தொடக்கம்   முகப்பு
341 - 350 இளவேனிற்பத்து
341
அவரோ வாரார்; தான் வந்தன்றே
குயில் பெடை இன் குரல் அகவ,
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே!
தலைமகன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைமகள் சொல்லியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 
342
அவரோ வாரார்; தான் வந்தன்றே
சுரும்பு களித்து ஆலும் இருஞ் சினைக்
கருங் கால் நுணவம் கமழும் பொழுதே! 2
 
343
அவரோ வாரார்; தான் வந்தன்றே
திணி நிலைக் கோங்கம் பயந்த
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே! 3
 
344
அவரோ வாரார்; தான் வந்தன்றே
நறும் பூங் குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே! 4
 
345
அவரோ வாரார்; தான் வந்தன்றே
புதுப் பூ அதிரல் தாஅய்க்
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே! 5
 
346
அவரோ வாரார்; தான் வந்தன்றே
அம் சினைப் பாதிரி அலர்ந்தென,
செங் கண் இருங் குயில் அறையும் பொழுதே! 6
 
347
அவரோ வாரார்; தான் வந்தன்றே
எழில் தகை இள முலை பொலியப்
பொரிப் பூம் புன்கின் முறி திமிர் பொழுதே! 7
 
348
அவரோ வாரார்; தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து, நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே! 8
 
349
அவரோ வாரார்; தான் வந்தன்றே
பொரி கால் மாஞ் சினை புதைய
எரி கால் இளந் தளிர் ஈனும் பொழுதே! 9
 
350
அவரோ வாரார்; தான் வந்தன்றே
வேம்பின் ஒண் பூ உறைப்ப,
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே! 10
 
மேல்