் எடுத்து இணைத்துக்கொண்ட உரைப் பகுதிகள்,
மேலோட்டமாகப் பார்க்கும் போது பிரயோக விவேக உரையைப் போலத் தோற்றம்
தரும். அதற்கு, “வினைமுற் றேவினை” (நன். 351) என்னும் நூற்பாவின் உரையில்
சிவஞான முனிவர் எடுத்து எழுதிய பகுதி ஏற்ற எடுத்துக்காட்டு. கருத்து, உதாரணம்
ஆகியவற்றால் இந்தத் திருத்தத்தின் பிற்பகுதி பிரயோக விவேக உரைபோலத்
தோன்றுவது உண்மை. இந்த ஒற்றுமையைக் கண்ட தெய்வசிகாமணி முதலியாரும்
சண்முகம் பிள்ளையும் தங்கள் நன்னூல் பதிப்பில் (1889. பக். 340) பிரயோக விவேக
உரைப் பகுதியை (நூ. 35) அடிக்குறிப்பாகக் கொடுத்தார்கள். மற்ற பதிப்பாசிரியர்கள்
இந்த அடிக்குறிப்பைத் தங்கள் பதிப்புகளில் எடுத்துச்70 சேர்த்துக்கொண்டார்களே தவிர
முனிவர் கூட்டி எழுதிய உரை இலக்கணக் கொத்தின் (நூ. 66) மூலப்பகுதியும் உரையும்
என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டனர். எனவே இவ்விரு நூல்களுக்கும் ஒற்றுமை
இருப்பது உண்மை; இலக்கணக் கொத்து பிரயோக விவேகத்தைப் பேரளவில்
எடுத்தாளுவதும் உண்மை. என்றாலும் சிவஞான முனிவர் நன்னூல் பெயரியலிலும்
வினையியலிலும் (நூ. 292, 295, 296, 297, 298, 299, 300, 301, 302, 317, 322, 339, 340,
351) எடுத்து இணைத்த உரைப் பகுதிகள் இலக்கண கொத்தைச் சார்ந்தன; அவற்றில்
பிரயோக விவேக உரைப் பகுதி ஒன்றுகூட இல்லை.
--------------------------
     70கழகப் புலவர் குழுவினர், நன்னூல் விருத்தியுரை, 1964. பக். 316; தண
்டபாணி தேசிகர், 1971. பக். 486.