47

பி. இ. நூ.

நேமி. 592

விரைவாம் கதழ்வும் துனைவும்.

இல. வி. 2817.

கதழ்வும் துனைவும் விரைவு காட்டலும்.

இளம்

வ-று : 1 ‘அண்டர்

கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்’ (குறுந். 117)

என்றக்கால், விரையுந் துறைவன் என்பதாம்.

2 ‘துனைபறை நிவக்கும் புள்ளின்மான’ (மலைபடு.55)

என்றக்கால், விரைந்து பறக்கும் என்றவாறாம்.

சேனா

இ-ள் : ‘கதழ்பரி  நெடுந்தேர்’  (நற். 203)  எனவும்,  துனைபறை
நிவக்கும்  புள்ளின்மான’ (மலைபடு. 55) எனவும், கதழ்வும்  துனைவும்
விரைவாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : கதழ்வு என்னும் சொல்லும் துனைவு  என்னும்  சொல்லும்
விரைவு என்பதன் பொருள்படும், எ-று.

3கதழ்,     துனை  என்னும்  சொற்களை  இனிது  விளக்குதற்குப்
பெயராக்கி     ஓதினார்.     மேற்சொல்லப்பட்டவற்றினும்,     இனி
வருவனவற்றினும்  4குறைச்  சொல்லாகி  இவ்வாறு  வருவன அறிந்து
கொள்க.


1. பொருள் : இடையராற்  பிணிக்கப்பட்ட  கயிற்றை   அறுத்துச்
செல்லும்      எருத்தைப்போல         விரைந்து
செல்லுதற்கிடமாகிய கடல் துறைவன்.

2. பொருள் : விரைந்த  பறத்தல்  தொழிலில்  ஓங்கும் பறவைத்
 திரள் போல.

3. கதழ்,  துனை   என்பனவே    உரிச்சொற்கள்.     அவற்றை
  தொழிற்பெயர்   விகுதியாகிய   ‘வு’    என்பதைச்  சேர்த்துக்
  கதழ்வு,  துனைவு  என ஓதினார்ஆசிரியர்.

4. குறைச்சொல்லாகி இவ்வாறு வருவன-உரிச்சொல்லாகி  இவ்வாறு
  தொழிற்பெயர்ப்படுத்து வருவன.