பக்கம் எண் : 51
  

பதிப்புரை


அளவுக்குத் தமிழிலக்கண உலகில் செங்கோல் செலுத்தியது. அறுபது ஆண்டுகளுக்கு
மேல் மாணவர் உலகம் அறிய வீற்றிருந்த இந்த உரை ஆறுமுக நாவலர், சடகோப
ராமாநுஜாசாரியர் ஆகியோரின் காண்டிகைகள் வெளிவந்து பரவிய பின்னர் மெல்ல
மெல்ல வழக்கு இழந்துவிட்டது. இந்த உரையாசிரியர்கள் இருவரும் தமிழிலக்கணக்
கல்வியின் வேர்களை நன்றாக அறிந்தவர்கள்; வளரும் மாணவர் சமுதாயத்தின்
தேவையைப் புரிந்துகொண்டவர்கள். எனவே தேர்வு நோக்கில் ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் பயன்படும் புதிய அம்சங்கள் பலவற்றைத் தங்கள் காண்டிகைகளில்
சேர்த்தனர். தேர்வு வினாக்கள், இலக்கணப் பயிற்சிகள், பகுபத முடிபுகள், பொருள்,
யாப்பு, அணி பற்றிய இலக்கணச் சுருக்கங்கள், இலக்கணக் கண்ணாடி போன்ற
பின்னிணைப்புகள் இந்த உரைகளில் சேர்ந்தன. மேலும் வசன நடையில் இருவரும்
நன்றாகக் கவனம் காட்டியிருந்தார்கள். நாவலரின் உரைநடை பழந்தமிழ் நடை;
வை. மு. ச. நடை புதுத்தமிழ் நடை. ஆயினும் தெளிவுக்கும் செறிவுக்கும் இருவரும்
முதலிடம் கொடுத்திருந்தனர். அதனால் இக்காண்டிகைகள் விரும்பி வரவேற்கப்பட்டதில்
வியப்பு இல்லை. ஆனால் இவை தலைமுறை தலைமுறையாக மாணவர்கள் கைகளில்
தவழ்ந்து நூற்றாண்டு விழாக் கொண்டாடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

     இந்த நூற்றாண்டில் நன்னூலுக்குத் தோன்றிய உரைகளுக்கும் குறைவு இல்லை.
வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும் இவற்றை எல்லாம் ஒரு வகையில்
காண்டிகையுரைகள்75 என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றுள் ஈழத்திலிருந்து
வெளிவந்த புலோலி வ. குமாரசுவாமிப் புலவரின் நன்னூற் காண்டிகையுரை விளக்கம்
(1902), ச. பவானந்தம் பிள்ளையின் நன்னூல் (1922), கா. நமச்சிவாய முதலியாரின்
நன்னூல் (1928-31), மோசசு பொன்னையாவின் நன்னூல் ஆராய்ச்சித் தெளிவுரை (1968;
1971) ஆகிய நான்கும் குறிப்பிட வேண்டியன. குமாரசுவாமிப் புலவருடைய
காண்டிகையுரை விளக்கம் முற்ற முழுக்க ஆறுமுக நாவலரின் காண்டிகையைத் தழுவி
அதற்கு விளக்கம்போல அமைந்துள்ளது. இது தமிழகத்தில் பரவாததால் இப்படி ஒரு
உரை தோன்றவே இல்லை என்று சிலர்76 மறுப்பதுண்டு:
------------------------
என்று பலரும் (சி. வை. தாமோதரம் பிள்ளை, 1889. பதிப்புரை பக். 15; மு. வை.
அரவிந்தன், 1968. பக். 539; 1995. பக். 655; க. ப. அறவாணன், 1977. பக். 356)
கூறுவது உண்மை அல்ல.
     75மோசசு பொன்னையா (நன்னூல் ஆராய்ச்சித் தெளிவுரை-எழுத்து,
மதுரை, 1968; சொல்லதிகாரம், மதுரை, 1971.) தம்முடைய உரையை விருத்தியுரை
என்று சொல்லிக்கொள்வது (1968. பக். 17) தற்புகழ்ச்சி.
     76க. ப. அறவாணன், 1977. பக். 258.