ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்  


14.மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும்
   ஒருங்கு கூறி வாழ்த்துதல்

நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்
அளப்பு அரியையே;
நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;
போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு  
5
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப!
கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே;
10
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை!
வான் உறை மகளிர், நலன், இகல் கொள்ளும்;
வயங்கு இழை கரந்த, வண்டு படு கதுப்பின்;
ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ!  
15
பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படை ஏர் உழவ! பாடினி வேந்தே!
இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக்
கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல, நின்று நீ  
20
கெடாஅ நல் இசை நிலைஇத்
தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு

வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு
பெயர்:சான்றோர் மெய்ம்மறை
உரை
 

19.அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு
   நிகழ்ந்த இன்பச் சிறப்பும்

கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர்
கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப,
ஒண் பொறிக் கழல் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப,
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய   
5
உருவச் செந் தினை குருதியொடு தூஉய்,
மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர்,
கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச,
வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து,
அவ் வினை மேவலை: ஆகலின்,  
10
எல்லு நனி இருந்து, எல்லிப் பெற்ற
அரிது பெறு பாயல் சிறு மகிழானும்
கனவினுள் உறையும், பெருஞ் சால்பு, ஒடுங்கிய
நாணு மலி யாக்கை, வாள் நுதல் அரிவைக்கு
யார் கொல்? அளியை
15
இனம் தோடு அகல, ஊருடன் எழுந்து;
நிலம் கண் வாட, நாஞ்சில் கடிந்து; நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்
அன்ன ஆயின; பழனம் தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து,
20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப,
அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த,
'இன்றோ அன்றோ; தொன்று ஓர் காலை
நல்லமன் அளியதாம்!' எனச் சொல்லி,
25
காணுநர் கை புடைத்து இரங்க,
மாணா மாட்சிய மாண்டன பலவே!

துறை:பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:வளன் அறு பைதிரம்
உரை
 

20.மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்

'நும் கோ யார்?' என வினவின், எம் கோ
இரு முந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின முன்பின்,
நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி!
5
வாய்ப்பு அறியலனே, வெயில் துகள் அனைத்தும்,
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே;
கண்ணின் உவந்து, நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே,
கனவினும்; ஒன்னார் தேய, ஓங்கி நடந்து,  
10
படியோர்த் தேய்த்து, வடி மணி இரட்டும்
கடாஅ யானைக் கண நிரை அலற,
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து,
புலவர் ஏத்த, ஓங்கு புகழ் நிறீஇ,
விரிஉளை மாவும், களிறும், தேரும்,
15
வயிரியர், கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
நெடு மதில், நிலை ஞாயில்,
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை, அட்டு மலர் மார்பன்;
20
எமர்க்கும், பிறர்க்கும், யாவர்ஆயினும்,
பரிசில் மாக்கள் வல்லார்ஆயினும்,
கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;
மன் உயிர் அழிய, யாண்டு பல மாறி,
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்,  
25
வயிறு பசி கூர ஈயலன்;
வயிறு மாசு லீஇயர், அவன் ஈன்ற தாயே!

துறை:இயல் மொழி வாழ்த்து
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:அட்டு மலர் மார்பன்   
உரை
 

22.வென்றிச் சிறப்பு

சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை,
தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்:
தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து,  
5
கடலும் கானமும் பல பயம் உதவ;
பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது,
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்
அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய;  
10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!
பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச்
சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல்,
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த,
15
வேல் கெழு தானை, வெருவரு தோன்றல்!
உளைப் பொலிந்த மா,
இழைப் பொலிந்த களிறு,
வம்பு பரந்த தேர்,
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு,
20
துஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை,
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழுச் சீர் ஐயவி,
கடி மிளைக் குண்டு கிடங்கின்,
நெடு மதில் நிரைப் பதணத்து,
25
அண்ணல்அம் பெருங் கோட்டு அகப்பா எறிந்த,
பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ!
போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும்,
நீர்த்தரு பூசலின் அம்பு அழிக்குநரும்,
ஒலித் தலை விழவின் மலியும் யாணர்  
30
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்,
குட திசை மாய்ந்து, குண முதல் தோன்றி,
பாய் இருள் அகற்றும், பயம் கெழு பண்பின்,
ஞாயிறு கோடா நன் பகல் அமையத்து,
கவலை வெண் நரி கூஉம் முறை பயிற்றி,
35
கழல்கண் கூகைக் குழறு குரற் பாணிக்
கருங் கண் பேய்மகள் வழங்கும்
பெரும் பாழ் ஆகும்மன்; அளிய, தாமே!

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:கயிறு குறு முகவை 
உரை
 

25.வென்றிச் சிறப்பு

மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா;
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா;
நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி,
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா;
5
கடுங் கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்து,
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்,
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய
உரும் உறழ்பு இரங்கு முரசின், பெரு மலை  
10
வரை இழி அருவியின், ஒளிறு கொடி நுடங்க,
கடும் பரிக் கதழ் சிறகு அகைப்ப, நீ
நெடுந் தேர் ஓட்டிய, பிறர் அகன் தலை நாடே.

துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:கான் உணங்கு கடு நெறி   
உரை
 

26. வென்றிச் சிறப்பு

தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா;
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா;
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா;
ஆங்கு, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்
நோகோ யானே  நோதக வருமே!
5
பெயல் மழை புரவு இன்றுஆகி, வெய்துற்று,
'வலம் இன்று அம்ம, காலையது பண்பு!' என,
கண் பனி மலிர் நிறை தாங்கி, கைபுடையூ,
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர,
பீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக்  
10
காடுறு கடு நெறி ஆக மன்னிய
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்,
உரும்பு இல் கூற்றத்து அன்ன, நின்
திருந்து தொழில், வயவர் சீறிய நாடே.

துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்

பெயர்:காடுறு கடு நெறி 
உரை
 

50.மன்னவனது காம வேட்கையினும் அவன் போர்
   வேட்கையை மிகுத்துக் கூறுதல்

மா மலை, முழக்கின் மான் கணம் பனிப்ப,
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி,
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய;
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ,
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக்
5
காவிரி யன்றியும், பூ விரி புனல் ஒரு
மூன்று உடன் கூடிய கூடல் அனையை!
கொல்களிற்று உரவுத் திரை பிறழ, அவ் வில் பிசிர,
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர,
விரவுப் பணை முழங்கு ஒலி, வெரீஇய வேந்தர்க்கு
10
அரணம் ஆகிய, வெருவரு புனல் தார்
கல் மிசையவ்வும், கடலவும், பிறவும்,
அருப்பம் அமைஇய அமர் கடந்து, உருத்த
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து,
நல் இசை நனந் தலை இரிய, ஒன்னார்  
15
உருப்பு அற நிரப்பினை: ஆதலின், சாந்து புலர்பு,
வண்ணம் நீவி, வகை வனப்புற்ற,
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து,
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து,
20
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ,
எவன் பல கழியுமோ பெரும! பல் நாள்,
பகை வெம்மையின், பாசறை மரீஇ,
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது,
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும்
25
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே?

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:வெருவரு புனல் தார் 
உரை
 

51.மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக்
   கடுமையும் உடன் கூறுதல்

துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர,
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்
கடல் சேர் கானல் குட புலம் முன்னி,
வல் துழந்த தடந் தாள் நாரை
குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும்,
5
வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,
தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து,
இயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள்
10
வெறி உறு நுடக்கம் போலத் தோன்றி,
பெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணி
அர வழங்கும், பெருந் தெய்வத்து,
வளை ஞரலும் பனிப் பௌவத்து,
குண குட கடலோடு ஆயிடை மணந்த
15
பந்தர் அந்தரம் வேய்ந்து,
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாடுடன் கமழ,
சுடர் நுதல், மட நோக்கின்,
வாள் நகை, இலங்குஎயிற்று,
20
அமிழ்து பொதி துவர் வாய், அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்,
'வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என,
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?
மழை தவழும் பெருங் குன்றத்து,
25
செயிருடைய அரவு எறிந்து,
கடுஞ் சினத்த மிடல் தபுக்கும்
பெருஞ் சினப் புயல் ஏறு அனையை;
தாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்
எஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்;  
30
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து,
நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப,
தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை
கை வல் இளையர் கை அலை அழுங்க,
மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம்
35
வலை விரித்தன்ன நோக்கலை;
கடியையால், நெடுந்தகை செருவத்தானே.

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:வடு அடு நுண் அயிர
உரை
 

69.மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி
   வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்

மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி,
வரைமிசை அருவியின் வயின் வயின் நுடங்க,
கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம்
கால் உறு கடலின் கடிய உரற,
எறிந்து சிதைந்த வாள், 
5
இலை தெரிந்த வேல்,
பாய்ந்து ஆய்ந்த மா,
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படுபிணம் பிறங்க நூறி, பகைவர்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே! 
10
நின்போல், அசைவு இல் கொள்கையர் ஆகலின், அசையாது
ஆண்டோர் மன்ற, இம் மண் கெழு ஞாலம்
நிலம் பயம் பொழிய, சுடர் சினம் தணிய,
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப,
விசும்பு மெய் அகல, பெயல் புரவு எதிர,  
15
நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த,
இலங்கு கதிர்த் திகிரி நின் முந்திசினோரே.

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:மண் கெழு ஞாலம் 
உரை
 

71.வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல்
   அருள் பிறப்பித்தல்

அறாஅ யாணர் அகன் கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து,
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை,
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்தாங்கு,
5
கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின்,
அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே:
ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ,
போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப,   
10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்
குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில்
ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து,
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப,
15
மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ,
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க,
பதி பாழாக வேறு புலம் படர்ந்து,
விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென,
அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல்
20
பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர்,
மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின்,
பலி கொண்டு பெயரும் பாசம் போல,
திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி,
25
அறிந்தனை அருளாய்ஆயின்,
யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:குறுந் தாள் ஞாயில்
உரை
 

82.வென்றிச் சிறப்பு

பகை பெருமையின், தெய்வம் செப்ப,
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்,
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி,
5
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல;
மறவர் மறல; மாப் படை உறுப்ப;
தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப;
காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை
இன்ன வைகல் பல் நாள் ஆக  
10
பாடிக் காண்கு வந்திசின், பெரும!
பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்து, செற்றோர்
கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர்
வண்மையும், செம்மையும், சால்பும், மறனும்,
புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை,
15
நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே.

துறை:
காட்சி வாழ்த்து
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:வினை நவில் யானை
உரை
 

90.மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும்,
சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்

மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப,
அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்று,
கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா                    5

ஒளிறு வாள் வய வேந்தர்
களிறொடு கலம் தந்து,
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
அகல் வையத்து பகல் ஆற்றி,
மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர,                 10

வாள் வலியுறுத்து, செம்மை பூஉண்டு,
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக!
ஈரம் உடைமையின், நீர் ஓரனையை;
அளப்பு அருமையின், இரு விசும்பு அனையை;             15

கொளக் குறைபடாமையின், முந்நீர் அனையை;
பல் மீன் நாப்பண் திங்கள் போல,
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உரு கெழு மரபின் அயிரை பரவியும்,
கடல் இகுப்ப வேல் இட்டும்,                           20

உடலுநர் மிடல் சாய்த்தும்,
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி,
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே!                     25

மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை!
இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந!
வெண் பூ வேளையொடு சுரை தலை மயக்கிய
விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே!                  30

உரவுக் கடல் அன்ன தாங்கு அருந் தானையொடு,
மாண் வினை! சாபம் மார்புற வாங்கி,
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை,
வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின்,
மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில்,                35

ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு,
காழ் எஃகம் பிடித்து எறிந்து,
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை,
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே!               40

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்,
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்,
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி,
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க,
கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப,                  45

செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக்,
காவிரிப் படப்பை நல் நாடு அன்ன,
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆறிய கற்பின், தேறிய நல் இசை,
வண்டு ஆர் கூந்தல், ஒண்தொடி கணவ!                 50

'நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள்
யாண்டு ஓரனைய ஆக! யாண்டே
ஊழி அனைய ஆக! ஊழி
வெள்ள வரம்பின ஆக! என உள்ளி,
காண்கு வந்திசின், யானே செரு மிக்கு                  55

உரும் என முழங்கும் முரசின்,
பெரு நல் யானை, இறை கிழவோயே!

துறை:காட்சி வாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:வலி கெழு தடக் கை

உரை