தொடக்கம்   முகப்பு
251 - 260 குன்றக்குறவன்பத்து
251
குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி
நுண் பல் அழி துளி பொழியும் நாட!
நெடு வரைப் படப்பை நும் ஊர்க்
கடு வரல் அருவி காணினும் அழுமே.
வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1
 
252
குன்றக் குறவன் புல் வேய் குரம்பை
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி, தோழி! விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்ப்
5
பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்துக்கு முன்னே வந்தானாக, உவந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 2
 
253
குன்றக் குறவன் சாந்த நறும் புகை
தேம் கமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின்,
மன்றலும் உடையள்கொல் தோழி! யாயே?
'வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவொடு புகுதராநின்றான்' என்பது தோழி கூறக் கேட்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 3
 
254
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென,
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள்!
கொண்டனர், செல்வர் தம் குன்று கெழு நாட்டே.
உடன்போக்கு உடன்பட வேண்டிய தோழி தலைமகட்குச் சொல்லியது. 4
 
255
குன்றக் குறவன் காதல் மட மகள்
வரையர மகளிர்ப் புரையும் சாயலள்;
ஐயள்; அரும்பிய முலையள்;
செய்ய வாயினள்; மார்பினள், சுணங்கே.
'நின்னால் காணப்பட்டவள் எத்தன்மையள்?' என்ற பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 5
 
256
குன்றக் குறவன் காதல் மட மகள்
வண்டு படு கூந்தல் தண் தழைக் கொடிச்சி;
வளையள்; முளை வாள் எயிற்றள்;
இளையள் ஆயினும், ஆர் அணங்கினளே.
'நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தாள் அல்லள்' என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 6
 
257
குன்றக் குறவன் கடவுள் பேணி,
இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள்
ஆய் அரி நெடுங் கண் கலிழ,
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே.
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி உடன்படாது கூறியது. 7
 
258
குன்றக் குறவன் காதல் மட மகள்
அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப்
பெரு வரை நாடன் வரையும் ஆயின்,
கொடுத்தனெம் ஆயினோ நன்றே
5
இன்னும் ஆனாது, நன்னுதல் துயரே.
வரைவு வேண்டிவிட மறுத்துழித் தமர்க்கு  ப்பாளாய், வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி, அவன் மலை காண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லியது. 8
 
259
குன்ற குறவன் காதல் மட மகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டு,
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி,
தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்;
5
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே.
வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு, 'இனி அது கடுக முடியும்' என உவந்த உள்ளத்தனாய், தன்னுள்ளே சொல்லியது. 9
 
260
குன்றக் குறவன் காதல் மட மகள்,
மென் தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல
பைம் புறப் படு கிளி ஓப்பலர்;
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே!
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி, 'இனிப் புனங்காவற்கு வாரோம்' எனக்கூறி வரைவு கடாயது. 10
 
மேல்