பக்கம் எண் : 44
  

பதிப்புரை


இவை இரண்டும் நல்ல காலமாகத் தனித்தனி நூல்களாக64 அமைந்தன. அதற்கு மாறாக
அந்த மேனிலை விளக்கங்களை அந்தந்த உரைகளில் இடைமடுத்து எழுதிச்
சேர்த்துவிட்டு, அந்நூல்களுக்குத் தாங்களே புத்துரை இயற்றியதாக அவர்கள் உரிமை
கொண்டாடவில்லை; கொண்டாடவும் முடியாது. சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு இயற்றிய
உரை அவருடைய அறிவாற்றலின் விளைவு; அவருடைய அறிவுடைமை; அறிவால்
ஆக்கிய உடைமை. அவர் உரையில் முனிவர் சில திருத்தங்களைச் செய்து, அதற்குப்
புத்தம் புத்துரை என்று பெயர் சூட்டி உரிமை கொண்டாட எண்ணியிருந்தால் அது
எவ்வகையிலும் பொருந்தாது. ஒரு உரைப்பாடத்தை இவ்வாறு கூட்டிக் குறைத்துத்
திருத்துவதை மூலபாடத் திறனாய்வும் அனுமதிப்பதில்லை. இவற்றை எல்லாம் ஆழ்ந்து
நோக்கினால் புத்தம் புத்துரையை மதிப்பிடுவதில் புதிய அணுகுமுறை தேவை என்பது
புலப்படாமல் போகாது.

     சங்கர நமச்சிவாயர் உரையில் ஒருசில பகுதிகளுக்கே முனிவரின் திருத்தம்
காணப்படுகிறது. அவற்றுள்ளும் பெரும்பாலான திருத்தங்கள் சிறிய அளவின. காட்டாக
எழுத்ததிகாரத்தின் இறுதி இயல்கள் மூன்றிலும் அவர் செய்துள்ள திருத்தங்களைக்
குறிப்பிடலாம். இப்பகுதியில் இரண்டு நூற்பாக்களைத் தவிர (நன். 182, 194) முனிவர்
செய்த திருத்தங்கள் அனைத்தும் நூற்பா நுதலும் பொருளைக் கூறும் பகுதிகளில்
மட்டுமே காணப்படுகின்றன. குறிப்பளவில் அமைந்துள்ள இத்தகைய
திருத்தக்குறிப்புகளை யாரும் எளிதில் எழுதலாம். உதாரணமாகத், “தனிக்குறின்
முன்னொற்று”
(நன். 205) என்னும் சூத்திரம் நுதலும் பொருளை “எய்தியதன்மேல்
சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.”
என்று சங்கர நமச்சிவாயர் விளக்குவார்.
இப்பகுதியை, “உடன்மே லுயிர்வந் தொன்றுவது என்னும் சூத்திரத்தான்
எய்தியதன்மேல் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று”.
என்று யாரேனும்
திருத்தலாம். இதுபோல நிகழ்கால இடைநிலைகளைத் தொகுத்துக் கூறும் நூற்பாவில்
சங்கர நமச்சிவாயர், “தருவினையை, ‘அறைவினை’ என்றது இலக்கணை. மேலைச்
சூத்திரத்தில் வருவதும் அது.”
(நன். 143) என்று நயவுரை கூறி விளக்குவார்.
இப்பகுதியைத், “தருவினையை, ‘அறைவினை’ என்றது இலக்கணை. மேலைச்
சூத்திரத்தில், “இசைவினை” என வருவதும் அது.”
என்றும் ஒருவர் திருத்த
முற்படலாம்.
----------------------------
     64இ. சுந்தரமூர்த்தி, திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய
திருக்குறள் பரிமேலழகர் உரை நுண்பொருள் மாலை, தேன்மொழி நூலகம்,
சென்னை, 1980; ஆ. பூவராகம் பிள்ளை, தொல்காப்பியம் சொல்லதிகாரம்
சேனாவரையம் விளக்கவுரை, கழகம், சென்னை, 1954.