பதிப்புரை | (1889) இந்த வகையைச் சாரும். சங்கர நமச்சிவாயர் இயற்றிச் சிவஞான முனிவர் திருத்திப் புதுக்கிய புத்தம் புத்துரையின் ஒருசில பகுதிகளை மட்டுமே கொண்ட பதிப்புகள் நான்காவது வகை. விசாகப்பெருமாளையரின் காண்டிகையுரை (1834), இராமாநுச கவிராயரின் விருத்தியுரை (1847), வேதகிரி முதலியாரின் காண்டிகையுரை (1851), போப்பையர் பதிப்பித்த பொழிப்புரை (1857) ஆகிய நான்கும் இந்த வகையைச் சார்ந்தன. நன்னூல் விருத்தியுரைக்கு ஒரு செம்பதிப்பை வெளியிட முயல்வோருக்கு முதல் இருவகைப் பதிப்புகளே மிகவும் பயன்படும்; மற்றவை சிறிதளவே உதவக்கூடும். எனவே முதல் இருவகைப் பதிப்புகளை மட்டும் தனித்தனியாக ஆராயலாம். | சாமிநாதையர் பதிப்பு | முதலில் சாமிநாதையரின் பதிப்பை எடுத்துக்கொள்வோம். அதற்கு முன்பாக அவருடைய நன்னூல் கல்வி, பதிப்புத் துறை அனுபவம் முதலியவற்றைக் கோடிட்டு காட்ட வேண்டும். அறியாப் பருவம் தொட்டே சாமிநாதையர் நன்னூலைப் படிக்கத் தொடங்கினார்; நூலையும் உரையையும் மனனம் செய்தார். நன்னூல் காண்டிகையையும் விருத்தியையும் பலரிடம் பாடம் கேட்டார்; கல்லூரிகளில் நன்னூலைக்86 கற்பித்தார். சங்கர நமச்சிவாயர் உரையைப் பதிப்பிக்கும் முன்பே பல தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் அவர் பதிப்பித்துவிட்டார். அதனால் சுவடிக்கலையும் பதிப்புக்கலையும் அவருக்குக் குற்றேவல் செய்தன. தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பல கோணங்களில் ஆழ்ந்து ஆராய்ந்து நூல் விவரங்கள், விளக்கக் குறிப்புகள், பல வகை அகராதிகள் முதலியன அவரிடம் ஆயத்த நிலையில் இருந்தன. அவருடைய மனம் அறிந்து பணி புரியும் புலவர் குழாம் ஒன்று அவரோடு சேர்ந்து செயல்பட்டது. இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்டு நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரைப் பதிப்பை மதிப்பிடுவது நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக மேலகரம் சுப்பிரமணிய தேசிகரிடம் 1876 வாக்கில் நன்னூலைப் பாடம் கேட்ட காலத்தில் சங்கர நமச்சிவாயர் உரையைப் பற்றி அவர் சொல்லிய சொற்கள் சாமிநாதையரின் தமிழ் நெஞ்சில் ஆழப் பதிந்திருந்தன. அந்த உரையின் பதிப்புப் பணியை அவை அவருக்குத் தொடர்ந்து நினைவூட்டி வந்தன. சுப்பிரமணிய தேசிகர் காட்டிய சங்கர நமச்சிவாயர் உரைச் சுவடியோடு தாம் ஏடு தேடும் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் கிடைத்த ஓரிரு சுவடிகளும் அவரிடம் இருந்தன. கடைசியாக முகப்பு ஏட்டுடன் கூடிய சங்கர நமச்சிவாயர் உரையேடு --------------------------- 86அவருடைய என் சரித்திரத்தில் (1950. பக். 115, 151, 456, 559, 563, 599, 693, 694) இத்தகவல்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. | |
|
|