பதிப்புரை | (கி. பி. 1851) முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டது. ஆனால் விருத்தியுரையைத் தழுவிக் காண்டிகையுரை இயற்றிய விசாகப்பெருமாளையர் இவ்வுரையின் சில பகுதிகளை நாவலருக்கு முன்பே 1834-இல் வெளியிட்டுவிட்டார். இத்தகவலை, “இவ்வுரையின் அருமையை உணர்ந்து சென்னை அரசியலார் கல்லூரியில் முதன் முதலாகத் தமிழ்ப்புலமை நடாத்திய திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் சில குறிப்புகளுடன் முதன் முதல் அச்சிட்டனர்.” என்று தண்டபாணி தேசிகர் (நன்னூல் விருத்தியுரை 1957. முகவுரை பக். 8) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே சிவஞான முனிவரின் விருத்தியுரைப் பகுதிகள் சிலவற்றைக் களத்தூர் வேதகிரி முதலியார் முதன் முதல் அச்சிட்டார் என்று83 கூறுவது பொருந்தாது. விசாகப்பெருமாளையருக்குப் பின்னர் இராமாநுச கவிராயர் தமது விருத்தியுரையை 1847-இலும் அவரை அடுத்து களத்தூர் வேதகிரி முதலியார் தமது காண்டிகையுரையை 1851-இலும் (விரோதிகிருது வருடம் ஆனி மாதம்) வெளியிட்டார்கள். இவர்கள் மூவரும் புத்தம் புத்துரையைத் தழுவி உரை இயற்றிய காரணத்தால்தான் அவ்வுரைகளில் விருத்தியுரைப் பகுதிகளும் இணைந்திருந்தன. அதைத் தவிர அவர்களுடைய நோக்கம் விருத்தியுரைப் பகுதிகளை வெளியிடுவது அல்ல என்பது அறிதற்கு உரியது. ஆறுமுக நாவலருக்கு பிறகு தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் நன்னூல் விருத்தியுரையை விசாகப்பெருமாளையர் செய்த பதவுரையோடு 1855-இல் வெளியிட்ட செய்தி முன்பே சொல்லப்பட்டது. அவருக்குப் பின்னர் ஜீ. யூ. போப், ‘பவணந்தி முனி செய்த நன்னூல் மூலமும் பொழிப்புரையும்’ என்ற பெயரில் ஒரு அழகான பதிப்பை 1857-இல் வெளியிட்டார். இது அவருடைய இலக்கண நூலின் இரண்டாம் பகுதியாக84 அமைந்துள்ளது. இதன் பொழிப்புரையை ஜீ. யூ. போப் எழுதியதாகக் கருதுவது85 உண்மை அல்ல. இது சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரையின் பொழிப்புரைப் பகுதியே என்பது இரண்டையும் ஒப்பிட்டு நோக்குவோர்க்கு விளங்கும். அதோடு அல்லாமல் முகப்புத் தாளில், “இஃது ஜீ. யூ. போப்பையரால் பார்வையிடப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டது.” என்றே அச்சிடப்பட்டுள்ளது. எனவே போப்பையர் நன்னூலின் உரையாசிரியர் அல்லர்; பதிப்பாசிரியர் மட்டுமே; அவர் பதிப்பில் உள்ள பொழிப்புரை அவரால் எழுதப்பட்டது அல்ல; அது புத்தம் புத்துரையில் உள்ள பொழிப்புரைப் பகுதியே என்பன கொள்ள வேண்டிய செய்திகள். ----------------------------- 83க. ப. அறவாணன், 1977. பக். 204, 355. 84 Pope’s Third Tamil Grammar Part II Native Authorities: Nannul, Madras, 1857. 85 க. ப. அறவாணன், 1977. பக். 210-211; சோம. இளவரசு, நன்னூல் விருத்தியுரை, அண்ணாமலைநகர், 1981. பக். ix; 1990. பக். xi; எவ். எக்ஸ். நடராசா, 1982. பக். 4. | |
|
|