தொடக்கம்   முகப்பு
441 - 450 பாசறைப்பத்து
441
ஐய ஆயின, செய்யோள் கிளவி;
கார் நாள் உருமொடு கையறப் பிரிந்தென,
நோய் நன்கு செய்தன எமக்கே;
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே.
சென்ற வினை முடியாமையின், கார்காலம் வந்த இடத்து, மீளப் பெறாத தலைமகன்,தலைமகள் உழைநின்றும் வந்த தூதர் வார்த்தை கேட்டு, இரங்கியது. 1
 
442
பெருஞ் சின வேந்தன் அருந் தொழில் தணியின்,
விருந்து நனி பெறுதலும் உரியள்மாதோ
இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின்,
5
குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே.
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடியாமையின், பாசறைக்கண் இருந்து பருவ வரவின்கண் சொல்லியது. 2
 
443
நனி சேய்த்து என்னாது, நற்றேர் ஏறிச் சென்று,
இலங்கு நிலவின் இளம் பிறை போலக்
காண்குவெம் தில்ல, அவள் கவின் பெறு சுடர் நுதல்
விண் உயர் அரண் பல வௌவிய
5
மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே.
இதுவும் அது. 3
 
444
பெருந் தோள் மடவரல் காண்குவெம் தில்ல
நீள் மதில் அரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து
வைந் நுதி மழுகிய தடங் கோட்டு யானை,
வென் வேல், வேந்தன் பகை தணிந்து,
5
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே.
இதுவும் அது. 4
 
445
புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பத்
துறந்து வந்தனையே, அரு தொழில் கட்டூர்
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை
உள்ளுதொறும் கலிழும் நெஞ்சம்!
5
வல்லே எம்மையும் வர இழைத்தனையே!
பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் தலைமகளை நினைந்து, நெஞ்சொடு புலந்து சொல்லியது. 5
 
446
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவம், மாஅயோயே!
பாசறை அருந் தொழில் உதவி, நம்
காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே.
பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் உருவு வெளிப்பாடு கண்டு சொல்லியது. 6
 
447
பிணி வீடு பெறுக, மன்னவன் தொழிலே!
பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை,
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப,
பாடு சான்ற; காண்கம், வாணுதலே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவண் வினைமுற்றி மீளும் வேட்கையனாய், பருவ வரவின்கண் தலைமகளை நினைத்துச் சொல்லியது. 7
 
448
தழங்குரல் முரசம் காலை இயம்ப,
கடுஞ் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே;
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே;
5
அம் சில் ஓதியை உள்ளுதொறும்,
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே.
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் பருவம் வந்த இடத்தினும் மீளப் பெறாது, அரசன் செய்தியும், பருவத்தின் செய்தியும், தன் செய்தியும், கூறி ஆற்றானாயது. 8
 
449
முரம்பு கண் உடையத் திரியும் திகிரியொடு
பணை நிலை முணைஇய வயமாப் புணர்ந்து,
திண்ணிதின் மாண்டன்று தேரே;
ஒண்ணுதல் காண்குவம், வேந்து வினை விடினே.
பாசறைக்கண் வேந்தனொடு வினைப் பொருட்டால் போந்திருந்த தலைமகன் அவ் வேந்தன் மாற்று வேந்தர் தரு திறைகொண்டு மீள்வானாகப் பொருந்துழி, தானும் மீட்சிக்குத் தேர் சமைத்த எல்லைக்கண்ணே, அவ் அரசன், பொருத்தம் தவிர்ந்து மீண்
 
450
முரசு மாறு இரட்டும் அருந் தொழில் பகை தணிந்து
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்;
வெய்ய உயிர்க்கும் நோய் தணிய,
செய்யோள் இளமுலைப் படீஇயர், என் கண்ணே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முற்றாமையின், பாசறைக்கண் இருந்து, தன் மனக்கருத்து  த்தது. 10
 
மேல்