பதிப்புரை | தொகுத்துச் சொன்னால் சிவஞான முனிவர் நன்னூலுக்குப் புதிதாக உரை ஒன்றும் இயற்றவில்லை. புத்தம் புத்துரை என்ற வழக்காறே விவாதத்துக்கு உரியது. நன்னூல் சூத்திரங்கள் மூன்றுக்கு மட்டுமே அவர் புத்துரை வரைந்தார்; அவர் செய்த மற்ற திருத்தங்களில் பெரும்பகுதி குறிப்பளவில் நின்றுவிட்டது. அவர் விரிவாக எழுதிய விளக்கங்கள் அனைத்தும் அவரே எழுதியவை அல்ல; பிறர் உரைகளிலிருந்து அவர் எடுத்துக்கொண்டவையும் அவற்றில் உள்ளன. புத்தம் புத்துரைக்காக அவர் புதிதாக எழுதியது குறைவு; தம்முடைய முந்தைய இலக்கண உரைகளிலிருந்து எடுத்துக்கொண்டது மிகுதி. நன்னூலுக்குச் சங்கர நமச்சிவாயர் இயற்றியதே விருத்தியுரை. முனிவர் செய்த திருத்தங்களால் அதற்கு அத்தகுதி ஏற்பட்டது என்பது பொருந்தா முடிபு. உண்மை இவ்வாறு இருந்தும் புத்தம் புத்துரை தமிழ் இலக்கியங்களைப் படித்துய்ய உதவும் உறுதுணை; இலக்கண உலகிற்கு முனிவர் செய்த பெருந்தொண்டு என்று சொல்வது எல்லாம் புகழுரைகள்; ஆய்வுரைகள் அல்ல. எனவே சங்கர நமச்சிவாயர் உரையில் சிவஞான முனிவர் திருத்தி அமைத்த பகுதிகளை மூலபாடத் திறனாய்வு நோக்கில் மீண்டும் ஆராய வேண்டும். அப்போதுதான் நன்னூலுக்கு முனிவர் செய்த உரைப்பணியைத் துல்லியமாக மதிப்பிட முடியும். | புதிய உரைகள் | சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் நன்னூலுக்குப் பெயரளவில் எண்ணற்ற உரைகள் தோன்றின. காண்டிகையுரை, காண்டிகையுரை விளக்கம், தெளிவுரை, உரைத்தெளிவு, ஆராய்ச்சித் தெளிவுரை, இலகுபோதம், சுருக்கவுரை என்று வெவ்வேறு பெயர்களில் எழுதப்பட்டன. ஹென்றி பவர், சாமுவேல் பிள்ளை-வால்ற்றர் ஜாயீஸ், ஜான லாசரஸ், போன்றவர்கள் எழுதிய ஆங்கில விளக்கமும் மொழிபெயர்ப்பும்71 வெளிவந்தன. ஐரோப்பியர் வருகை, கல்வித்துறை மறுமலர்ச்சி, அச்சுப்பொறியின் அறிமுகம், பாடநூல் திட்டம், தேர்வுடன் இணைந்த கல்விமுறை முதலிய காரணங்கள் இந்த உரைப் பெருக்கத்துக்கு வழிகோலின. ஆராய்ந்து நோக்கும்போது விசாகப் பெருமாளையர், ஆறுமுக நாவலர் ஆகியோர் செய்த காண்டிகையுரைகள் உள்ளிட்ட அனைத்தும் தழுவல் உரைகளே. ---------------------------------- 71நன்னூலுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு மூன்றும் (ஹென்றி பவர், 1837; 1876; 1972; சாமுவேல் பிள்ளை-வால்ற்றர் ஜாயீஸ், 1848-51; ஜான் லாசரஸ், 1878; 1977.) மலையாள மொழிபெயர்ப்பு ஒன்றும் (மா. இளையபெருமாளும் பிறரும், 1967.) வெளிவந்துள்ளனர். ஜீ. யூ. போப் நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்று சொல்வது (சூ. இன்னாசியும் பிறரும், தமிழியல், சென்னை, 1990, பக்.25) பிழைத் தகவல். | |
|
|