தொடக்கம்   முகப்பு
331 - 340 தலைவியிரங்குபத்து
331
அம்ம வாழி, தோழி! அவிழ் இணர்க்
கருங் கால் மராஅத்து வைகு சினை வான் பூ
அருஞ் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள,
இனிய கமழும் வெற்பின்
5
இன்னாது என்ப, அவர் சென்ற ஆறே.
தலைமகன் பிரிந்துழி, 'செல்லும் வழியிடத்து மலையின் உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைத்து முடியச் செல்லார், மீள்வரோ?' எனக் கேட்ட தலைவிக்கு, 'அவர் முடியச் சென்றார்' என்பது அறிந்து, இரங்கித் தோழி கூறியது. 1
 
332
அம்ம வாழி, தோழி! என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே விறல் மிசைக்
குன்று கெழு கானத்த பண்பு இல் மாக் கணம்,
'கொடிதே காதலிப் பிரிதல்;
5
செல்லல், ஐய! என்னாதவ்வே.
பிரிந்த தலைமகன், 'சுரத்திடைக் கழியச் சென்றான்' என்பது கேட்ட தலைமகள் அங்குள்ள மாக்களை நொந்து, தோழிக்குச் சொல்லியது. 2
 
333
அம்ம வாழி, தோழி! யாவதும்
வல்லா கொல்லோ தாமே அவண
கல்லுடை நல் நாட்டுப் புள்ளினப் பெருந் தோடு,
'யாஅம் துணை புணர்ந்து உறைதும்;
5
யாங்குப் பிரிந்து உறைதி!' என்னாதவ்வே?
புட்களை நொந்து சொல்லியது. 3
 
334
அம்ம வாழி, தோழி! சிறியிலை
நெல்லி நீடிய கல் காய் கடத்திடை,
பேதை நெஞ்சம் பின் செல, சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
5
பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே.
பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4
 
335
அம்ம வாழி, தோழி! நம்வயின்
நெய்த்தோர் அன்ன செவிய எருவை
கற்புடை மருங்கில் கடு முடை பார்க்கும்
காடு நனி கடிய என்ப
5
நீடி இவண் வருநர் சென்ற ஆறே.
தலைமகன் சென்ற சுரத்தினிடத்துக் கொடுமை பிறர் கூறக்கேட்ட தலைமகள் ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 5
 
336
அம்ம வாழி, தோழி! நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றது இல் பொருள் பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே.
பிரிவதற்கு முன்பு தங்களுடன் அவன் ஒழுகிய திறம் நினைந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6
 
337
அம்ம வாழி, தோழி! நம்வயின்
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனி இருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.
தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழி, தன் முயக்கினும் அவற்குப் பிற்காலத்துப் பொருள் சிறந்தது எனத் தலைவி இரங்கித் தோழிக்குச் சொல்லியது. 7
 
338
அம்ம வாழி, தோழி! சாரல்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்
மலை உறு தீயின் சுரமுதல் தோன்றும்
பிரிவு அருங் காலையும், பிரிதல்
5
அரிது வல்லுநர் நம் காதலோரே.
தலைமகன் பிரிந்துழி. 'இக் காலத்தே பிரிந்தார்' எனத் தலைமகள் இரங்கிச் சொல்லியது. 8
 
339
அம்ம வாழி, தோழி! சிறியிலைக்
குறுஞ் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல், தோழி! அவர் சென்ற நாட்டே?
தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு, ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9
 
340
அம்ம வாழி, தோழி! காதலர்
உள்ளார்கொல்? நாம் மருள் உற்றனம்கொல்?
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே.
தலைமகள் பிரிந்துழி, 'கடிதின் வருவர்' என ஆற்றியிருந்த தலைவி, அவன் நீட்டித்துழி, ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 10
 
மேல்