முகப்பு    

 ஆம்பல் 


13
13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும்

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,
ஏறு பொருத செறு உழாது வித்துநவும்,
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங் கண் எருமை நிரை தடுக்குநவும்,
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்  
5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்,
ஒலி தெங்கின், இமிழ் மருதின்,
புனல் வாயில், பூம் பொய்கை,
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்,
நாடு கவின் அழிய, நாமம் தோற்றி;   
10
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல,
நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்
விரி பூங் கரும்பின் கழனி புல்லென,
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி,
கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க,
15
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து
உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து,
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே.
காடே கடவுள் மேன; புறவே   
20
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன;
ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடி புறந்தராஅ,
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி,
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது  
25
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப,
நோயொடு பசி இகந்து ஒரீஇ,
பூத்தன்று   பெரும! நீ காத்த நாடே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:பூத்த நெய்தல்

உரை
 
19
19.அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு
   நிகழ்ந்த இன்பச் சிறப்பும்

கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர்
கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப,
ஒண் பொறிக் கழல் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப,
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய   
5
உருவச் செந் தினை குருதியொடு தூஉய்,
மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர்,
கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச,
வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து,
அவ் வினை மேவலை: ஆகலின்,  
10
எல்லு நனி இருந்து, எல்லிப் பெற்ற
அரிது பெறு பாயல் சிறு மகிழானும்
கனவினுள் உறையும், பெருஞ் சால்பு, ஒடுங்கிய
நாணு மலி யாக்கை, வாள் நுதல் அரிவைக்கு
யார் கொல்? அளியை
15
இனம் தோடு அகல, ஊருடன் எழுந்து;
நிலம் கண் வாட, நாஞ்சில் கடிந்து; நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்
அன்ன ஆயின; பழனம் தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து,
20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப,
அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த,
'இன்றோ அன்றோ; தொன்று ஓர் காலை
நல்லமன் அளியதாம்!' எனச் சொல்லி,
25
காணுநர் கை புடைத்து இரங்க,
மாணா மாட்சிய மாண்டன பலவே!

துறை:பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:வளன் அறு பைதிரம்

உரை
 
23
23.வென்றிச் சிறப்பு

அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச்
சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து,
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்,
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து, மறுகு சிறை பாடும்  
5
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க,
பொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து,
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட,
சிறு மகிழானும் பெருங் கலம் வீசும்,
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!   
10
நின் நயந்து வருவேம் கண்டனம்: புல் மிக்கு,
வழங்குநர் அற்றென, மருங்கு கெடத் தூர்ந்து,
பெருங் கவின் அழிந்த ஆற்ற, ஏறு புணர்ந்து
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண் உயர் வைப்பின காடு ஆயின  நின்
15
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்
மணல் மலி பெருந் துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை,
20
நந்து நாரையொடு செவ் வரி உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை,
அழல் மருள் பூவின் தாமரை, வளை மகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்,
அறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே.
25

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம
தூக்கு:செந்தூக்கு
பெயர்:ததைந்த காஞ்சி   

உரை
 
27
27.வென்றிச் சிறப்பு

சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி,
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்,
சுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி
அரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர்,
5
துறை நணி மருதம் ஏறி, தெறுமார்,
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின்,
பழனக் காவில் பசு மயில் ஆலும்;
பொய்கை வாயில் புனல் பொரு புதவின்,
நெய்தல் மரபின், நிரை கள், செறுவின்
10
வல் வாய் உருளி கதுமென மண்ட,
அள்ளல் பட்டு, துள்ளுபு துரப்ப,
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச்
சாகாட்டாளர் கம்பலை அல்லது,
பூசல் அறியா நல் நாட்டு
15
யாணர் அறாஅக் காமரு கவினே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:தொடர்ந்த குவளை

உரை
 
62
62.வென்றிச் சிறப்பு

இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு,
மழை என மருளும் மா இரும் பல் தோல்,
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு
மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ,
வந்து, புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல்
5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு,
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்,
துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே!
புனல் பொரு கிடங்கின், வரைபோல் இஞ்சி,
10
அணங்குடைத் தடக் கையர் தோட்டி செப்பி,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்,
புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,
வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி,
15
அரியல் ஆர்கை வன் கை வினைநர்,
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்,
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்
பாடல் சான்ற, அவர் அகன் தலை நாடே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வரைபோல் இஞ்சி   

உரை
 
63
63.மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி
   வாழ்த்துதல்

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே;
பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ,
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே,
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே;
5
நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி,
கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து,
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி,
10
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள்
செரு மிகு தானை வெல் போரோயே;
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி,
'நீ கண்டனையேம்' என்றனர்: நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்: அதனால்,
15
செல்வக் கோவே! சேரலர் மருக!
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி
நனந் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்,
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்
ஆயிர வெள்ள ஊழி  
20
வாழி, ஆத! வாழிய, பலவே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:அருவி ஆம்பல்  

உரை
 
71
71.வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல்
   அருள் பிறப்பித்தல்

அறாஅ யாணர் அகன் கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து,
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை,
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்தாங்கு,
5
கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின்,
அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே:
ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ,
போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப,   
10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்
குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில்
ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து,
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப,
15
மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ,
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க,
பதி பாழாக வேறு புலம் படர்ந்து,
விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென,
அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல்
20
பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர்,
மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின்,
பலி கொண்டு பெயரும் பாசம் போல,
திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி,
25
அறிந்தனை அருளாய்ஆயின்,
யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:குறுந் தாள் ஞாயில்

உரை
 

    மேல்