97

சேனா.

இ-ள் : ‘கம்பலை  மூதூர்’  (புறம். 54)  எனவும்,  ‘ஒரு   பெருஞ்
சும்மையொடு’  எனவும்,  1‘கலிகொளாய    மலிபு  தொகுபு   எடுத்த’
(அகம்.11) எனவும் 2‘உயவுப் புணர்ந்தன்றிவ் வழுங்க லூரே’  (நற். 203)
எனவும்,   கம்பலை   முதலாகிய   நான்கும்  அரவமாகிய    இசைப்
பொருண்மை யுணர்த்தும், எ-று

தெய்.

இ-ள் : கம்பலை  என்னும் சொல்லும், சும்மை என்னும்  சொல்லும்,
கலி என்னும் சொல்லும், அழுங்கல் என்னும்  சொல்லும் இவை  நான்கு
சொல்லும் அரவம் என்னும் பொருளையுடைய, எ-று.

உ-ம் : கம்பலை மூதூர்’ (புறம்54),‘ஒலி பெருஞ் சும்மையொடு’, ‘கலி
கொ  ளாயம்’ (அகம்.11),  உயவுப்  புணர்ந்  தன்றிவ் வழுங்கல்  ஊரே’
(நற். 203).

நச்.

இஃது இசை.

இ-ள் : கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை  நான்கும்
அரவப்   பொருள   கம்பலை   சும்மை   கலி   அழுங்கல்   என்று
சொல்லப்பட்ட  இந்நான்கும்  அரவமாகிய  இசைப்   பொருண்மையை
உணர்த்தும், எ-று.

உ-ம் :3 ‘களிறுகவர் கம்பலை போல’      (அகம். 96)
4 ‘தனிமழை பொழியும் தண்பரங் குன்றில்
  கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயம்’  (மதுரைக் 263,-4)
‘கலி கொளாயம்மலி தொகுபு எடுத்த’      (அகம். 11)
‘உயவுப் புணர்ந் தன்றிவ் வழுங்க லூரே’    (நற். 203)

என  வரும்.  ‘கலிகொள்  சும்மை’   என்பதனுள்  ‘கலி’  செருக்கினை
யுணர்த்துதல் ‘கூறிய கிளவி’ என்பதனால் கொள்க.


1. பொருள் : ஒலிமிக்க  தோழியர்  கூட்டம் மிகுந்து கூடி எடுத்த

2. பொருள் : இவ்வொலி  மிக்கவூர்  வருத்தம்  மேலிட்டது.

3. பொருள் : யானையைக்  கவரும்  ஓசை  போல

4. பொருள் : துளிகளையுடைய    மேகம்   தங்கும்   குளிர்ந்த
                திருப்பரங்குன்றில்   விழாக்கொள்ளும்  ஆரவாரம்,
                ஒலி  கொண்ட  மகளிர்  கூட்டம்.