101
பொ. வே.சோமசுந்தரனார் உரை

பரிபாடல் திரட்டு
முதற் பாடல்
திருமால்
பொருட் சுருக்கம்:

      1 - 6: முகில் மலையின்கண் மழையை மிகுதியாகப் பொழியாநிற்ப
அந்நீர் மதுரையில் உள்ள மாந்தர் விரும்பி எதிர் கொள்ளும்படி
வருகின்ற துறையினிடத்தேயுள்ள இருந்தையூர் என்னும் திருப்பதியிலே
எழுந்தருளி யிருக்கின்ற திருமாலே! நின் திருவடியைத் தொழுது
வாழ்த்துகின்றோம்.

      7 - 21: பெருமானே! நினது திருப்பதியின் ஒருபக்கத்தே
வேங்கையும், வெண்கடம்பும், மகிழும், செயலையும் ஓங்கிவளர்ந்த
மலையுளது. மற்றொருபால் விண்ணென விரிந்த நீர்நிலைகள் உள்ளன;
மற்றொருபால் உழவரும் உழத்தியரும் ஆடிப்பாடித் தொழில்செய்யும்
கழனிகள் உள்ளன; மற்றொருபால் ஒழுக்கந் தவறாத அந்தணர்
சேரியையுடைய அறம்பிறழாத நகரம் உளது.

      22 - 29: அந் நகரத்தில் ஒருசார் பல்வேறு பண்டங்களையும்
விற்கும் வணிகர்தெரு வுள்ளது; அதன்கண் மற்றொரு சார் உழவர்தெரு
வுளது. அந் நகரம் நல்ல இன்பந்தரும் இயல்புடைய பல்வேறு
தெருக்களையும் உடையது.

      30-49: அந் நகரத்தின்கண் துறக்கத்தையொத்த ஆதிசேடனார்
திருப்பதியும் உளது. அத் திருப்பதியின்கண் மகளிரும், மைந்தரும்,
இளைஞரும், முதியரும் அவிப்பொருளையும், மலர், நறுமணப்புகைப்
பொருள் முதலியவற்றையும் ஏந்திவந்து இடையறாது தொழுது
இன்புறாநிற்பர்.

      50 - 59: அச்சேடனார் திருப்பதியின்கண் வண்டும் தும்பியும்
யாழ்போல இசைபாடும்; யானைகள் முகில்போல முழங்கும்; முழவுபோல
அருவியிசை முழங்கும், ஆடலும் பாடலும் நிகழும்.
      60 - 63: குளவாய் என்னுமிடத்தே எழுந்தருளிய
அவ்வாதிசேடனார் திருக்கோயிலில் மகளிரும் மைந்தரும் வந்து
வழிபடுவர்; அவர்க்குத் தீயன கழிந்து நல்லனவெல்லாம் வந்து
பொருந்தும்.

64 - 78: அவ் வாதிசேடனார், திருமால் மந்தரமலையை எடுத்துத்
திருப்பாற்கடலில் இட்டுக் கடைந்தபொழுது, அம் மலைமத்திற்குக்
கடைகயிறாக இருந்தனர்; வலிமைக்கெல்லாம் இருப்பிடமானவரும்
அவரே; உலகத்தைச் சுமந்தவரும் அவரே! சிவபெருமான்
திரிபுரமெரித்தபொழுது அவர் ஏந்திய மலை வில்லிற்கு நாணாக
இருந்து அச் சிவபெருமானுக்கு வெற்றிப் புகழ் அளித்தவரும்
அவ் வாதிசேடனாரே.

      79 - 82: அத்தகைய பெருமையுடையவரும், ஆயிரந் தலையை
யுடையவருமாகிய அவ் வாதிசேடனாரை வணங்கித் திருமாலே! யாம்
எப்பொழுதும் நினது திருவடியைப் பிரியேமாகுக என்று நின்
திருவடிகளை ஏத்திப் புகழாநின்றேம்.

   வானார் எழிலி மழைவள நந்தத்
   தேனார் சிமைய மலையின் இழிதந்து
   நான்மாடக் கூடல் எதிர்கொள்ள ஆனா
   மருந்தாகுந் தீநீர் மலிதுறை மேய
 5 இருந்தையூர் அமர்ந்த செல்வநின்
   திருந்தடி தலையுறப் பரவுதுந் தொழுது
(இது தரவு)

   ஒருசார், அணிமலர் வேங்கை மராஅ மகிழம்
   பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர் போங்கி
   மணிநிறங் கொண்ட மலை;
10 ஒருசார் தண்ணறுந் தாமரைப்பூவி னிடையிடை
   வண்ண வரியிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப
   விண்வீற் றிருக்குங் கயமீன் விரி தகையிற்
   கண்வீற் றிருக்குங் கயம்;
   ஒருசார், சாறுகொள் ஓதத் திரையொடு மாறுற்
15 றுழவி னோதை பயின்றறி விழந்து
   திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டித்
   திருநயத் தக்க வயல்;
   ஒருசார், அறத்தொடு வேதம் புணர்தவ முற்றி
   விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித்
20 திறத்திற் றிரிவில்லா அந்தணர் ஈண்டி
   அறத்திற் றிரியா பதி;
(இவை நான்கும் கொச்சகம்)

   ஆங்கொருசார், உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை
   மண்ணுவ மணிபொன் மலைய கடல
   பண்ணிய மாசறு பயந்தரு காருகப்
25 புண்ணிய வணிகர் புனைமறு கொருசார்
   விளைவதை வினையெவன் மென்புல வன்புலக்
   களமர் உழவர் கடிமறுகு பிறசார்
   ஆங்க, அனையவை நல்ல நனிகூடு மின்பம்
   இயல்கொள நண்ணி யவை;
(இது கொண்டுநிலை)

30 வண்டு பொரேரென எழ
   வண்டு பொரேரென எழும்
   கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டிக்
   கடிப்பிகு காதிற் கனங்குழை தொடர
   மிளிர்மின் வாய்ந்த விளங்கொளி நுதலார்
35 ஊர்களிற் றன்ன செம்ம லோரும்
   வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத்
   தொளியிழை யொதுங்கிய வொண்ணுதலோரும்
   புலத்தோ டளவிய புகழணிந் தோரும்
   நலத்தோ டளவிய நாணணிந் தோரும்
40 விடையோ டிகலிய விறனடை யோரும்
   நடைமட மேவிய நாணணிந் தோரும்
   கடனிரை திரையிற் கருநரை யோரும்
   சுடர்மதிக் கதிரெனத் தூநரை யோரும்
   மடையர் குடையர் புகையர்பூ வேந்தி
45 இடையொழி வின்றி யடியுறையார் ஈண்டி
   விளைந்தார் வினையின் விழுப்பயன் றுய்க்கும்
   துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும்
   இருகேழ் உத்தி அணிந்த எருத்தின்
   வரைகெழு செல்வ னகர்;
50 வண்டொடு தும்பியும் வண்டொடை யாழ்ஆர்ப்ப
   விண்ட கடகரி மேகமொ டதிரத்
ப.--24
   தண்டா அருவியோ டிருமுழ வார்ப்ப
   அரியுண்ட கண்ணாரோ டாடவர் கூடிப்
   புரியுண்ட பாடலொ டாடலுந் தோன்றச்
55 சூடு நறவொடு காமமுகிழ் விரியச்
   சூடா நறவொடு காமம் விரும்ப
   இனைய பிறவு மிவைபோல் வனவும்
   அனையவை எல்லா மியையும் புனையிழைப்
   பூமுடி நாகர் நகர்;
( இவையும் கொச்சகம்)
60 மண்மருள் தகைவகை நெறிசெறி யொலிபொலி
   அவிர்நிமிர் புகழ்கூந்தற்
   பிணிநெகிழ் துணையிணை தெளியொளி திகழ்ஞெகிழ்
   தெரியரி மதுமகிழ் பரிமலர்
   மகிழுண்கண் வாணுதலோர்
   மணிமயிற் றொழிலெழி லிகலிமலி திகழவிழ
   திகழ்கடுங் கடாக்களிற்
   றண்ண லவரோ
   டணிமிக வந்திறைஞ்ச அல்லிதப்பப் பிணிநீங்க
   நல்லவை எல்லா மியைதருந் தொல்சீர்
   வரைவாய் தழுவிய கல்சேர்கிடக்கைக்
   குளவாய் அமர்ந்தா னகர்;
(இது முடுகியல்)
   திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத்
65 திகழ்பெழ வாங்கித்தஞ் சீர்ச்சிரத் தேற்றி
   மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
   புகழ்சால் சிறப்பின் இருதிறத் தோர்க்கும்
   அமுது கடைய இருவயி னாணாகி
   மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
70 உகாஅ வலியின் ஒருதோழங் காலம்
   அறாஅ தணிந்தாருந் தாம்;
   மிகாஅ மறலிய மேவலி யெல்லாம்
   புகாஅவெதிர் பூண்டாருந் தாம்;
   மணிபுரை மாமலை ஞாறிய ஞாலம்
75 அணிபோற் பொறுத்தாருந் தாஅம் பணிவில்சீர்ச்
   செவ்விடைப் பாகன் திரிபுரஞ் செற்றுழிக்
   கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
   தொல்புகழ் தந்தாருந் தாம்;
(இவையும் கொச்சகம்)
   அணங்குடை யருந்தலை ஆயிரம் விரித்த
80 கணங்கொள் சுற்றத் தண்ணலை வணங்கி
   நல்லடி யேத்திநிற் பரவுதும்
   எல்லேம் பிரியற்கெஞ் சுற்றமொ டொருங்கே.
(என்பது ஆசிரியச்சுரிதகம்)


கடவுள் வாழ்த்து

குறிப்பு:- இப் பாடல் தொல்காப்பியச் செய்யுளியல் 121 ஆம்
நூற்பாவிற்குப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் மேற்கோளாக
எடுத்தாண்டது.

உரை

1 - 6: வான் . . . . . . தொழுதே

(இ-ள்.) வான் ஆர் எழிலி தேன் ஆர் சிமைய மலையின் மழைவளம்
நந்த - விசும்பின்கண் நிறைந்த முகில்கள் தேன் இறால்கள் பொருந்திய
குவடுகளையுடைய சைய மலையினிடத்தே மழையை மிகுதியாகப்
பெய்தலானே உலகின்கண் செல்வம் பெருகும்படி, ஆனா மருந்து ஆகும்
தீநீர் - இன்றியமையாத ஆருயிர் மருந்தாகிய இனிய அம்மழை நீர், இழி
தந்து நான்மாடக் கூடல் எதிர்கொள்ள - அச் சைய மலையினின்றும்
இறங்கி மதுரையில் வாழும் மக்கள் விருப்பத்தோடே எதிர்கொள்ளாநிற்ப;
மலி துறை மேய இருந்தையூர் அமர்ந்த செல்வ - வந்து பெருகுதற்கு
இடமான வையைத்துறையிடத்தே பொருந்திய திருவிந்தையூர் என்னும்
திருப்பதியிலே எழுந்தருளியிருக்கின்ற உயிர்களுக்குச் செல்வமாக
விளங்கும் திருமாலே! நின் திருந்தடி தலையுறத் தொழுது பரவுதும் -
அடியேங்கள் நினது திருந்திய இலக்கணமுடைய திருவடிகள் எமது
தலையிலே பொருந்தும்படி வீழ்ந்து வணங்கி வாழ்த்தாநின்றேம்.

(வி-ம்.) வானிடத்தே ஆரவாரிக்கும் எழிலி எனினுமாம். எழிலி - முகில்;
மழைவளமாகிய நீர் பெருக எனினுமாம். தேன் - தேனடை. சிமையம் -
மலைக்குவடு. அம் மலையினின்று அருவியாக வீழ்ந்து என்க. இழிதந்து
- இழிந்து. நான்மாடக் கூடல் - மதுரை. இஃது ஆகுபெயராய் ஆண்டு
வாழும் மக்களை உணர்த்தி நின்றது. ஆனா - இன்றியமையாத. மருந்து
- ஆருயிர் மருந்து. மருந்து - அமிழ்தமுமாம்.
"விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது"
(குறள் - 16)
என்றும்,
"வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்தம் என்றுணரற் பாற்று"
(குறள் - 11)

என்றும், ஆசிரியர் திருவள்ளுவனாரும் மழை "ஆனா மருந்தாதல்"
குறித்தமையுணர்க.

      மலிதுறை: வினைத்தொகை. துறை - வையைத்துறை. இருந்தையூர்
- வையைத் துறையிடத்தே உளதாகியதொரு திருமால் திருப்பதி. இதனை
"நீடு நீர் வையை நெடுமால் அடியேத்த" எனவரும் சிலப்பதிகார அடிக்கு
(துன்ப - 4) அரும்பதவுரைகாரர். நெடுமால் - ஸ்ரீ இருந்த வளமுடையார்
எனக் குறிப்பதனானும் உணர்க.

      திருந்தடி - பிறக்கிடாத அடியுமாம். செல்வன் - உயிர்கட்குச்
செல்வமாக உள்ளவன்; உலகமெல்லாம் தன்னுடைமையாகப் பெற்றவன்
எனினுமாம். தொழுது பரவுதும் என மாறுக.

      வையைத் துறையில் மேய இருந்தையூரமர்ந்த செல்வ நின் அடி
தொழுது பரவுதும் என முடிக்க.

7-9: ஒருசார் . . . . . . . . .மலை

      (இ-ள்.) ஒருசார் - எம்பெருமானே! நீ எழுந்தருளியிருக்கும்
இத் திருப்பதியின் ஒரு பக்கத்தே, அணி மலர் வேங்கை மராஅம்
மகிழும் பிணி நெகிழ் பிண்டி நிவந்து - அழகிய மலர்களையுடைய
வேங்கையும் வெண்கடம்பும் மகிழ மரமும் அரும்புகள் கட்டலர்ந்த
செயலையும் இன்னோரன்ன பிற மரங்களும், சேர்பு நிவந்து ஓங்கி
- ஒன்று கூடி மிகவும் வளர்ந்து நிற்பதனாலே, மணிநிறம் கொண்ட
மலை - நீல மணியினது நிறமுடைத்தாய்த் திகழும் மலை விளங்காநிற்கும்.

      (வி-ம்.) அணி - அழகு. வேங்கை - ஒருவகை மரம். மராஅம்
- வெண் கடம்பு. பிணி நெகிழ் - மலர்ந்த. பிண்டி - செயலை;
அசோகமரம் முதலிய இன்னோரன்ன மரங்கள் என்க: சேர்பு -
அடர்ந்து. நிவந்து ஓங்கி, ஒரு பொருட் பன்மொழி. மிக வுயர்ந்து
வளப்பமுடைய மலை சேய்மையினின்று நோக்குவோர்க்கு நீலநிற
முடைத்தாய்த் தோன்றுதல் இயல்பாகலின் மணி நிறங் கொண்ட மலை
என்றார். இதனால் நானிலத்துள் முதனிலமாகிய குறிஞ்சி வளம்
கூறினாராயிற்று.

ஒருசார் மலை நின்று திகழும் என்க.

10 - 13: ஒருசார் . . . . . . .கயம்

      (இ - ள்.) ஒருசார் - பெருமானே! நினது திருப்பதியின்
மற்றொரு
பக்கத்தே, கயம் - நீர் நிலைகள், தண் நறு தாமரைப்
பூவின் இடை இடை இதழ்ப் போதின்வாய் வண்ண வரி வண்டு ஆர்ப்ப
- தம்பால் உள்ள தண்ணிய நறிய தாமரைப் பூக்களின் இடையிடையே
உள்ள அன்றலரும் இதழ்களையுடைய நாளரும்புகளின் வாயிடத்தே தேன்
பருகும் பொருட்டு நிறமும் வரியும் அமைந்த வண்டினங்கள் முரலாநிற்ப,
கயமீன் வீற்றிருக்கும் விண் விரி தகையில் கண் வீற்றிருக்கும் - பரிய
நாண் மீன்கள் பொருந்தியிருக்கும் வானம் விரிந்து கிடக்குமாறுபோல
விரிந்து கிடக்கும் இடமுடைத்தாய்க் கிடக்கும்.

      (வி - ம்.) மலர்ந்த முதிய பூக்களின் இடையிடையே உள்ள நாண்
மலரின் வாயிடத்தே வண்டுகள் பாட என்பார். தாமரைப்பூவின்
'இடைஇதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப' என்றார். இதழ்ப்போது என்றது
அன்றலரும் செவ்வியிதழையுடைய நாளரும்பு என்பதுபட நின்றது.

      கயமீன் - பரிய விண்மீன்: மெல்லென மெல்லென மிளிரும்
விண்மீன் எனினும் பொருந்தும். என்னை? கய என்னும் உரிச்சொல்
பெருமை, மென்மை என்னும் இருபண்பும் குறிப்பதாகலான். உவமைக்குக்
கூறப்பட்ட கயமீன் மிளிர்தலைக் கயத்திற்கும் கொண்டு நாண்மீன்போன்று
மிளிரும் பரிய மீன்களையுடைய கயம் என்க. கயமீன் வீற்றிருக்கும் விண்
விரிதகையில் கண் விரிதகைக் கயம் என்க. கண் இடம். விண்போன்று
விரிந்த இடமுடைத்தாகிய கயம் என்க. கயம் - நீர்நிலை குளம், ஓடை,
வாவி, ஏரி முதலியன. விரிதகையின் - விரிந்த அழகுபோன்று என்க.

      இதனால் மருதநிலத்தின் மாண்பு கூறப்பட்டது. நீர்வளம் கூறவே
ஏனைவளம் கூறாமலே அமையும் என்பதுபற்றி முதலில் நீர்வளம்
ஓதினார்.

14 - 17: ஒருசார். . . . . . . வயல்

      (இ - ள்.) ஒருசார் - பெருமானே! நின் திருப்பதியின் மற்றொரு
பக்கத்திலே, சாறுகொள் ஓதத்து இசையொடு மாறு உற்று உழவின் ஓதை
பயின்று - மருதநிலத்தின் கண்ணே ஆலைகளிலே கருப்பஞ் சாற்றைப்
பிழிந்து கொள்ளுதலானே எழும் ஓசையாகிய ஆரவாரத்தோடு
மாறுபட்டுக் களமர்கள் உழுங்கால் ஏரைப் பாடும் ஏர்மங்கலப் பாடல்கள்
பாடும் ஆரவாரத்தை எழுப்பி மேலும், அறிவு இழந்து -
கள்ளுண்டமையானே அறிவு மயங்கி, திரிநரும் - யாண்டும் திரியா
நிற்போரும், ஆர்த்து நடுநரும் - உழத்தியர் குரவைபாடி நாற்று
நடுவோரும் ஆகி, ஈண்டி - தம்பால் குழுமாநிற்ப, திரு நயத்தக்க வயல்
- திருமகளும் விரும்பி வீற்றிருக்கும் தகுதியுடைய கழனிகள் உள்ளன;

      (வி-ம்.) பெருமானே! நினது திருப்பதியின் மற்றொரு சார்,
ஆலையின் ஆரவாரத்தோடு மாறுபட்டு ஏர்மங்கலம் பாடுவோரும்
கள்ளுண்டு களிப்போரும் குரவை பாடுவோரும் ஆகிய உழவர்
உழத்தியர் நிறைந்து திருமகளும் விரும்பத்தக்க வயல்கள் திகழா நிற்கும்
என்பதாம்.

      ஆலையின்கண் கரும்பினையிட்டு அதன் சாற்றினைப் பிழிந்து
கோடலாலே உண்டாகும் இசை என்க. சாறு - விழாவுமாம். இங்ஙனம்
பொருள்கோடல் சிறப்பின்று.

      உழவன் ஓதை, உழுநர் எடுத்த ஏர்மங்கலப்பாட்டின் ஆரவாரம்.
கள்ளுண்டலாலே அறிவிழந்து மனம்போனவாறு ஆரவாரம் செய்து
திரிவோரும், நாற்றினை நடுவோரும் ஆகிய உழவரும் உழத்தியரும்
தம்பாற் கூடாநிற்ப என்க. திரு - திருமகள்.

இப் பகுதியோடு,
"கருங்கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்குநின் றார்க்கும் ஒலியே யன்றியும்
கடிமலர் களைந்து முடிநா றழுத்தித்
தொடிவளைத் தோளு மாகமுந் தோய்ந்து
சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்
வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணியும்
கொழுங்கொடி யறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்
(நாடுகாண். 125-135)

எனவரும் சிலப்பதிகாரப் பகுதியையும் நினைக.

"ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலைபாய் அமலை ஆலைச்
சாறுபாய் ஓசை வேலைச் சங்குவாய் பொங்கு மோதை
ஏறுபாய் தமரம் நீரில் எருமைபாய் துழனி யின்ன
மாறுமா றாகித் தம்மின் மயங்குமா மருதவேலி"
(நாட்டுப் - 3)

என்றார் கம்பநாடரும்.

18 - 21: ஒருசார். . . . . . .பதி


      (இ-ள்.) ஒருசார் - பெருமானே! நினது திருப்பதியின் மற்றொரு
பக்கத்தே, அறத்தொடு வேதம் புணர்தவம் முற்றி - தத்தமக்குரிய
அறநெறிக்கட் பிறழாது நின்று வேதங்களைக் கடைபோக நன்கு பயின்று
இவற்றாலே பொருந்துவதாகிய தவவொழுக்கத்திலே முதிர்ந்தமையாலே
எய்தாநின்ற, விறல் புகழ நிற்ப விளங்கிய - வெற்றிப் புகழ் யாண்டும்
பரந்து நிலைத்து நிற்பத் திகழாநின்ற, கேள்வித்திறத்தில் திரிவு
இல்லா அந்தணர் ஈண்டி - வேதங்கூறிய ஒழுக்கத்தே ஒரு சிறிதும்
பிறழ்தல் இல்லாத அந்தணர் மிக்கு வாழ்தலானே, அறத்தில் திரியா
பதி - ஏனையோரும் தத்தமக்குரிய அறவொழுக்கத்தே பிறழா
தொழுகுதற் கிடமான நகரம் உளது;

      (வி-ம்.) அறத்தொடு வேதம் தவம் முற்றிய அந்தணர், விறற்புகழ்
விளங்கிய அந்தணர், கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர்,
கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர் எனத் தனித்தனி கூட்டுக.

      ஈண்டி என்னும் செய்தெனெச்சத்தை ஈண்ட எனச் செயவெனெச்சமாக்கி ஏதுவாக்குக.

      அந்தணர் ஈண்டுதலானே ஏனையோரும் அறத்திற் றிரியாது
ஒழுகுதற்கு இடமான பதி என்க. பதி - நகரம்.

      அறத்தொடு என்புழி அறம். அந்தணர்க்கு நூலோர் வகுத்த
அறுவகைப்பட்ட ஒழுக்கம் என்க. அவையாவன: ஓதல், ஓதுவித்தல்,
வேட்டல், வேட்பித்தல், ஈதல் என்பனவாம். இதனை,

"ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந் தொழுகும்
அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி" (24)

எனவரும் பதிற்றுப்பத்தானும் உணர்க.

      வேதம் முற்றி என்றது வேதங்களைப் பொருளுணர்ச்சியோடே
கசடறக் கற்று நிரம்பி என்றவாறு. தவம் முற்றி என்றது கற்றதனால்
உணர்வு பெருகிப் பொறிபுலனடங்க நின்று என்க.

      விறற்புகழ் என்றது, இவ் வறவொழுக்கத்தும், வேதப் பயிற்சியினும்,
தவவொழுக்கத்தினும் இவரை ஒப்பார் பிறரிலர் என உலகம் புகழும்படி
விளங்கிநிற்றல். இவ்வெற்றிகளைத் தமிழ்நூலோர் வாகை என்பர். ஈண்டுக்
கூறப்பட்ட புகழ் பார்ப்பன வாகை எனப்படும்.

அஃதாவது,

ஓதங் கரை தவழ்நீர் வேலி யுலகினுள்
வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்--ஏதம்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி யகத்து" (புறப்பொருள் வெ - 163)
எனவரும்.

      பார்ப்பனர் தம் அறத்திலே பிறழாது நிற்பவே, அவர் வழிப்பட்ட
ஏனை அரசர் வணிகர் வேளாண்மாந்தர் ஆகியோரும் தத்தம் அறத்திலே
பிறழாது நிற்றல் ஒருதலையாகலின், 'அந்தணர் ஈண்ட அறத்திற்றிரியாபதி'
என்றார். ஈண்டு அறம் என்றது,

"ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்" (தொல். புற. சூ. 19)

என வகுக்கப்பட்ட அரசரும், வணிகரும் வேளாளருமாகிய ஏனையோர்க்
குரிய ஒழுக்கங்களை என்க.

22 - 29: ஆங்கொருசார் . . . . . . . நண்ணியவை

      (இ - ள்.) ஆங்கு ஒருசார் - அந்நகரத்தே ஒருபக்கத்தே,
உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை மண்ணுவ மணி பொன் மலைய
கடல் பண்ணியம் மாசு அறு பயம் தரு காருகப் புண்ணிய வணிகர்
புனை மறுகு - உண்பதற்குரிய பொருள்களும் பூசுவதற்குரிய
பொருள்களும் பூண்டு கொள்ளுதற்குரிய பொருள்களும் உடுத்தற்குரிய
பொருள்களும் மஞ்சனமாடுதற்குரிய பொருள்களும் மணி பொன் முதலிய
மலைபடு பொருள்களும் கடல்படு பொருள்களும் ஆகிய குற்றமற்ற
பயன்படு பொருள்களை அக நாட்டினின்றும் பிற நாட்டினின்றும்
கொணர்ந்து தருகின்ற தொழிலையும் அறச்செயலையும் உடைய
வணிகர்கள் இருந்து வாழாநின்ற ஒப்பனை செய்யப்பட்ட தெருக்கள்
உள்ளன; ஒருசார் விளைவதை வினையெவன்(?) . . . . . . . . மென்புல
வன்புலக் களமர் உழவர் கடி மறுகு - மற்றொரு பக்கத்திலே மருதமும்
நெய்தலுமாகிய மென்புலத்தினும் குறிஞ்சியும் முல்லையுமாகிய
வன்புலத்தினும் தொழில் செய்வோராகிய களமர் தெருக்களும்
உழுவித்துண்போ ராகிய வேளாளர்கள் இருந்து வாழும் காவலையுடைய
தெருக்களும் உள்ளன; அனையவை நனி கூடும் நல்ல இன்பம் இயல்
கொள நண்ணியவை - தத்தம் அறத்திற்றிரியா அந்தணர் வணிகர்
வேளாளர் முதலிய மாந்தர் இருந்து வாழுதலானே அத் தெருக்கள்
நன்கு பொருந்தாநின்ற நல்லனவாகிய இன்பம் பலவும் இயல்பாகவே
கூடப்பட்டனவாகும்;

      (வி-ம்.) ஆங்கு - அந்தணர் ஈண்டுதலானே அறத்திற் றிரியாபதி
என்று முற்கூறப்பட்ட அந்த நகரத்தின்கண் என்க.

      உண்ணுவ - நெல், முதிரை நெய், பால், தயிர், காய், கனி, இலை
தீஞ்சோறு பல்வேறுருவிற் பண்ணிகாரம் நறவு இன்னோரன்ன உணவுப்
பொருள்கள். இதனை,

"சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி அவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறுங்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர"
(527-535)

எனவரும் மதுரைக்காஞ்சியானும் உணர்க.
பூசுவ - சந்தன முதலியன.
பூண்ப - அணிகலன்கள் (மாலைகள்),
உடுப்பவை - பட்டு, துகில் முதலியன.

      மண்ணுவ - பத்துத் துவரும், ஐந்து விரையும்,
முப்பத்திருவகை ஓமாலிகையும் பிறவுமாம். என்னை?
"பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை யோமாலி கையினும்
ஊறின நன்னீர் உரைத்த நெய்வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி"
(சிலப். 9: 74-9)
என இளங்கோவடிகளார் கூறுமாற்றானும் உணர்க.

      மணி பொன் முதலிய மலைபடு பொருளும் கடல்படு பொருளும்
என்க. இப் பொருள்கள் தூயனவாகவே விற்கப்படும் என்பார், 'மாசறு
பயம்' என்றார். பயம் - பயன்: ஆகுபெயர்; பயன்றரும் பொருள்கள்.

      காருகம் - காருகத்தொழில். அஃதாவது, பருத்திநூல் பட்டுநூல்
அமைத்து ஆடை நெய்தலும்; தைத்தலும், சுமந்து விற்றலுமாகிய தொழில்
என்க. இத் தொழிலும் வணிகர் தொழிலே யாதலின், 'காருக வணிகர்'
என்றார். இதனை,

"பட்டினு மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"
(சிலப். 5: 16 - 7)

என்பதனானும் உணர்க.

      புண்ணிய வணிகர் என்றது, அறச்செயலையே
குறிக்கோளாகவுடைய வணிகர் என்றவாறு. இது, வாணிக வாகை;
என்னை?

"உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து --முழுதுணர
ஓதி அழல்வழிபட் டோம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க் கரசு"
(புற. வெ - 164)
என்றோதுபவாகலான்.


      சிற்பம், ஓவியம் முதலியவற்றாலும் கொடிகளானும் ஒப்பனை
செய்யப்பட்ட தெரு என்பார், 'புனைமறுகு' என்றார்.

      26 ஆம் அடிக்கண் "விளைவதை வினையெவன்" என்னும்
தொடர் பொருள் காண்டற்கியலாதபடி திரிந்ததுபோலும்; ஆராய்க.

      மென்புலம் - மருதநிலமும் நெய்தனிலமுமாம்.

      வன்புலம் - குறிஞ்சிநிலமும் முல்லைநிலமுமாம்.

      களமர் - உழுதுண்ணும் வேளாளர். உழவர் என்றது உழுவித்
துண்ணும் வேளாளர் என்க. களமர் என்பதற்கு, 'மருதநிலமாக்கள்'
'உழவர்க்கீழ்க் குடிகள்' என்பர் அடியார்க்கு நல்லார்.
      கடி - காவல். ஆங்க - இசை. அனையவை - அத்தகைய தெருக்கள் என்க.

      இதுகாறும் ஸ்ரீ இருந்தவளமுடையாராகிய திருமால் திருப்பதியின்
சிறப்புக் கூறி இனி, அத் திருப்பதியின்கண் எழுந்தருளியிருக்கும்
ஆதிசேடனின் திருக்கோயிற் சிறப்பும், அதனை மக்கள் வழிபடுதற்
சிறப்பும் ஓதுகின்றார்.

30-35: வண்டு . . . . . . . . .செம்மலோரும்

      (இ - ள்.) கடிப்புஇகு காதின் - கடிப்பு என்னும் அணியிட்டுத்
தாழ வளர்த்திய தஞ் செவியின்கண், கனங்குழை தொடர - கனவிய
குழையென்னும் அணியை இடும்பொருட்டு, வண்டு பொரேர் என எழ
- மகளிர் வளையலையுடைய தம் கையினை மேலே உயர்த்துங்கால்
அக் கையிலிடப்பட்ட வளையல் கலீர் என்ற ஒலியுடன் எழுதலானே,
வண்டு பொரேர் என எழும் - அவர்தம் மலர் மாலைகளிலே
மொய்த்துள்ள வண்டினங்கள் பொரேர் என்னும் ஒலியோடே
எழாநிற்கும், இங்ஙனம் அணியப்பட்ட குழையினது, மிளிர்மின் வாய்ந்த
- மிளிருகின்ற ஒளிச் சுடர் பாய்தலானே, விளங்கு ஒளி நுதலார் -
விளங்காநின்ற ஒளியினையுடைய நுதலையுடைய மகளிரும் அவர்தம்
கணவரும் ஆகிய, ஊர் களிற்று அன்ன செம்மலோரும் - தாம் ஊர்ந்து
செல்லும் களிற்றுயானையை ஒத்த தலைமைத்தன்மை யுடையோரும்;

      (வி - ம்.) வண்டு இரண்டனுள் முன்னையது வளையல், பின்னது
வண்டு. பொரேர்: ஒலிக்குறிப்பு. கடிப்பு - மகளிர் காதினை வளர்த்தற்கு
இடப்படுவதோர் அணி: கடிப்பிட்டு இகுத்த காதின் என்க. இகுத்தல் -
தாழச்செய்தல். கனங்குழை - ஒருவகைக் காதணி. இது பொன்னாற்
செய்யப்படுவதாம். இதன் ஒளிபாய்ந்து விளங்கும் ஒளியினையுடைய
நுதலாரும் அவர்தம் கணவராகிய செம்மலோரும் என்க.

செம்மலோர் - தலைமைத்தன்மையுடையோர்.

      30. வண்டு பொரேர் என என்பது தொடங்கி 34 நுதலார்
என்னுமளவும் கிடந்த அடிகட்குப் பொருள் நன்கு விளங்கவில்லை.
இவற்றிற்குப் பொருள் வேறு தோன்றுமாயிற் கொள்க. இவற்றுள், 33.
கடிப்புகு வேரிக் கதவமிற்றோட்டி என்னும் தொடர் வாளாவிடப்பட்டது.

36-49: வாயிருள் . . . . . . . .நாணணிந்தோரும்

      (இ - ள்.) வாய் இருள் பனிச்சை வரிசிலைப் புருவத்து -
தன்னிடம் இருண்ட கூந்தலையும் விரிந்த வில்லினை ஒத்த
புருவத்தினையும், ஒளியிழை ஒதுங்கிய ஒண் நுதலோரும் -
ஒளியுடைய தலைக்கோல அணிகள் தங்கிய ஒளிபொருந்திய
நெற்றியையும் உடைய மகளிரும், புலத்தோடு அளவிய புகழ்
அணிந்தோரும் - அறிவோடு கூடிய புகழினை அணிகலனாக
உடையோரும், நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும் -
கற்புடைமையோடு பொருந்திய நாணத்தினை அணிகலனாகவுடைய
மகளிரும், விடையோடு இகலிய விறல் நடையோரும் - ஆனேற்றின்
நடையோடு மாறுபட்ட வெற்றியையுடைய பீடு நடையினை உடையவரும்,
மடம்நடை மேவிய நாண் இழந்தோரும் - மடப்பமுடைய
ஒழுக்கத்தினையுடைய நாணத்தினை இழந்த பரத்தையரும், கடல்
நிரைதிரையின் கருநரையோரும் - கடலின்கண் நிரலாக வரும் வெள்ளிய
அலைகளைப்போன்று இடையிடையே கருமை விரவிய நரையினை
யுடையோரும், சுடர் மதிக் கதிரெனத் தூநரையோரும் - ஒளிருகின்ற
திங்களினது நிலாக்கற்றைபோன்று முழுதும் நரைத்த
பருவத்தினையுடையோரும், மடையர் குடையர் புகையர் பூ ஏந்தி -
அவிப்பொருளை உடையராய்க் குடையை ஏந்தினராய் நறுமணப்புகையை
உடையராய்ப் பூ முதலியவற்றை ஏந்தினராய், இடை ஒழிவு இன்றி -
இடையறாமல், அடியுறையார் ஈண்டி - திருவடியின்கண் வந்து பொருந்திக்
குழுமித் தொழுது இன்புறுதற்கு இடமாதலானே, இருகேழ் உத்தி அணிந்த
எருத்தின் வரைகெழு செல்வன்நகர் - இரண்டாகிய கருநிறம் பொருந்திய
படப்பொறிகள் அழகுசெய்த எருத்தினையுடைய மலைபோன்ற
ஆதிசேடனுடைய திருக்கோயில், விளைந்து ஆர் வினையின் விழுப்பயன்
துய்க்கும் - விளைந்து முதிர்ந்த நல்வினையினது சிறந்த பயனை
நுகர்தற்கு இடமான, துளங்கா விழுச்சீர் துறக்கம் புரையும் -
நடுக்கமில்லாத சிறந்த புகழினையுடைய மேனிலை உலகத்தினையே
ஒப்பதாம்;

      (வி - ம்.) செல்வன்நகர் நுதலோர் முதலியோர் இடையறாது வந்து
ஈண்டித் திருவடிதொழுது இன்புறுதலானே, நல்வினையின் விழுப்பயனை
நுகர்தற்கு இடமான துறக்கத்தை ஒப்பதாகும் என்க.

      இருள்வாய் பனிச்சை என மாறி இருளை ஒத்த கூந்தல்
எனினுமாம். ஒதுங்கிய - தங்கிய. கலம் - அறிவு. புலத்தோடளவிய
புகழணிந்தோர் என்றது, நல்லிசைப்புலவர் துறவியர் முதலிய சான்றோரை.
நலத்தோடளவிய நாணணிந்தோர் என்றது கற்புடைய குலமகளிரை.
விடையோடு இகலிய விறனடையோர் என்றது மறவர்களை நடைமடம்
மேவிய நாணிழந்தோரும் என்றது வரைவின் மகளிரை. கடலின்கண்
எழும் அலை வெண்மையும் கருமையும் விரவித்தோன்றுமாறு
வெண்மயிரும் கருமயிரும் விரவித் தோன்றும் பருவத்தினர் என்க.

      மடை - அவிப்பொருள். குடை- மங்கலப்பொருள். புகை - அகில்,
குங்குலிய முதலிய இட்டெழுப்பிய நறுமணப்புகை என்க. அடியுறையார் -
அடியுறைதலுடையராய எனினுமாம். உவமைக்கோதிய
விழுப்பயன் துய்த்தலைப் பொருட்கேற்றி, திருவடி தொழுது விழுமிய
இன்பம் நுகர்தற்கு இடனாகலான் என்க.

      துறக்கம் - அறஞ்செய்தோர் எய்தும் மேனிலையுலகம். கேழ் -
நிறம். உத்தி - பாம்பினது படத்தின்கட் பொறி இருகேழுத்தி அணிந்த
செல்வன் என்றது ஆதிசேடனை. ஆதிசேடன் திருமாலின் அம்சம்
ஆதலானும் திருமாலின் அறிதுயிற் பாயலாதலானும் ஆதிசேடனையும்
வைணவர் வணங்குதல் வழக்கம்.

50-59: வண்டொடு . . . . .. . . நாகர் நகர்

      (இ - ள்.) புனையிழைப் பூ முடி நாகர் நகர் - ஒப்பனை
செய்யப்பட்ட அணிகலன்களையும் நிலமகளையும் திருமுடியின்கண்
கொண்டுள்ள அந்த ஆதிசேடனார் திருக்கோயிலின்கண், வண்டொடு
தும்பியும் வண்தொடை யாழ் ஆர்ப்ப - வண்டினங்களும்
தும்பியினங்களும் வளவிய நரம்புத் தொடையினையுடைய யாழினோடு
ஒத்து இசை முரலாநிற்பவும், விண்ட கடகரி மேகமோடு அதிர -
பிளிறாநின்ற மதயானை முகில் முழக்கத்தோடே ஒத்து முழங்காநிற்பவும்,
இருமுழவு தண்டா அருவியோடு ஆர்ப்ப - பெரிய மத்தளம் அமையாத
அருவி முழக்கத்தோடே ஒத்து முழங்காநிற்பவும், அரி உண்ட
கண்ணாரோடு ஆடவர் கூடி புரிவுண்ட பாடலும் ஆடலும் தோன்ற -
செவ்வரி கருவரி படர்ந்த மை தீட்டப்பட்ட கண்களையுடைய விறலியரும்
கூத்தரும் கூடி யாவரானும் விரும்பப்பட்ட பாட்டினையும் கூத்தினையும்
தோன்றுவியாநிற்பவும், சூடும் நறவொடு காமம் முகில் விரிய -
சூடுதற்குரிய நறவமொட்டோடே அதனைச் சூடிய மைந்தர் மகளிரின்
காமப்பண்பும் அரும்பி மலராநிற்பவும், சூடா நறவொடு காமம் விரும்ப
- அம் மைந்தரும் மகளிரும் கள்ளினோடே காமவின்பத்தையும்
விரும்பாநிற்பவும், இனைய பிறவும் இவை போல்வனவும் - இவையும்
இன்னோரன்ன பிற நிகழ்ச்சிகளுமாகிய, அனையவை எல்லாம் -
அவையெல்லாம், இயையும் தம்முள் பொருந்தாநிற்கும்;

      (வி-ம்.) புனையிழைப் பூமுடி நாகர் நகரின்கண் வண்டும் தும்பியும்
யாழோடு இயைந்து முரலும். யானை முகிலோடியைந்து முழங்கும். முழவு
அருவியோடு இயைந்து முழங்கும். கண்ணாரோடு ஆடவர் இயைந்து
ஆடலும் பாடலும் நிகழ்த்துவர். நறவ மொட்டொடு அதனைச் சூடிய
மைந்தர் மகளிரது காமக்குணம் இயைந்து மலரும். அம் மகளிரும்
மைந்தரும் கள்ளோடே இயையக் காமவின்பத்தையும் விரும்பாநிற்பர்.
இவ்வாறாக ஆண்டுப் படும் நிகழ்ச்சிகள் ஒன்றனோடு ஒன்று
இயைவதாம் என்றவாறு.

      தும்பி - வண்டின் வகையினுள் ஒன்று. வண் தொடை யாழ் -
வளப்ப முடைய நரம்பு தொடுத்தலையுடைய யாழ் என்க. நரம்பிற்கு
வளமாவது, இன்னிசைத்தாதலென்க. விண்ட - பிளிறிய. விள்ளுதல்
என்னும் வினையடியாகப் பிறந்த பெயரெச்சம். விள்ளுதல்.
திறத்தல். அது வாய்திறத்தல் என்னும் பொருள்பட்டு அதன் காரியமாகிய
பிளிற்றொலியை ஈண்டுக் குறித்து நின்றது என்க. தண்டா அருவி -
இடையறாத அருவி. இருமுழவு - பெரிய முழவு. அரியுண்ட கண்ணார்
என்றது ஆடன் மகளிராகிய விறலியரை. விறலியர்க்குரிய ஆடலும்
பாடலும் அழகுமாகிய மூன்றனுள் அழகுடைமையை அரியுண்ட கண்ணார்
என்றதனால் உணர்த்தினார். அரி - வரி. செவ்வரி கருவரிபடர்ந்த
கண்ணார் மையுண்ட கண்ணார் எனத் தனித்தனி கூட்டுக. ஆடவர்
என்றது கூத்தரை. தோன்ற - தோன்றுவிக்க. சூடு நறவு. சூடா நறவு
என்பன வெளிப்படை. முன்னது நறவமொட்டு. பின்னது கள்.
அம் மைந்தரும் மகளிரும் சூடிய நறவ மொட்டலரும் போதே அவர்
தம் உளத்தே காமம் முகிழ்த்து மலர என்க. "காலை அரும்பிப்
பகலெல்லாம் போதாகி, மாலை மலரும்இந் நோய்" என்றார்
வள்ளுவனாரும். கள் காமவின்பத்தை மிகுவித்தலின் கள்ளொடு காமம்
விரும்ப என்றார். இனைய என்றது உவமம் கருதாமல் கட்டுப் பெயர்
மாத்திரையாய் நின்றது. அனையவை என்பது மது. புனையிழை
முடிநாகர் பூமுடி நாகர் எனத் தனித்தனி கூட்டுக. பூ - பூமகள். நாகர்
-ஆதிசேடனார். நகர் - அவர் தந் திருக்கோயில். இங்ஙனமன்றி நாகர்
நகர் என்றது, உவமையாகக் கருதிப் "போகத்திற் சிறந்ததாகலின்
நாகருடைய நகரை ஒக்கும் என்றார்" என உரை கூறினாருமுளர்.

60 - 63: மணி . . . . . . . . நகர்

      (இ - ள்.) மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி
அவிர் நிமிர் புகழ் கூந்தல் - நீலமணிபோன்ற நிறத்தினையும்
அழகினையும் கூறுகூறாக அறல்பட்டுச் செறிந்து தழைத்துப் பொலிவுற்று
விளங்காநின்ற எழுச்சியினையும், கண்டோராற் புகழப்படுதலையும்
உடைய கூந்தலினையும், நெகிழ் பிணி துணை இணை தெளி ஒளிதிகழ்
ஞெகிழ் - நெகிழ இடப்பட்ட இரண்டும் தம்முள் ஒத்த தெளிந்த
ஒளியாலே விளங்கா நின்ற சிலம்பினையும், தெரி அரி மது மகிழ்பு
மகிழ் அரிமலர் உண்கண் வாள் நுதலோர் - ஆராய்ந்து
அரித்துச்செய்யப்பட்ட கள்ளை யுண்டமையானே களிப்புடைய
கருவரி செவ்வரி படர்ந்த தாமரைமலர் போன்ற மையுண்ட
கண்களையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய மகளிர்
மணி மயில் தொழில் எழில் இகலி மலி திகழ் அவிழ - நீலமணி
போன்ற நிறமுடைய மயிலைத் தொழிலானும் அழகானும் மாறுபட்டு
மிக்க ஒளிவிட்டு விளங்கும்படி, திகழ் கடுங் கடாக் களிற்று அண்ணல்
அவரோடு - விளங்குகின்ற கடிய மதத்தினையுடைய ஆண்யானை
போன்ற தலைமைத் தன்மையுடைய தத்தம் கணவன்மாரோடு கூடி,
அணி மிக வந்து - அழகுமிகும்படி வந்து, தொல் சீர் வரை வாய்
தழுவிய கல்சேர் கிடக்கைக் குளவாய் அமர்ந்தான் நகர் இறைஞ்ச
- பழைதாகிய புகழையுடைய மலையிடத்தைச் சார்ந்த கன்னிலத்திலே பொருந்திக்
கிடத்தலையுடைய குளவாய் என்னும் திருப்பதியிலே எழுந்தருளிய
அவ் வாதிசேடனாருடைய திருக்கோயில் வணங்குமளவிலே அவர்க்கு,
அல் இகப்பப் பிணி நீங்க நல்லவை எல்லாம் இயைதரும் - துன்பம்
நீங்காநிற்ப அறம் பொருள் இன்பம் ஆகிய நல்லன அனைத்தும் தாமே
வந்து பொருந்தா நிற்கும்;

      (வி - ம்.) மணி - நீலமணி. இது கூந்தலுக்கு நிறம்பற்றி வந்த
உவமை. தகை - அழகு. வகை - கூறுபாடு. நெறி - நெறிப்பு; அறல்
செறி - செறிந்த. ஒலி - ஒலித்த; தழைத்த. பொலி - பொலிவு. அவிர்
- விளங்கும். நிமிர் - எழுச்சியுடைய. கண்டோராலே பாராட்டப்பட்ட
கூந்தல் என்பார் புகழ் கூந்தல் என்றார்.

      நெகிழ்பிணி என மாறுக. நெகிழப் பூட்டப்பட்ட (சிலம்பு)
என்றவாறு. சிலம்பு இறுகப் பூட்டப்படாமல் நெகிழப் பூட்டப்படும்
அணிகலனாதல் அறிக. துணை இணை - இரண்டும் தம்முள் ஒத்த
என்க. தெளியொளி - தெளிந்த ஒளி. ஞெகிழ் - சிலம்பு. "21 ஆம்
பாடலில் (18) "சுடுபொன் னெகிழத்து முத்தரி சென்றார்ப்ப"
என்பதனானும் "ஓடவைத்த பொன்னாற் செய்த சிலம்பில் முத்தாகிய
அரி எங்கும் கேட்ப ஆர்ப்ப" என அதற்குப் பரிமேலழகர் வரைந்த
உரையானும் அஃதப் பொருட்டாதல் உணர்க.

      தெரியரிமது: வினைத்தொகை யடுக்கு. ஆராய்ந்து அரித்துச்
சமைத்த கள் என்க. மயிலின் தொழிலோடும் எழிலோடும் மாறுபட்டு
வந்து இறைஞ்ச என்க. மயில்போல நடையினையும் சாயலினையும்
உடையராய் என்பது கருத்து. பிணி என்பது உடற்பிணி பிறவிப்பிணி
என்னும் 'இருவகைப் பிணியையும் குறித்து நின்றது. அல்லல்
எனற்பாலது. அல் என ஈறு கெட்டு நின்றது. அல் - இருள் எனக்
கொண்டு துன்பத்திற்கு உவம ஆகுபெயராக்கினும் அமையும்.
குளவாய்-சேடன் கோயில் இருக்கும் இடப்பெயர் என்க.

      இத்துணையும் திருமால் திருப்பதி மாண்பும் அத் திருப்பதியில்
குளவாய் என்னுமிடத்தே எழுந்தருளியிருக்கும் சேடனார் திருக்கோயிற்
சிறப்பும் கூறி மேல் அச் சேடனாருடைய பல்வேறு மாண்புகளையும்
பாரித்து ஓதுகின்றார்.

64-71: திகழொளி . . . . . . . அணிந்தாருந்தாம்

      (இ - ள்.) ஆழியான் - சக்கரப்படையையுடைய திருமால்,
புகழ்சால் சிறப்பின் இருதிறத்தோர்க்கும் - புகழ் நிறைந்த
சிறப்பையுடைய தேவர்களும் அசுரர்களுமாகிய இருபாலார்க்கும், திகழ்
ஒளி முந்நீர் கடைந்த அக்கால் - விளங்காநின்ற ஒளியையுடைய
திருப்பாற்கடலைக் கடைந்த அக் காலத்தே, வெற்பு திகழ்பு எழ
வாங்கி - மந்தரமலை விளக்கமுறும்படி மேலே எழ எடுத்து,
மகரமறிகடல் தன் சீர் சிரத்து ஏற்றி வைத்து நிறுத்து -
மகரமீனையுடைய அலைபுரள்கின்ற அப் பாற்கடலின்கண் ஆமை
உருக்கொண்ட தனது அழகிய முதுகின்
ஏற்றிவைத்து நிலைபெறச் செய்து, அமுது கடைய - அமிழ்தம் திரண்டெழும்படி
கடைதற்கு, இருவயின் நாணாகி - அம்மலையாகிய மத்தினை இழுப்பதற்கு அதன்
இருபுறத்தினும் கயிறாகி, மிகாஅ இரு வடம் வாங்க - தேவரும் அசுரரும் ஆகிய
இருதிறத்தோரும் பற்ற எஞ்சிய இருபுறத்து அந்நாணை அத் திருமாலே தனது
எண்ணிறந்த கைகளானும் பற்றி இழுப்ப, ஒரு தோழக் காலம் - இவ்வாறு
அப் பாற்கடல் கடையக் கழிந்த ஒரு தோழக் காலமும், உகாஅ வலியின் -
தமது அழியாத ஆற்றலாலே, அறாஅது - இடையறாமல், அணிந்தாரும் -
அம் மத்தின்கண் நாணாகிக் கிடந்து அழகு செய்த வரும்;

      (வி-ம்.) பாற்கடல் என்பது தோன்றத் திகழொளி முந்நீர் என்றார். முந்நீர்
என்றது மூன்று நீரினையுடையது அல்லது மூன்று தன்மையுடைய தென்னும் தன்
பொருள் குறியாமல் வாளா கடல் என்னும் பெயர் மாத்திரையாக நின்றது.

      சிரம் என்றது ஈண்டு உச்சி யென்னும் பொருட்டாய் ஆமையுருக்
கொண்ட திருமாலின் முதுகினை உணர்த்தி நின்றது.

      மிகாஅ - மிகுந்த. தேவரும் அசுரரும் பற்றி எஞ்சிய இருபுறத்து
வடங்களையும் திருமாலே பலப்பல கைகளைத் தோன்றுவித்துப் பற்றி இழுத்துக்
கடைந்தனர் என்ப. இதனை,

"அழியும் பணிவெண் டிரைபுரட்டு மாழி வயிறு கிடங்கெழுந்து
கிழிய நெடுமால் வரை துளங்கிக் கீழ்வீழ்த் திடலுந் தனிநின்று
சுழலும் பசும்பொற் கிரிமுதுகு சொறிந்தாங் கணிதி னிளநறவம்
ஒழுகுந் துளவோன் மோட்டாமை யுருவ மெடுத்துத் தாங்கினனால்"
என்றும்,
"தாங்கும் வரைப்பொற் குடுமிமிசைத்
      தடக்கை யமைத்து நிலைநிறுவத்
தேங்கொள் கமல மலர்க்கைசில
      தீவா யரவம் பணிகொள்ள
ஓருங்குஞ் சுடர்ப்பூந் தொடியுடுத்த
      வோரா யிரந்தோள் உடையபிரான்
ஏங்கும் பரவைக் கடல்கடைந்த
      இறும்பூ தென்னென் றியம்புதுமால்"
(ஆ - பு. பாக. கடல்கடை: 18-19)

என்றும் வரும் பாகவதத்தானும் உணர்க.

      தோழங்காலம். என்றது தோழம் என்னும் பேரெண்ணின் அளவிற்றாகிய
ஊழிக்காலம் என்றவாறு. இதனை,
"உண்ணற் கரிய நஞ்சையுண்டு ஒருதோழந் தேவர்
      விண்ணிற் பொலிய அமுதளித்த விடைசேர் கொடியண்ணல்"
(திருப்புறவம்.)

எனவரும் திருஞானசம்பந்த அடிகளார் தேவாரத்தானும் உணர்க.

      மந்தரமலையிற் சுற்றி ஒருதோழங்காலம் கடைதற்கு நாணாகிக் கிடத்தற்கு
அவர்தம் சிந்தாத வலிமையே காரணம் என்பார் 'உகாஅ வலியின்' என்றார்.
அறாஅது - இடையறாமல். அணிதல் - நாணாகி அப் பொன்மலைக்கும்
அழகுண்டாக்குதல்.

72 - 18: மிகாஅ . . . . . .. . . .தந்தாருந்தாம்

      (இ - ள்.) மிகாஅ மறலிய மேவலியெல்லாம் - மேருமலையினைப் பேர்ப்பல்
என்று மிக்கு வந்து மோதிய காற்றுத் தேவனுடைய மேம்பட்ட வலிமை யெல்லாம்
தம்மைக் கடந்து, புகாஅ - அம் மலையிற் புகுதாதபடி, எதிர் பூண்டாரும் -
அக் காற்றிற்கு மாறாக அம் மலையினைச் சுற்றிக் கொண்டவரும்
அவ் வாதிசேடனாரே ஆவர், மணிபுரை மாமலை ஞாறிய ஞாலம் - மேலும்
மணியை நிறத்தாலே ஒத்த பெரிய மலைகள் தோன்றிய இம் மண்ணுலகத்தையே
அணிபோல் பொறுத்தாரும், தாஅம் - தமது தலையின்கண் சூட்டப்பட்டதொரு
அணிகலனைத் தாங்கும் அத்துணை எளிதாகவே தாங்கியவரும்
அவ்வாதிசேடனாரேயாவர், பணிவு இல் சீர் செல்விடைப் பாகன் திரிபுரம்
செற்றுழி - தன்னைப் பிறர் பணிதல் அன்றித் தான் பிறரைப் பணிதல் இல்லாத
தலைமைத் தன்மையினையும் விரைந்து செல்லும் காளையூர்தியினையும் உடைய
பிறவாயாக்கைப் பெரியோன் முப்புரத்தை அழித்த காலத்தே, கல்லுயர் சென்னி
இமயவில் நாண் ஆகி - ஏனை மலைகளினுங் காட்டில் உயர்ந்த
சிகரத்தினையுடைய இமயமலையாகிய அப்பெருமான் கொண்ட வில்லிற் கேற்ற
நாணாகி தொல்புகழ் தந்தாரும் தாம் - அப் பெருமானுக்குப் பழைதாகிய புகழினை
அளித்தவரும் அவ்வாதிசேடனாரே ஆவர்;

      (வி - ம்.) ஆதிசேடனைக் குண்டலினி சத்தி என்பர் அளவை நூலோர்.
அஃதாவது உலகத்துள்ள பல்வேறு சக்திகளை எல்லாம் ஒன்றற்கொன்று மிக்கு
ஒன்றனை ஒன்று அழிக்காதபடி சமனிலைப் படுத்து அவற்றை அடக்கி
நடத்துவதொரு சக்தி என்பதாம். இங்ஙன மாகலின் மிகாஅ மறலிய
மேவலியெல்லாம் புகாஅ எதிர்பூண்டா ருந்தாம் என்றதற்கு, ஐம்பெரும்
பூதங்களின் வலியெல்லாம் தம்முள் ஒன்றனை ஒன்று மிகாது தன்கண் அடங்க
அவற்றைச் சமனிலைப் படுத்து அடக்கிப் பொறுத்தாரும் தாம் எனினுமாம்.
நிலந்தாங்குங் கால் மிக எளிதாகவே தாங்குவர் என்பார் "ஞாலம் அணி போல்
பொறுத்தார்" என்றார். அணிகலனைப் பொறுக்கு மத்துணை எளிதாகப் பொறுத்தார்
என்றவாறு.
பணிவு இல் சீர் - தான் பிறரைப் பணிதல் வேண்டாத சிறப்பு என்க.
அஃதாவது தனக்கொரு தலைவனின்றி அனைவர்க்கும் தானே தலைவன்
ஆகும் சிறப்பு என்க. "சேர்ந்தறியாக் கையானை" என மணிவாசகப்
பெருமான் இயம்பியதும் இக் கருத்தையுடையதே யாகும்.

      விடைப்பாகன் - காளையூர்தியுடையோன்; சிவபெருமான். கல்
- மலை. மலைகளிலெல்லாம் உயர்ந்த சென்னியையுடைய இமயம் என்க.

      இமயவில்லுக் கேற்ற நாணாகிச் சிவபெருமானுக்குப் புகழ்தந்தார்.
எனவே மந்தரமலைக்குக் கடைகயிறாகித் திருமாலுக்குப் புகழ்தந்தாரும்
இமயத்திற்கேற்ற நாணாகிச் சிவபெருமானுக்குப் புகழ்தந்தாரும் தாமே
என முதற் கடவுளர் புகழ்க்குக் காரணமான சிறப்புடையர் எனப்
புகழ்ந்தவாறாதல் உணர்க.

      என்றிவ்வாறு ஆதிசேடனாரைப் படர்க்கையிற் பரவிப் பின்னர்
இருந்தையூரமர்ந்த எம்பெருமானை முன்னிலையாக்கி வாழ்த்தி முடிக்கின்றார்.

79 - 82: அணங்குடை . . . . . . . . . ஒருங்கே

      (இ - ள்.) அணங்கு உடை ஆயிரம் அருந்தலை விரித்த
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி - எம்பெருமானே!
இவ்வாறு பல்வேறு சிறப்புடையோரும் கண்டோர்க்கு அச்சஞ்
செய்தலையுடைய ஆயிரமாகிய அரிய தலைகளைப் பரப்பி நினக்கு
நிழல் செய்வோரும் திரண்ட சுற்றத்தினையுடையாரும் தலைமைத்
தன்மையுடையோருமாகிய அச் சேடனாரை வணங்கி, நின் நல் அடி
எம் சுற்றமொடு ஒருங்கே ஏத்திப் பரவுதும் - நினது நல்ல திருவடியை
எமது சுற்றத்தாரோடு ஒருசேர ஏத்தி வாழ்த்தா நின்றேம், எல்லேம்
பிரியற்க - அஃதெற்றுக்கெனின் நின்னடியேமாகிய யாமெல்லேமும்
நினது திருவடி நீழலை எப்பொழுதும் பிரியாதிருக்க வேண்டும் என்று
கருதியேயாம்.

      (வி - ம்.) அணங்கு - அச்சம்; வருத்தமுமாம். கணம் - திரள்
சுற்றம் என்றது சேடனாரின் இளைஞர்கள் தொண்ணூற்றென்பதின்
மரையும் என்க. அண்ணல் - தலைமைத்தன்மையுடையோன். நினது
திருப்பாயலும் குடையுமாய்ச் சிறந்த அண்ணலை - முதலில் வணங்கிப்
பின்னர் நின்னை ஏத்திப் பரவுதும் என்றவாறு. இதனால் நின் அடியார்
எமக்கு நின்னையே ஒப்பவர் ஆவர் என்று அடியார் பெருமை
உணர்த்தினமையும் உணர்க.

      உயிர்களின் பிறவிப்பிணி அகற்றுவது திருவடியே ஆதலின்
நின்னினும் நல்லனவாகிய திருவடி என்பார் "நல்லடி" என்றார்.
மாயோயே மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி எனவும், "நின்னிற்
சிறந்த நிள்றாளிணையவை" எனவும் இந் நூலின்கண் முன்னும்
போந்தமை உணர்க.

      எல்லேம் - யாமெல்லோரும்.

      எல்லேம் பிரியற்க எனவே என ஒருசொல் வருவித்து முடிக்க.

      எல்லேம் பிரியற்க என்றது, பொருளும் பொன்னும் போகமு
மல்ல நின் திருவடியைப் பிரியாமையே" என்பதுபட நின்றது.

ப.--25