பக்கம் எண் : 56
  

பதிப்புரை


     சென்ற நூற்றாண்டின் இறுதியில் திருமயிலை தெய்வசிகாமணி முதலியாரும்
சண்முகம் பிள்ளையும் இணைந்து நன்னூல் விருத்தியுரைக்கு ஒரு பதிப்பை (1889)
வெளியிட்டனர். சந்திரசேகர கவிராஜ பண்டிதரின் பதிப்பைப் போலவே இதுவும்
விசாகப்பெருமாளையரின் பதவுரையையும் நன்னூல் விருத்தியுரையையும் கொண்டது.
கல்லூரி மாணவர்களின் தேர்வு நோக்கில் அமைந்துள்ள இப்பதிப்பில் மேற்கோள்
இடவிளக்கம், உரை ஒப்பீடு முதலிய பகுதிகள் முதன் முதல் அடிக்குறிப்புகளாகத்
தரப்பட்டுள்ளன. தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி,
இலக்கணக் கொத்து ஆகியவற்றோடு சிவஞான முனிவரின் திருத்தப் பகுதிகளை
ஒப்பிட்டுக் காட்டியுள்ளது இதன் சிறப்பியல்புகளுள் சிறந்தது. இப்பதிப்பின் அமைப்பு,
சிறப்பு முதலியவற்றை நூலின் முன்னுரை தொகுத்துக் கூறுகிறது.

     சங்கர நமச்சிவாயரின் உரையையும் சேர்த்து நன்னூல் விருத்தியுரைக்கு இந்த
நூற்றாண்டில் மட்டும் ஐந்து பதிப்புகள் வந்துள்ளன. சாமிநாதையர் (1925), கழகப் புலவர்
குழுவினர் (1956), தண்டபாணி தேசிகர் (1957), எம். சுந்தரேசம் பிள்ளை (1969), சோம.
இளவரசு (1981) ஆகியோர் பார்வையில் இவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. மனம் திறந்து
சொன்னால் அவர்களுள் சாமிநாதையரும் தண்டபாணி தேசிகரும் விருத்தியுரையை
ஏட்டுச் சுவடிகளோடு ஒப்பிட்டுப் பதிப்பித்தார்கள்; மற்றவர்கள் அச்சுப்பிரதிகளைப்
பார்த்துப் படியெடுத்து வெளியிட்டார்கள். அவர்கள் இருவரும் பதிப்பியல
நெறிமுறைகளுக்குச் சிறப்பிடம் அளித்தார்கள்; மற்றவர்கள் விற்பனை வழிமுறைகளுக்கு
முதலிடம் தந்தார்கள். அவர்களுடைய பதிப்புகள் ஆய்வாளர்க்கும் பயன்படுபவை; மற்ற
வெளியீடுகள் மாணவர்க்கும் உதவாதவை என்று பொதுவாகக் கூறலாம். இதற்கான
சான்றுகளை அடுத்து வரும் பகுதிகளில் காணலாம்.

     விசாகப்பெருமாளையர் பதிப்பு (1834) முதல் சோம. இளவரசு பதிப்பு (1981) முடிய
விருத்தியுரை தொடர்பாக வெளிவந்துள்ள பதிப்புகளை எல்லாம் நான்கு வகையாகப்
பாகுபடுத்தலாம். முதலாவது சங்கர நமச்சிவாயரின் உரை மட்டும் உள்ளது. சாமிநாதையர்
பதிப்பு (1925) ஒன்றே இவ்வகையைச் சார்ந்தது. சங்கர நமச்சிவாயர் இயற்றிச் சிவஞான
முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை இரண்டாவது வகை. ஆறுமுக நாவலர் (1851),
கழகப் புலவர் குழுவினர் (1956), தண்டபாணி தேசிகர் (1957), சுந்தரேசம் பிள்ளை (1969),
சோம. இளவரசு (1981) ஆகியோரின் பதிப்புகள் இந்த வகையின. புத்தம் புத்துரையும்
விசாகப் பெருமாளையரின் பதவுரையும் கொண்ட பதிப்புகள் மூன்றாவது வகை.
சந்திரசேகர கவிராஜ பண்டிதர் பதிப்பும் (1855) தெய்வசிகாமணி முதலியாரும் சண்முகம்
பிள்ளையும் இணைந்து வெளியிட்ட பதிப்பும்