பதிப்புரை | தமிழிலக்கண அகரவரிசை (பொன். கோதண்டராமன், 1977.) போன்ற நூலடைவுகள், நன்னூல் தொடர்பான ஆய்வுநூல்கள்80 முதலியவற்றில் பதிப்புத் தகவல்கள் நிறையக் காணப்படுகின்றன. என்றாலும் நன்னூலின் பதிப்பு வரலாற்றுக்கும் நூலடைவுக்கும் இவை மட்டுமே போதுமானவை அல்ல. காட்டாக விசாகப்பெருமாளையர் எழுதிய காண்டிகையுரையின் முதல் பதிப்பு கி.பி. 1839-இல் தான் வெளிவந்தது என்று நிறுவ அறவாணன் வரிந்து வரிந்து (1977. பக். 183) எழுதுவார்; பஞ்சாங்க அறிவிப்பை எல்லாம் ஆதாரமாகக் காட்டுவார். ஆனால் அப்பதிப்பு சாலிவாகன சகாப்தம் 1756 ஜெய வருடமே (1834) வெளிவந்துவிட்டது. இந்நூலிலிருந்து இன்னொரு உதாரணத்தையும் காட்டலாம். தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர்81 நன்னூலுக்கு நல்லதொரு பதிப்பை வெளியிட்டார். இந்தப் பதிப்பைப் பற்றிய தகவல்களை ஒருவரும் சரியாகக் கொடுக்கவில்லை. இதன் நூலடைவு விவரங்களைப் பதிவு செய்த க. ப. அறவாணன் (1977. பக். 255) இப்பதிப்பு 1895-இல் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகவலை நம்பி, கி. நாச்சிமுத்தும் (1986. பக். 119) இதன் பதிப்பு ஆண்டு 1895 என்று கூறுவார். உண்மையில் இப்பதிப்பு இராட்சச வருடமே (1855) வெளிவந்துவிட்டது. எந்த ஆய்வு மூலத்தையும் நன்றாக ஆராயாமல் நம்பிவிடக் கூடாது என்று வலியுறுத்த இந்த உதாரணங்களே அமையும். நூலின் முகப்புத் தாளே நம்பகமான பதிப்பு விவரங்களை வழங்குவது. ஆகவே ஒரு நூலின் பதிப்பு வரலாற்றுக்கும் நூலடைவுக்கும் அதுவே ஆணித்தரமான ஆய்வு மூலம் என்பதை மறக்கவே கூடாது. மொத்தத்தில் நன்னூல் பதிப்பு வரலாற்றிலும் நூலடைவுத் தரவுகளிலும் பிழைகள் பெருகிவிட்டன. அவற்றைக் களைந்துவிட்டுத் தொல்காப்பி்யப் பதிப்பு வரலாறுபோல82 நன்னூலின் பதிப்பு வரலாற்றையும் எழுதினால் இலக்கிய இலக்கண வரலாறுகளில் சில பகுதிகள் நிச்சயம் திருந்தும். | விருத்தியுரைப் பதிப்புகள் | இனி நன்னூல் விருத்தியுரைப் பதிப்புகளைப் பார்க்கலாம். இது யாழ்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரால் முதன் முதல் விரோதிகிருது வருடம் ஐப்பசி மாதம் ------------------------------ 80க. ப. அருணாச்சலம், நன்னூலும் அதன் உரைகளும், எம். லிட். ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1973; எவ்; எக்ஸ். நடராசா, நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும், காரைநகர், 1982; கி. நாச்சிமுத்து, 1986. 81இவர் நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, தண்டியலங்கார உரை ஆகியவற்றை இயற்றியதாகக் கூறுவது (மு. வை. அரவிந்தன், 1968. பக். 543; 1995. பக். 660) பிழை; இவர் அவற்றின் பதிப்பாசிரியர் மட்டுமே. 82மு. சண்முகம் பிள்ளை, தொல்காப்பியப் பதிப்புகள் (தமிழாய்வு தொகுதி 8), சென்னை, 1978. பக். 17-86. | |
|
|