தொடக்கம்   முகப்பு
141 - 150 ஞாழற்பத்து
141
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பசலை செய்தன பனி படு துறையே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 1
142
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படு சினைப்
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி! படீஇயர் என் கண்ணே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயி றற் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2
143
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை,
இனிய செய்த; நின்று, பின்
முனிவு செய்த இவள் தட மென் தோளே.
புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 3
144
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த்
தனிக் குருகு உறங்கும் துறைவற்கு
இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே.
'தலைமகன் வரைந்து கோடல் நினையாது, களவொழுக்கமே விரும்பி ஒழுகாநின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாது ஒழியவேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. 4
145
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ் சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன், இனியே!
வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றால் சான்றோரைத் தலைமகன் விடுத்தது அறிந்த தோழி தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது. 5
146
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனியமன்ற என் மாமைக் கவினே.
வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, நம்மை எவ்வகை நினைத்தார் கொல்லோ?' என்று ஐயுற்றிருந்த தலைமகள் வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது. 6
147
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்
'தண் தழை விலை' என நல்கினன், நாடே.
சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிப்படுத்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத்தாளாய்த் தலைமகட்குச் சொல்லியது. 7
148
எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ் சினை
வீ இனிது கமழும் துறைவனை
நீ இனிது முயங்குமதி, காதலோயே!
களவொழுக்கத்தின் விளைவு அறியாது அஞ்சிய வருத்தம் நீங்க வதுவை கரண வகையான் முடித்த பின்பு, தலைமகளைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி சொல்லியது. 8
149
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து, அகறல் வல்லாதீமோ!
வரைந்து எய்திய தலைமகன் தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது. 9
150
எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ் சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான்; அரும் புணர்வினனே.
முன் ஒருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்து வந்துழி அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?' என்று வினவியவழி, தலைமகள் தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது. 10
மேல்