பக்கம் எண் : 39
  

பதிப்புரை


     சிவஞான முனிவர் திருநெல்வேலிப் பாபநாசத்துக்கு அருகில் உள்ள
விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்தவர்; சைவ வேளாள மரபினர். அவருடைய தந்தையின்
பெயர் ஆனந்தக்கூத்தர்; தாயின் பெயர் மயிலம்மை. சிவஞான முனிவரின்
பிள்ளைப்பெயர் முக்களாலிங்கம். இப்பெயரை முக்காளலிங்கம் என்று50 பிழையாகக்
குறிப்பிடுவோரும் உண்டு. இப்பெயரின் வரலாற்றைப் பழநியப்பனார்51 விரிவாகக்
கூறுவார். அவர் இளமையிலேயே தீக்கை பெற்றவர்; சிவஞானம் என்ற தீக்கைப்பெயரே
நாளடைவில் சிவஞானத் தம்பிரான் என்றும் சிவஞான யோகிகள் என்றும் வழங்கிப்
பின்னாளில் சிவஞான முனிவர் என்று புலமை உலகில் நிலையாக நின்றுவிட்டது.
அவருடைய காலத்தைப் பற்றி முரண்பட்ட கருத்துகள்52 நிலவினாலும் அவரைப்
பதினெட்டாம் நூற்றாண்டினராகக் கொள்வதே பொருத்தம். முகவை இராமாநுச
கவிராயரின் ஆசிரியராகிய சோமசுந்தர கவிராயர் முனிவரின் மாணவர் என்ற செய்தி
இம்முடிபை உறுதிப்படுத்தும். முனிவர் வாழ்நாள் முழுதும் சமயப் பணியும் தமிழ்ப்
பணியும் ஆற்றிய சிவநெறிச் செல்வர். நல்ல மாணவர் பரம்பரையை உருவாக்கிய தமிழ்ப்
புலவர். திருவாவடுதுறையிலும் காஞ்சிபுரத்திலும் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக்
கழித்த சிவஞான முனிவர் சாலிவாகன சகாப்தம் 1708-இல் (கி.பி. 1785) இறைவன் மலரடி
சேர்ந்தார் என்று53 நம்பப்படுகிறது.

     தமிழோடு வடமொழியையும் முற்றக் கற்றுத் தெளிந்த முனிவர் தமிழ் மொழிக்கு
ஆற்றிய பணிகள் மிகப் பல. அவர் பல நூல்களைப் படைத்தார்; பல உரைகளை
இயற்றினார்; வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார். முனிவரின் பெயரில்
மொத்தத்தில் இருபத்தொன்பது நூல்கள் உள்ளன. நல்ல சிற்றிலக்கிய நூல்களை முனிவர்
படைத்திருந்தாலும் அவர் வரைந்த உரைநூல்களே அவருக்குப் பேரும் புகழும் ஈட்டித்
தந்தன. அவற்றுள் தொல்காப்பியச் சூத்திர விருத்தியும் சிவஞான மாபாடியமும்
தலையாயவை. முனிவரின் இலக்கியப் பயிற்சி, இலக்கணப் புலமை, சமயநூல் அறிவு,
வாதத் திறமை, நடை நலம் முதலியவற்றை எடுத்துரைக்க இப்பேருரைகளே அமையும்.
18-ஆம் நூற்றாண்டு உரைநடை வரலாற்றின் நாயகர் சிவஞான முனிவரே. தெளிவும்
திட்பமும் மிடுக்கும் துடிப்பும் கொண்ட நடையில் சிற்றுரை பேருரைகளை இயற்றி
இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற முனிவரை உரைத் தலைவர் என்று
-----------------------------
     50மு. வை. அரவிந்தன், 1968. பக். 416; 1995. பக். 531; எம். சுந்தரேசம்
பிள்ளை, நன்னூல் விருத்தியுரை, திருப்பனந்தாள், 1969. பக். 8; க.ப.
அறவாணன், 1977. பக். 152.
     51கி. பழநியப்பனார், மாதவச் சிவஞான யோகிகள், (திருக்கோயில், 25-3),
1983. பக். 3.
     52க. விநாயகம், 1991. பக். 10.
     53காஞ்சிப்புராணம், கலாரத்நாகரம், சென்னை, 1910. பக். 29;
கா. சுப்பிரமணிய பிள்ளை, சிவஞான சுவாமிகள் வரலாறு, கழகம், சென்னை,
1955. பக். 12.