தொடக்கம்   முகப்பு
வேழப்பூ
16
ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக் கஞல் ஊரனை உள்ளி,
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே.
வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது. 6

 
17
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே.
தலைமகன் பரத்தையிற் பிரிந்த வழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7

 
19
எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை,
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்,
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி,
5
மாரி மலரின் கண் பனி உகுமே.
'பல் நாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சில் நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. 9

 
மேல்