பக்கம் எண் : 43
  

பதிப்புரை


முனிவர் செய்த திருத்தங்களா அல்லது ஏடு பெயர்த்து எழுதியோரால் நேர்ந்துள்ள பாட
வேறுபாடுகளும் இந்தப் பகுதிகளில் கலந்துள்ளனவா என்பது ஆராயப்பட வேண்டும்.
சிவஞான முனிவர் தமது கைப்படத் திருத்திய ஏடு திருவாவடுதுறை ஆதீன
நூல்நிலையத்தில்63 இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஏட்டைச் சங்கர
நமச்சிவாயரின் உரை ஏடுகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தாலன்றி முடிவு கூற முடியாது.

     முனிவர் வரைந்துள்ள புத்துரைகளும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல.
அவை வலிந்து கொள்ளப்பட்டன; வடமொழிச் சார்பின என்பதே பெரும்பாலோர்
கருத்து. எழுத்தியலில், “அவ்வாறு பொருள் கொண்டு உதாரணம் காட்டுமாற்றால்
பெரும் பயன் இன்மையானும் வடநூலோடு மாறுபடும் ஆதலானும் அது
பொருந்தாது என்க.”
(நன். 125) என்று முனிவர் வரைந்துள்ள உரையே இதை
உறுதிப்படுத்தும். முனிவர் செய்த திருத்தங்களை எல்லாம் நுணுகி நோக்கினாலன்றி
அவற்றை மதிப்பீடு செய்ய முடியாது. எந்தெந்த இடங்களில் முனிவரின் திருத்தங்கள்
அமைந்துள்ளன? அவற்றின் குணக் குற்றங்கள் என்னென்ன என்பவற்றை அறிவதற்குச்
சிவஞான முனிவர் செய்த திருத்தங்கள்; ஒரு கண்ணோட்டம் என்ற பின்னிணைப்பு
ஓரளவு உதவும்.

     சிவஞான முனிவர் திருத்தி எழுதியதுபோல, “ஓர் உரைக்குப் பின் கூட்டியும்
குறைத்தும் பிற்காலத்தார் விளக்கி எழுதியுள்ள உரைகளை வடமொழியிற் பரக்கக்
காணலாம்.”
என்று சாமிநாதையரும் (1925. முகவுரை பக். 3) சங்கர நமச்சிவாயருக்கும்
சிவஞான முனிவருக்கும் இருந்துவந்த ஆதீனத் தொடர்பால் முனிவர் அவ்வாறு
திருத்தினார் என்று தண்டபாணி தேசிகரும் (1957. முகவுரை பக். 8; 1971. பக். 2)
சிவஞான முனிவரின் திருத்தப் பணியை நியாயப்படுத்துவார்கள். என்றாலும் இந்த
முயற்சி மூலப்பாடத் திறனாய்வுக்கும் புலமை நேர்மைக்கும் பொருந்துமா என்பது நன்கு
ஆராயப்பட வேண்டும்.

     ஒருவர் உரைக்க மேனிலை விளக்கமாக இன்னொருவர் குறிப்புரை எழுதுவது
தமிழில் மிகவும் குறைவு. திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு 16-ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த காரிரத்தின கவிராயர் நுண்பொருள் மாலை என்ற பெயரில் அரிய உரை
விளக்கக் குறிப்புகளை எழுதினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆ. பூவராகம்பிள்ளை
சொல்லதிகாரம் சேனாவரையர் உரைக்கு ஒரு உரை விளக்கம் எழுதினார்.
-------------------------
     63சாமிநாதையர், 1925. முகவுரை பக். 3; உ. வே. சாமிநாதையர், என்
சரித்திரம், சென்னை, 1950. பக். 559; தண்டபாணி தேசிகர், 1957. முகவுரை பக்.
9; 1971. பக். 4.