முகப்பு    

 கரும்பு 


13
13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும்

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,
ஏறு பொருத செறு உழாது வித்துநவும்,
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங் கண் எருமை நிரை தடுக்குநவும்,
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்  
5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்,
ஒலி தெங்கின், இமிழ் மருதின்,
புனல் வாயில், பூம் பொய்கை,
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்,
நாடு கவின் அழிய, நாமம் தோற்றி;   
10
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல,
நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்
விரி பூங் கரும்பின் கழனி புல்லென,
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி,
கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க,
15
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து
உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து,
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே.
காடே கடவுள் மேன; புறவே   
20
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன;
ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடி புறந்தராஅ,
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி,
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது  
25
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப,
நோயொடு பசி இகந்து ஒரீஇ,
பூத்தன்று   பெரும! நீ காத்த நாடே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:பூத்த நெய்தல்

உரை
 
30
30.வென்றிச் சிறப்பு

இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை,
மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல்
பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை
வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும்
அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை,
                    5

தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல,
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடற் படப்பை மென்பாலனவும்;
காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர்
செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட
                     10

மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு,
பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன் புல வைப்பும்;
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது,
அரி கால் அவித்து, பல பூ விழவின்
                          15

தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று,
வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
பல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச்
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்
முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்
             20

செழும் பல் வைப்பின்  பழனப் பாலும்;
ஏனல் உழவர் வரகுமீது இட்ட
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை,
மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்;
                     25

பல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி,
அரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு,
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்;
பணை கெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து,     
30

கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க,
முரண் மிகு கடுங் குரல் விசும்பு அடைபு அதிர,
கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து
கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து
அருந் திறல் மரபின் கடவுள் பேணியர்,
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்
                35

கருங் கண் பேய்மகள் கை புடையூஉ நடுங்க,
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி,
எறும்பும் மூசா இறும்பூது மரபின்,
கருங் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர;
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழல் கால்,
                    40

பெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து,
பெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும்
கடுஞ் சின வேந்தே!  நின் தழங்கு குரல் முரசே.

துறை:பெருஞ்சோற்று நிலை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:புகன்ற ஆயம்  

உரை
 
50
50.மன்னவனது காம வேட்கையினும் அவன் போர்
   வேட்கையை மிகுத்துக் கூறுதல்

மா மலை, முழக்கின் மான் கணம் பனிப்ப,
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி,
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய;
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ,
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக்
5
காவிரி யன்றியும், பூ விரி புனல் ஒரு
மூன்று உடன் கூடிய கூடல் அனையை!
கொல்களிற்று உரவுத் திரை பிறழ, அவ் வில் பிசிர,
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர,
விரவுப் பணை முழங்கு ஒலி, வெரீஇய வேந்தர்க்கு
10
அரணம் ஆகிய, வெருவரு புனல் தார்
கல் மிசையவ்வும், கடலவும், பிறவும்,
அருப்பம் அமைஇய அமர் கடந்து, உருத்த
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து,
நல் இசை நனந் தலை இரிய, ஒன்னார்  
15
உருப்பு அற நிரப்பினை: ஆதலின், சாந்து புலர்பு,
வண்ணம் நீவி, வகை வனப்புற்ற,
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து,
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து,
20
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ,
எவன் பல கழியுமோ பெரும! பல் நாள்,
பகை வெம்மையின், பாசறை மரீஇ,
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது,
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும்
25
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே?

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:வெருவரு புனல் தார் 

உரை
 
75
75.வென்றிச் சிறப்பு

இரும் புலி கொன்று, பெருங் களிறு அடூஉம்,
அரும் பொறி வய மான் அனையை  பல் வேல்,
பொலந் தார் யானை, இயல் தேர்ப் பொறைய!
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து,
நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு,
5
அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர்,
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை,
வன் புலம் தழீஇ மென்பால் தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து,
கள்ளுடை நியமத்து ஒள் விலை கொடுக்கும்   
10
வெள் வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார், தம்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடு உடன் ஆள்தல் யாவணது, அவர்க்கே?

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:தீம் சேற்று யாணர்   

உரை
 
87
87.மன்னவன் அருட் சிறப்பு

சென்மோ, பாடினி! நன் கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து,
தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல்
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே.
5

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெண் தலைச் செம் புனல்

உரை
 

    மேல்