53

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் குறிப்பு.

வ-று :‘ஊரின்  தீர்ந்தான்’  என்றக்கால், ஊரிற்பற்று விட்டான்
என்பதாம்.   ‘பேய்   தீர்த்தான்’  என்றக்கால்,  பேய்  விடுவித்தான்
என்பதாம்.

சேனா.

இ-ள் : தீர்தலும்  தீர்த்தலும் என்னும்   இரண்டும்   விடுதலாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘துணையிற் தீர்ந்த கடுங்கண் யானை’ (நற். 108) என வரும்.
தீர்த்தல் விடுதற் பொருண்மைக்கண் வந்தவழிக் கண்டு கொள்க.

1 தீர்த்தல்     என்பது   செய்வித்தலை   யுணர்த்தி     நின்ற
நிலைமையெனின்,  செய்வித்தலை  யுணர்த்து  நிலைமை வேறோதின்,
‘இயைபே புணர்ச்சி’ (உரி. 12) என்புழியும் ‘இயைப்பு’ என வேறுஓதல்
வேண்டும்;   அதனால்   தீர்த்தலும்  செய்தலை   யுணர்த்துவதோர்
உரிச்சொல் எனவேபடும் என்பது.

2 ‘விடற்பொருட்டாகும்’   என்பதனை இரண்டனோடும்  கூட்டுக.
பன்மையொருமை மயக்கம் எனினும் அமையும்.

தெய்.

இ-ள் : தீர்தல்   என்னும்  சொல்லும்,   தீர்த்தல்   என்னும்
சொல்லும் விடுதல் என்னும் பொருள்படும், எ-று.


1. இயைபு   இயைப்பு  என்னும் இரண்டும்  புணர்ச்சி என்னும்
ஒருபொருளையே     தரும்.  அதனால்  இயைப்பு என்பதை
இயைபு என்பதில்    அடக்கி    இயைபேபுணர்ச்சியென்றார்.
தனித்தனிப்  பொருளாயின்  தனித்தனிச் சூத்திரம்   செய்தல்
வேண்டும்.   அவ்வாறே,  தீர்தலும்    தீர்த்தலும்    ஆகிய
இரண்டுமே   ‘விடல்’  எனும்  ஒரே  பொருளைத்  தருவன.
தன்வினை பிறவினை நிலையில் வேறுவேறு பொருளைத்தரின்
தனித்தனிச் சூத்திரம் செய்தல் வேண்டும்.

2. பொருட்டு  என  ஒருமையிற்கூறியதால்  இவ்வாறு எழுதினார்
‘தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருளவாகும்” எனப் பன்மையிற்
கூறியிருத்தல்   வேண்டும்.   ஒருமையிற்  கூறியதால்  தீர்தல்
விடற் பொருட்டாகும்  தீர்த்தல் விடற் பொருட்டாகும்  எனத்
தனித்தனிக் கூடல் வேண்டும் என்பதாம்.