இளம் உரை : பெட்டல் என்பது புறந்தருதல், எ-று. வ-று : 1‘அரும்பிணை பயக்கற்ற வேட்ட ஞான்று’ என்றக்கால், அரும் புறந்தரு வரவிற்றாகி வேட்டபோழ்து என்பதாம். 2‘பேணின னல்லனோ மகிழ்ந’ (அகம். 16) என்றக்கால், பெட்டேனல்லனோ மகிழ்ந என்பதாம். சேனா இ-ள் : ‘அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்’ எனவும், ‘அமரர்ப் பேணியும் ஆகுதி யருத்தியும்’ (புறம். 99) எனவும் பிணையும் பேணும் பெட்பின் பொருளாகிய புறந்தருதல் என்னும் குறிப்புணர்த்தும், எ-று. ‘பெட்பின் பொருள’ வென்றதனால், பெட்பின் பொருளாகிய விரும்புதலுணர்த்தலும் கொள்க. 3 அது வந்த வழிக்கண்டு கொள்க. தெய். இ-ள் : பிணை என்னும் சொல்லும் பேண் என்னும் சொல்லும் பெட்பு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : ‘அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்’, அமரர்ப் பேணியும் ஆகுதி யருத்தியும்’ (புறம். 99). நச். இது குறிப்பும் பண்பும் உணர்த்துகின்றது. இ-ள் : பிணையும் பேணும் பெட்பின் பொருள பிணையும் பேணும் பெட்பு என்னும் உரிச்சொல்லினது பொருளையுடையவாம், எ-று.
1. இ்ப்பகுதி விளக்கமில்லை. ‘அரும்பிணை யகற்றிவேட்ட ஞாட்பினும் என்பதே நன்று. “அரிய பாதுகாவலைப் பெருக்கி வெள்ளி செய்த காலத்தும்” என்பது பொருள். 2. பொருள் : பாதுகாத்தேன் அல்லனனோ மகிழ்ந. 3. ‘அமரர்ப்பேணி’ என்பதில் விருப்பம் எனும் பொருள் இருப்பதாக நச்சினார்க்கினியர் கூறுவர் காண்க. |