11
பொ. வே.சோமசுந்தரனார் உரை

பதினொராம் பாடல்
-----------

வையை

பொருட் சுருக்கம்

      1-30: கோள்கள் மழைபெய்தற்குரிய நிலையிலே நின்றன;
ஆதலின் கார்காலத்தே சையமலைக்கண் மழைபெய்ய,
வையையாற்றின்கண் வெள்ளம் பெருகிற்று. அவ் வெள்ளம்
மலையிலுள்ள சுரபுன்னை முதலிய மரங்களைத் திருமருதந்துறையின்
கண்ணே தந்தது. ஆகலின், அத் துறை மலர் மண்டபம் போன்றும்,
வையைமகளின் ஆடைபோன்றும், தேன்பருகும் நில மகளின்
மிடறுபோன்றும் திகழ்ந்தது.

      31-40: வளர்பருவத்தினையுடைய திங்களின் ஒளி எங்கும்
பரந்தாற் போன்று வையையாறு யாண்டும் தன் நீரைப் பரப்பி உலகிற்குப்
பயன் தந்தது; அது தேய்பருவத்துத் திங்கள் போன்று சில சமயங்களில்
வற்றினாலும், அமாவாசையிற் போல முழுதும் குறைதல் ஒருபொழுதும்
இல்லை; 'வையையே! நீ பெருகிய நாளில் இவ்வுலகம் புதுவருவாயைப்
பெறுமாறு போல வற்றின நாளினும் வருவாயைப் பெறும்பொருட்டு
இவ் வெள்ளம் சிறிது தணிந்து செல்வாயாக.'

      41-49: "வையையே! களவொழுக்கம் மேற்கொண்ட மகளிர் சிறந்த
அக வொழுக்கத்தைவிட்டுத் தாழ்ந்த கற்பொழுக்கத்தை
மேற்கொண்டாற்போல, நீ நின் பிறப்பகமாகிய மலையைக் கைவிட்டுக்
கடலாகிய நின் தலைவன் இல்லத்திற்குத் தனியே செல்லுதல் தகாது.
ஆதலின், ஆண்டுச் செல்லற்க" என்று கண்டோர் கூறாநிற்ப,
வையையாறு வந்தது. தலைவியைக் கைக்கொண்டு செல்லும்பொழுது
அத் தலைவியின் சுற்றத்தார் சுரத்திடைச்சென்று மறித்துப்
பொருதாற்போன்று மதுரையிலுள்ளோர் அதன் போக்கினை இடையே
தடைசெய்து மறித்தமையால் அது உட்புகுந்து நீராடுதற்கு உரியதாயிற்று.

      50-61: அங்ஙனம் நீராடுவாருள் சிலர் நெட்டியாலாகிய வாளைச்
சுழற்றுவர்; அதனாலாகிய ஈட்டியை ஏந்துவர்; சிலர் தேரில் ஏறுவர்;
சிலர் குதிரைகளையும் யானைகளையும் ஏறி அவற்றை நீரிற் செலுத்தி
உழக்குவர்; மூங்கிற்கோலால் நீரைத் தெறிப்பாரைச் சிலர் அரக்குநீர்
வட்டிலால் எறிவர்;

ப.--12
மாலையை வீசுவார்மேல் கொம்புநீரை வீசுவார் சிலர்; இங்ஙனம்
நீராடலின் வையை போர்க்களத்தை ஒத்தது.

      62-73: இளவேனிற்காலத்தே இவ் வையை வானுலகிற் றிரியும்
வானவூர்திகளைக் காட்டும் தெளிந்த நீரோட்டத்தையுடையது;
அக் காலத்தே நீராடுவோர் பாகோடு கூடிய இளந்தேறலை நுகர்ந்து
இன்னிசை கேட்டுப் பெரிதும் இன்புறாநிற்பர்; அழகாகிய தேறலைக்
கண்ணாலுண்டு களிப்பர்; 'வையையே இங்ஙனம் காரிற் கலங்கி
வேனிலிற் றெளிந்து நின்நிலைமை எப்பொழுதும்
ஒருபடித்தாயிருப்பதில்லை.'

      74-87: முன்பனியையுடைய மார்கழித் திங்களில் விரி நூல்
அந்தணர் திருவாதிரை நாளுக்குரிய சிவபெருமானுக்கு விழாச் செய்யத்
தொடங்கினர்; வேறுசில அந்தணர் பொற்கலம் ஏந்தினர்;
அம்பாவாடலைச் செய்யும் மகளிர் விடியற்காலத்தே நீராடினர்; அம்
மகளிர் குளிர்வாடை வீசுதலானே அந்தணர் வளர்த்த வேள்வித்தீயின்
அருகிற்சென்று தம் ஈர ஆடைகளை உலர்த்தினர்; 'வையையே!
அவ்வேள்வித் தீயிலிட்ட அவி நினக்கு வாய்ப்புடையதாக இருந்தது.

      88-92: 'வையையே! காமம் சாலா இளங்கன்னியர் நின்பால்
தந் தாய்மாரருகில் நின்று தைந்நீராடலாகிய தவத்தைச் செய்தற்குப்
பண்டு எத்தகைய தவம் செய்திருந்தனரோ கூறுக.'

      93-100: அங்ஙனம் தைந்நீராடுங்கால் ஒருத்தி தன் காதில்
நீலமலரைச் சூடி வேறொருத்தியை நோக்கினாள்; அவள் தன் காதில்
அசோகந்தளிரைச் சூடிக்கொண்டாள்; அவ் வசோகந்தளிரின் ஒளி
கதுவுதலானே அந் நீலமலர் இளவெயில் தழுவியது போலாயிற்று;
அப்பொழுது அசோகு சூடியவள் நீலஞ்சூடியவளை நோக்கி இவள்
தன் காதுகளில் நீலமலர்சூடி இப்பொழுது நான்கு விழி படைத்தாள்
என்று கூறி, அவள் உருவம் கொற்றவை போன்று தோன்றும் பொருட்டு
அவளுடைய நெற்றியில் கனல்விழிபோல ஒரு திலகமிட்டாள்.

      101-105: பவள வளையணிந்திருந்தாளைக் கண்ட ஒருத்தி,
குவளைத் தண்டினைப் பச்சைவளையலாகத் தன் கையிலணிந்து
கொண்டாள்; செங்கழுநீர்ப் பூவாலே கண்ணி தொடுத்த ஒருத்தியை
மற்றொருத்தி தகைப்பாள் போன்று மல்லிகையோடு நெய்தற்பூவை
விரவித் தொடுத்தாள்.

      106-114: வையையின்கண் வாழைத் தண்டைப் பற்றி நீந்திய
ஒருவன் ஒருத்தியைக் கண்டான்; அவன் நெஞ்சத்தை
அவள் கொள்ளை கொண்டாள்; அதனால், அவன் கை சோர்ந்தது;
அவன் கண்கள் அம் மடந்தையின் எழிலில் திளைத்தன; நீரோட்டம்
அவனைத் தன் போக்கில் தள்ளிச் சென்றது; அது கண்ட அம் மகள்
ஆயத்தினின்றும் பிரிந்து அவனைத் தொடர்ந்தாள்; அவளை, 'ஏடி!
ஆயத்தை விலகிச் செல்லாதே' என்று அவள் தாய் கடிந்தாள்; அதனால்
அவள் ஆற்றாமையால் அரற்றினாள்; இவ்வாறு அரற்றும்படி கார்காலத்து
வெள்ளம் கரை பொருது நிமிர்ந்து வந்தது.

115-121: இப்பொழுது அங்ஙனம் நிமிர்ந்து வராமல் தைந்நீரே யாம்
ஆடத்தகுந்த அளவின் தெளிந்து வருகின்றனை; நீ தக்காய் எனப்
பாராட்டுவர் சிலர்; வேறுசிலர் யாம் எம் காதலரைத் தழுவும் வீறு பெறுக
என்று வேண்டுவர்; வண்டு தாம் விரும்பிய மலரை நீத்துப் போவது
போல எங் கணவர் எம்மை விட்டுப் போகாமல் பாதுகாப்பாராக என்பர்
சிலர்; வேறு சிலர், யாமும் எங்கணவரும் முதுமை எய்தாமல் இத்தைந்
நீராடற்றவம் நிலைபெற்ற இளமையைத் தருவதாக! யாம் செல்வத்தோடு
சுற்றம் சூழ நிலை பெறுக என வேண்டுவர்;

122-132: இனி, ஆடவர் சிலர் அங்குள்ள மகளிரைத் தம் நண்பர்க்குக்
காட்டிப் பின்வருமாறு கூறினர்:-

"இவளைக் காண்மின்! இவள் தீண்டிவருத்தும் தெய்வம் போல்கின்றாள்;
இவளைக் காண்மின்! இவள் காமனுக்குக் கருவூலமும் படையுமாவாள்;
அவளுடைய கோதையில் யாழ்போல வண்டுகள் இசைத்தல் கேண்மின்!
அதோ பாலைபாடும் வண்டிசை கேண்மின்! உதோ யாமப்பண்பாடும்
தும்பியிசை கேண்மின்! தான் விரும்பிய மலரை நெரித்தா
ளொருத்தியைப் புடைத்து மீண்டும் புடைக்கவரும் வண்டினைக் காண்மின்!"

133-140: பரிபாடலானே புகழ்பெற்ற வையையே! இவ்வாறு கைக்கிளைக்
காமத்தைத் தருகின்ற நின்னிடத்தே இத்தைந்நீராடலை முற்பிறப்பிற்
செய்த தவத்தாலே இப் பிறப்பிற் பெற்றோம்; அதனை யாவரும்
நயக்கத்தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பினும் பெறுவேமாக.

விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை யெழில்வேழந் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்தமூன் றொன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருடெரி
   புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்
   அங்கி யுயர்நிற்ப வந்தணன் பங்குவின்
   இல்லத் துணைக்குப்பால் எய்த இறையமன்
   வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை
10 மதிய மறைய வருநாளில் வாய்ந்த
   பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
   மிதுன மடைய விரிகதிர் வேனில்
   எதிர்வரவு மாரி இயைகெனஇவ் வாற்றால்
   புரைகெழு சையம் பொழிமழை தாழ
15 நெரிதரூஉம் வையைப் புனல்;
   வரையன புன்னாகமும்
   கரையன சுரபுன்னையும்
   வண்டறைஇய சண்பகநிரை தண்பதம்
   மனைமாமரம் வாள்வீரம்
20 சினைவளர் வேங்கை கணவிரி காந்தள்
   தாய தோன்றி தீயென மலரா
   ஊதை யவிழ்த்த வுடையிதழ் ஒண்ணீலம்
   வேய்பயில் சோலை அருவி தூர்த்தரப்
   பாய்திரை யுந்தித் தருதலான் ஆய்கோல்
25 வயவர் அரிமலர்த் துறையென்கோ
   அரிமலர் மீட்போர்வை ஆரந்தாழ் மார்பிற்
   றிரைநுரை மென்பொகுட்டுத் தேமணச் சாந்தின்
   அரிவை யதுதானை என்கோகள் ளுண்ணூஉப்
   பருகு படிமிட றென்கோ பெரிய
30 திருமருத நீர்ப்பூந் துறை;
   ஆநா ணிறைமதி அலர்தரு பக்கம்போல்
   நாளி னாளி னளிவரைச் சிலம்புதொட்டு
   நிலவுப்பரந் தாங்கு நீர்நிலம் பரப்பி
   உலகுபயம் பகர வோம்புபெரும் பக்கம்
35 வழியது பக்கத் தமர ருண்டி
   மதிநிறை வழிவதின் வரவு சுருங்க
   எண்மதி நிறையுவா இருண்மதி போல
   நாள்குறை படுதல் காணுநர் யாரே
   சேணிகந்து கல்லூர்ந்த மாணிழை வையை
40 வயத்தணிந் தேகுநின் யாணரிறு நாள்பெற
   மாமயி லன்னார் மறையிற் புணர்மைந்தர்
   காமங் களவிட்டுக் கைகொள்கற் புற்றென
   மல்லற் புனல்வையை மாமலை விட்டிருத்தல்
   இல்லத்து நீதனிச் சேறல் இளிவரல்
45 எனவாங்கு
   கடையழிய நீண்டகன்ற கண்ணாளைக் காளை
   படையொடுங் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
   இடைநெறித் தாக்குற்ற தேய்ப்ப அடன்மதுரை
   ஆடற்கு நீரமைந்த தியாறு;
50 ஆற்றணி, வெள்வாள் விதிர்ப்போர் மிளிர்குந்த மேந்துவோர்
   கொள்வார்கோல் கொள்ளக் கொடித்திண்டேர் ஏறுவோர்
   புள்ளேர் புரவி பொலம்படைக் கைம்மாவை
   வெள்ளநீர் நீத்தத்து ளூர்பூர் புழக்குநரும்
   கண்ணாருஞ் சாயற் கழித்துரப் போரை
55 வண்ணநீர் கரந்த வட்டுவிட் டெறிவோரும்
   மணம்வரு மாலையின் வட்டிப் போரைத்
   துணிபிணர் மருப்பி னீரெக்கு வோரும்
   தெரிகோதை நல்லார்தங் கேளிர்த் திளைக்கும்
   உருகெழு தோற்ற முரைக்குங்கா னாளும்
60 பொருகளம் போலுந் தகைத்தே பரிகவரும்
   பாய்தேரான் வையை யகம்;
   நீரணி வெறிசெறி மலருறு கமழ்தண்
   தார்வரை யகலத்தவ் வேரணி நேரிழை
   ஒளிதிகழ்தகை வகைசெறிபொறி
65 புனைவினைப்பொலம் கோதையவரொடு
   பாக ரிறைவழை மதுநுகர்பு களிபரந்து
   நாகரினல் வளவினை வயவேற நளி புணர்மார்
   காரிகைமது ஒருவரினொருவர் கண்ணிற் கவர்புறச்
   சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி
70 உம்ப ருறையு மொளிகிளர்வா னூர்பாடும்
   அம்பி கரவா வழக்கிற்றே யாங்கதை
   காரொவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்
   நீரொவ்வா வையை நினக்கு;
    கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்
75  பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்து
    ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
    மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
    விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
    புரிநூல் அந்தணர் பொலங்கல மேற்ப
80  வெம்பா தாக வியனில வரைப்பென
    அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர்
    முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
    பனிப்புலர் பாடிப் பருமண லருவியின்
    ஊதை யூர்தர வுறைசிறை வேதியர்
85  நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
    றையன் மகளிர் ஈரணி புலர்த்தர
    வையை நினக்கு மடைவாய்த் தன்று
    மையாடல் ஆடன் மழபுலவர் மாறெழுந்து
    பொய்யாட லாடும் புணர்ப்பி னவரவர்
90  தீயெரிப் பாலுஞ் செறிதவமுன் பற்றியோ
    தாயருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல்
    நீயுரைத்தி வையை நதி,
    ஆயிடை, மாயிதழ் கொண்டோர் மடமாதர் நோக்கினாள்
    வேயெழில் வென்று வெறுத்ததோ ணோக்கிச்
95  சாயிழை பிண்டித் தளிர்காதிற் றையினாள்
    பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்
    குவளை குழைக்காதின் கோலச் செவியின்
    இவள்செரீஇ நான்கு விழிபடைத் தாளென்று
    நெற்றி விழியா நிறைத்திலக மிட்டாளே
100  கொற்றவைகோ லங்கொண்டோர் பெண்;
    பவள வளைசெறித்தாட் கண்டணிந்தாள் பச்சைக்
    குவளைப் பசுந்தண்டு கொண்டு;
    கல்லகா ரப்பூவாற் கண்ணி தொடுத்தாளை
    நில்லிகா வென்பாள்போ னெய்தற் றொடுத்தாளே
105  மல்லிகா மாலை வளாய்;
    தண்டு தழுவாத் தாவுநீர் வையையுள்
    கண்ட பொழுதிற் கடும்புனல் கைவாங்க
   நெஞ்ச மவள்வாங்க நீடு புணைவாங்க
   நேரிழை நின்றுழிக் கண்ணிற்ப நீரவன்
110 தாழ்வுழி யுய்யாது தான்வேண்டு மாறுய்ப்ப
   ஆயத்துட னில்லாள் ஆங்கவன் பின்றொடரூஉத்
   தாயத் திறமறியாள் தாங்கித் தனிச்சேறல்
   ஆயத்திற் கூடென் ராற்றெடுப்பத் தாக்கிற்றே
   சேயுற்ற கார்நீர் வரவு;
115 நீதக்காய் தைந்நீர் நிறந்தெளிந்தாய் என்மாரும்
   கழுத்தமை கைவாங்காக் காதலர்ப் புல்ல
   விழுத்தகை பெறுகென வேண்டுதும் என்மாரும்
   பூவீழ் அரியிற் புலம்பப் போகா
   தியாம்வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்
120 கிழவர் கிழவியா என்னாதேழ் காறும்
   மழவீன்று மல்லற்கேண் மன்னுக என்மாரும்
   கண்டார்க்குத் தாக்கணங்கிக் காரிகை காண்மின்
   பண்டாரம் காமன் படையுவள் கண்காண்மின்
   நீனெய்தாழ் கோதை யவர்விலக்க நில்லாது
125 பூவூது வண்டினம் யாழ்கொண்ட கொளைகேண்மின்
   கொளைப்பொருள் தெரிதரக் கொளுத்தாமற் குரல்கொண்ட
   கிளைக்குற்ற உழைச்சுரும்பின் கேழ்கெழுபாலை இசையோர்மின்
   பண்கண்டு திறனெய்தாப் பண்டாளம் பெறப்பாடிக்
   கொண்டவின் னிசைத்தாளம் கொளைச்சீர்க்கும் விரித்தாடும்
130 தண்டும்பி யினங்காண்மின் தான்வீழ்பு நெரித்தாளை
   முனைகெழு சினநெஞ்சின் முன்னெறிந்து பின்னும்
   கனைவர லொருதும்பி காய்சினத் தியல்காண்மின்
   எனவாங்கு
   இன்ன பண்பின் இன்றைந்நீ ராடல்
135 மின்னிழை நறுநுதன் மகண்மேம் பட்டல்
   கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
   இன்னியன் மாண்டேர்ச்சி இசை பரிபாடல்
   முன்முறை செய்தவத் திம்முறை இயைந்தேம்
   மறுமுறை யமையத்து மியைக
140 நறுநீர் வையை நய்த்தகு நிறையே.
      என்பது வரைவுமலிந்த தோழி கன்னிப்பருவத்துத் தைந்நீர் ஆடத்
தவம் தலைப்பட்டேமென வையையை நோக்கித் தலைமகன் கேட்பச்
சொல்லியது.

ஆசிரியர் நல்லந்துவனார் பாட்டு; நாகனார் இசை;
பண்ணுப் பாலையாழ்.

உரை

1-15: விரிகதிர் . . . . . . . . . . .வையைப் புனல்

      (இ-ள்.) வியல் விசும்பு விரிகதிர் மதியமொடு புணர்ப்ப - அகன்ற
வானத்தின்கண் பரவாநின்ற ஒளியையுடைய திங்களோடு
கூட்டப்படுவனவாகிய, எரிசடை எழில்வேழம் தலை எனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த - கார்த்திகையும் திருவாதிரையும் பரணியுமாகிய
நாள்கள் முதலாக இவற்றது பெயரான் இடபவீதி மிதுனவீதி மேடவீதி
என வேறுபடுத்தோதப்பட்ட, மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் - அம்
மூவகை வீதியுள்ளும், ஓரொன்று ஒன்பது நாள்களைக்கொண்ட மூவகை
இராசிகளுள், உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர - நிறமிக்க
வெள்ளிக்கோள் வந்து இடபராசியைச் சேராநிற்ப, படிமகன் வருடையை
வாய்ப்ப - செவ்வாய்க்கோள் மேடராசியைச் சேரா நிற்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த - பொருள்களை ஆராய்ந்தறிகின்ற புந்தி
என்னும் பெயரையுடைய புதன் மிதுன ராசியிலே நிற்க, அங்கி உயர்
நிற்ப புலர் விடியல் - கார்த்திகை நாள் உச்சமாக இருள் புலருகின்ற
விடியல் உண்டாக, அந்தணன் பங்குவின் துணையில்லத்துக்கு உப்பால்
எய்த - வியாழக்கோள் சனியின் இரட்டை இல்லங்களாகிய
மகரகும்பங்களுக்கு மேலே உள்ள மீனராசியைச் சேராநிற்ப, யமன் இறை
வில்லின் கடை மகரம் மேவ - இயமனைத் தமையனாகவுடைய
சனிக்கோள் தனுராசியின் பின்னாகிய மகரராசியிலே நிற்க, மதிய மறையப்
பாம்பு ஒல்லை வருநாளில் - இராகு மதி மறையும் படி வரும்நாளிலே,
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைய - அகத்தியன்
என்னும் மீன் உயர்ந்த தன் இடத்தைக் கடந்து மிதுனராசியைச்
சேராநிற்ப, விரிகதிர் வேனில் எதிர்வரவு மாரி இயைக என
இவ் வாற்றால் - முறுகின வெயிலையுடைய முதுவேனிற் பருவத்துப்
பின்வரும் கார்காலத்திலே மழை பெய்க என்ற இவ் விதிவழியாலே,
புரை கெழு சையம் பொழி மழை தாழ - உயர்ந்த சையமலைக்கண்
பொழியாநின்ற மழை மிகாநிற்ப, வையைப் புனல் நெரிதரூஉம் -
வையையாற்றின்கண் நீர் பெருகிவந்து கரைகளை நெரியா நிற்கும்;

      (வி-ம்.) வியல் விசும்பு - அகன்ற வானம். மேலுள்ள
நாண்மீன்களை, கீழே மிகத் தொலைவினிற்கும் திங்கள் சேர்ந்திருப்பது
போலக் காணப்படுதற்கு அவற்றை நேருக்கு நேராகக் கொண்டுள்ள
வானமே காரணமாகலின் விசும்பாற் புணர்க்கப்பட்ட என்பார் 'விசும்பு
புணர்ப்ப' என்றார்.

எரி தீயைத் தெய்வமாகவுடைய கார்த்திகை. இதனால் அதன் முக்
காலையுடைய இடபராசி உணர்த்தப்பட்டது.

      சடை - சடையையுடைய சிவபெருமானைத் தெய்வமாகவுடைய
திருவாதிரை; இதனால் அதனையுடைய மிதுனம் உணர்த்தப்பட்டது.

      வேழம் - யானைக்குப் பிறப்புநாளாகிய பரணி; இதனால் அதனை
யுடைய மேடம் உணர்த்தப்பட்டது.

      எனவே இடபவீதி மிதுனவீதி மேடவீதி என வகுக்கப்பட்ட
மூவகை வீதிகளுள் ஒவ்வொன்று ஒவ்வொன்பது நாள்களைத் தன்பால்
அடக்கிக் கொண்ட நன்னான்கு இராசிகளாகப் பகுக்கப்பட்ட அம்
முக்கூற்றுப் பன்னிரண்டு இராசிகளுள் என்றவாறு.

      இனி, உருகெழு வெள்ளி என்பது முதலாக இராசிகளுள் கோள்கள்
நின்றமுறை கூறுகின்றார். இதன்கண் கூறப்பட்ட கோணிலை வருமாறு;

வியாழம்
செவ்வாய்
வெள்ளி
புதன்
அகத்தியன்
 
இவ்விராசிச்சக்கரம் ஆவணித் திங்கள் அவிட்ட கேது நாளில் மதிமறைவு நிகழ்ந்த சனி
தொரு நாளின் கோணிலையைக் மதி குறிக்கின்றது.
கேது
சனி
மதி
இராகு
ஆதித்தன்
 
 
 
 

      இவ்வாறு நிகழ்ந்தது கி.மு. 161 ஆன கலி 2941 - பிரமாதி யாண்டு
ஆவணித் திங்கள் பன்னிரண்டாம்நாள் வியாழக்கிழமை சதுர்த்தசி 15-4
அவிட்டம் 45-53. ஆகுமென அறிஞர்கள்
      ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இம்முடிவே இப்பொழுது
பலரானும் ஒப்ப முடிந்தது.

      உரு - நிறம். ஏற்றியல் - இடபம். வருடை - மேடம்; ஆடு படி
மகன் - செவ்வாய். புந்தி - புதன். புந்தி என்பதற்கேற்பப் 'பொருள்தெரி
புந்தி எனப்பட்டது. அங்கி - கார்த்திகை. உயர்நிற்ப - உச்சமாக.
அந்தணன் - வியாழன். பங்கு - சனி. துணையில்லம் என மாறுக;
இரட்டை வீடு என்றவாறு. அவை மகர கும்பங்கள். இவற்றிற்கு உப்பால்
என்றது மேலுள்ள மீனத்தை. யமன்இறை என மாறுக. யமனாகிய
தமையினையுடைய சனி என்க. வில் - தனுர் இராசி. அதன் கடையாவது
மகரராசி. பாம்பு - இராகு மதி மறைய வரும் நாள் என்றது
சந்திரகிரகணம் உண்டாகும்படி வரும் நாள் என்றவாறு. 'பொதியின்
முனிவன்' என்றது அகத்தியமீனை. புரை வரை - உயர்ந்த இடம். கீறி
- கடந்து.

      மேற்கூறியவாறு கோள்நிற்கக் கார்த் தொடக்கத்தே மழைமிகும்
எனச் சோதிடநூலோர் வகுத்த விதிவழியாலே சையமலையில்
மழைமிக்கது என்க.

      விரிகதிர் வேனில் - வெயில்முறுகின முதுவேனில். மாரி -
கார்ப்பருவம். வையைப்புனல் பெருகிக் கரையை நெறிக்கும் என்க.

      (பரிமே.) 1. மேலவாய நாண் மீன்களைக் கீழாகிய மதி
புணர்தலாவது:- அவ்வநேர் நிற்றன் மாத்திரமாகலின், அவற்றை 'விசும்பு
புணர்ப்ப' என்றார்.

      "இவைமுதலாக இவற்றின் கீழ் இருத்தலாவது இவற்றது பெயரான்
இடபவீதி மிதுனவீதி மேடவீதி என வகுக்கப்பட்டு அம் மூவகை
வீதியுள்ளும் அடங்குதல். அவற்றுள் இடபவீதி: கன்னி துலாம் மீனம்
மேடம் என்பன. மிதுனவீதி தேள் வில்லு மகரம் கும்பம் என்பன.
மேடவீதி இடபம் மிதுனம் கற்கடகம் சிங்கம் என்பன. ஓரிராசியாவது
இரண்டே கால் நாளாகலின், நன்னான்கிராசியாகிய இவை ஓரொன்று
ஒன்பது நாளாயின. கோட்களுக்கு இடனாகலான் இவை பன்னிரண்டும்
'இருக்கை' எனப்பட்டன.

      6-7: ஆதித்தன் சீயத்தையடைய என்பார் 'புலர் விடியல் அங்கி
உயர் நிற்ப' என்றார்.

      9-10: 'பாம்பு மதியமறைய ஒல்லைவருநாள்' என்றது அவ்வாவணி
மாதத்து மதிநிறை நாளாகிய அவிட்டத்தை. எனவே மதியும் இராகுவும்
மகரத்து நிற்க என்பதூஉம், கேது அதற்கு ஏழாமிடமாகிய கற்கடகத்து
நிற்க என்பதூஉம் பெறப்பட்டன.

      இதனாற் சொல்லியது ஆவணித்திங்கள் அவிட்டநாளின்
இக்கோள்கள் தமக்குரிய நிலமாகிய இவ்விராசிகளில் நிற்பச் சோமனை
அரவு தீண்ட என்பதாயிற்று.

      11-12: அகத்தியன் என்னும் மீன் உயர்ந்த தன்னிடத்தைக் கடந்து
மிதுனத்தைப் பொருந்த, பொதியிலை விட்டெனவும் தோன்ற நின்றது.
16-22: வரையன . . . . . . . . .. . நீலம்

      (இ-ள்.) வரையன புன்னாகமும் - மலையின்கண்ணுள்ள புன்னை
மரமும், கரையன சுரபுன்னையும் - யாற்றினது கரையின் கண்ணுள்ள
சுரபுன்னைமரங்களும், வண்டு அறைஇய சண்பக நிரை - வண்டுகள்
இசைபாடுதற்குக் காரணமான சண்பக மரத்தின் நிரையும், தண்பதம்
மனைமாமரம் வாள்வீரம் - குளிர்ந்த தன்மையுடைய தேற்றாமரமும்
வாள்வீர மரமும், சினைவளர் வேங்கை - கொம்புகள் தழைத்து
வளராநின்ற வேங்கை மரமும், கணவிரி காந்தள் - செவ்வலரியும்
காந்தளும், தீயென மலரா தாயதோன்றி - நெருப்புப் போன்று மலரும்
தழைத்த தோன்றியும், ஊதை அவிழ்ந்த உடை யிதழ் ஒள் நீலம் -
காற்றானே அலர்த்தப்பட்ட நெகிழ்ந்த இதழ்களையுடைய நீலம் என்னும்
இவற்றின் மலர்களை;

      (வி-ம்) வரையன - மலையிடத்துள்ளனவாகிய. கரையன - கரை
யிடத்துள்ளனவாகிய புன்னாகம்- புன்னை. வண்டறைஇய -
வண்டறைதற்குக் காரணமான என்க. மனைமாமரம் - இல்லமரம்;
அஃதாவது தேற்றாமரம். வாள்வீரம் - வீரையென்னும் ஒருவகை மரம்.
கணவிரி - செவ்வலரி. காந்தள் - கோடல். தீயெனமலராதாய தோன்றி
என மாறுக. ஊதை - காற்று.

      இவற்றின் மலர்களை அருவிதூர்த்தர என இயையும்.

23-30: வேய்பயில் . . . . . .. . . .நீர்ப்பூந்துறை

      (இ-ள்.) வேய் பயில் சோலை அருவி தூர்த்தர - மூங்கில்
வளராநின்ற மலைச்சாரலின் சோலையிடத்தே அருவிநீர் கொணர்ந்து
குவிக்க, பாய்திரை உந்திப் பெரிய திருமருத நீர்ப்பூந்துறை - அவற்றைப்
பாயாநின்ற நீர் தள்ளிக்கொண்டு வந்து அகன்ற திருமருதந்துறை என்னும்
நீராடுதற்குரிய அழகிய துறையின்கண் தருதலானே அத்துறையை,
ஆய்கோல் வயவர் அரிமலர்த்துறை என்கோ - ஆராய்ந்து மலர்
பறித்தற்குரிய கோலினையுடைய வலிய குடிகள் தாம் பறித்த நிறமுடைய
மலர்களைக் கொணர்ந்து குவித்துவைக்கும் மண்டபம் என்று
கூறுவேனோ?, அரிமலர் மீப்போர்வை ஆரம் தாழ் மார்பின் திரை நுரை
மென்பொகுட்டு தேம் மணச் சாந்தின் - நிறமுடைய மலராகிய
போர்வையினையும், மலையினுள்ள முத்துக்கள் தாழ்ந்த மார்பினையும்
அலையினையும் நுரையினையும் மெல்லிய குமிழிகளையும் இனிய
மணமுடைய சந்தனச் சாந்தினையும் உடைய, அரிவையது தானை
என்கோ - வையையாகிய நங்கையினது ஆடையின் முன்றானை என்று
கூறுவேனோ?. கள் உண்ணூஉ பருகு படி மிடறு என்கோ - கள்ளை
வாயிற் கொண்டு பருகும் நிலமகளினது மிடறு
என்று கூறுவேனோ இவ்வுவமைகளுள் எதனைத் தேர்ந்து கூறுவேன்;

      (வி-ம்.) வேய் - மூங்கில். மலையருவி - சாரலிலுள்ள சோலையிற்
கொணர்ந்து குவிக்க அவற்றை நீர் கொணர்ந்து திருமருதந் துறையிற்
குவித்ததாக. அங்ஙனம் குவிக்கப்பட்ட அத்துறை மலர்கொணர்ந்து
குவிக்கும் மண்டபம் போன்றும் வையைமகளின் முன்றானை போன்றும்
நிலமகளின் மிடறுபோன்றும் தோன்றிற்று என்பதாம்.

      வயவர் - ஈண்டு அரண்மனைப் பூம்பொழிலில் மலர்பறிக்கும்
குடிகள். மண்டபம் - மலர்கட்டும் இடம் என்க. கோல் பூப்பறித்தற்குரிய
கோல். ஆரம் - முத்துமாலை. மென்பொகுட்டு - மெல்லிய நீர்க்குமிழி.
அலையும் நுரையும் குமிழியுமாகிய மேலாடையினையுடைய எனினுமாம்.
படி - நிலமகள். மிடறு - கழுத்து. மலரானே அணிசெய்யப்பட்ட கழுத்து
என்க.

      (பரிமே.) வரைவுமலிந்த தோழி வையைச் சிறப்புக் கூறுவாள்
இத்துணையும் தான் கருதியவாற்றாற் கூறி, மேல் கண்டார்
கூறுகின்றவாற்றாற் கூறுகின்றாள்.

31-40: ஆநாள் . . . . .. . . . . . .நாள்பெற

      (இ-ள்.) மதி ஆம் நாள் நாளின் நாளின் நிறை அலர் தரு
பக்கம்போல் - பிறை தோன்றிய நாள் தொடங்கி நாளுக்கு நாள்
வளர்கின்ற வளர்பக்கம்போல் நாளுக்குநாள் பெருகி, நிலவுப் பரந்தாங்கு
- அதன் நிலவொளி உலகில் எங்கும் பரவுமாறுபோல, நளிவரைச் சிலம்பு
தொட்டு - செறிந்த மலைச்சாரல் தொடங்கி, நிலம் நீர் பரப்பி -
நிலமெங்கும் நீரைப்பரப்பி, உலகு பயம் பகர - உலகத்திற்குப் பயனை
விளைத்துக் கொடுத்துப் பாதுகாத்து, பெரும் பக்கம் வழியது -
அவ் வளர் பக்கத்துப் பிற்பக்கமாகிய தேய்பக்கத்து, அமரர் உண்டிமதி
நிறைவு அழிவதின் - தேவர்களுக்கு உணவாகிய அத்திங்கள்
நாள்தோறும் தனது நிறைவினின்றும் ஒருகலை அழியுமாறுபோல, வரவு
சுருங்க - நீரினது வருவாய் சுருங்குதலானே, நாளுக்குநாள் சிறிதுசிறிது
வற்றிவருங்காலத்தும், எண் மதி நிறை - எட்டாம்நாள் திங்களின்
அளவாதலன்றி. இருள் உவாமதிபோலக் குறைபடுதல் நாள்
- அமாவாசையின்கண் திங்கள் முழுதும் தேய்ந்தொழிதல் போன்று நின்
கண் நீர் முழுதும் வற்றியொழிந்த நாளினை, யாரே காணுநர் -
இவ்வுலகில் யாரே காண்கின்றனர், சேண் இகந்து கல் ஊர்ந்த மாண்
இழை வையை - அதனால், நெடுந்தூரத்தைக் கடந்து மலைகளிலே
ஊர்ந்துவந்த மாட்சிமையுடைய அணிகலன்களையுடைய வையை மகளே!,
நின் இறுநாள் யாணர் பெற - நீ பெருகின நாளின் வருவாயேயன்றி

நினது வற்றின நாளின் வருவாயையும் இவ்
வுலகம் பெறும் பொருட்டு, வய தணிந்து ஏகு - நினது வலி தணிந்து
மெல்லெனச் செல்வாயாக!

      (வி-ம்.) ஆம் நாள் - தோன்றும் நாள்; ஆகும் நாள் என்பது
ஆம் நாள் என நின்றது. அலர்தரு பக்கம் - வளர்பக்கம். நாளின்
நாளின் - நாளுக்குநாள். நளி - செறிவு. சிலம்பு - மலைச்சாரல். பகர
என்னும் செயவெனெச்சத்தைப் பகர்ந்து எனத் திரித்துக் கொள்க. பகர்ந்து
- விளைத்துக்கொடுத்து என்க. பகர்தல் - கொடுத்தல்.
அஃதப்பொருட்டாதல் "பல்வளம் பகர்பூட்டும்" (கலித்தொகை 20-1.)
என்னும் அடிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் வரைந்த "பல
உணவுகளையும் விளைந்து கொடுத்து" என்னும் நல்லுரையிற் காண்க
பெரும் பக்கம் - வளர்பக்கம். வழியது - பின்பக்கம்; தேய்பக்கம்.
அழிவதின் - அழிவதுபோல. அமரர் நாடோறும் மதியின் கலைகளை
உணவாக உண்கின்றமையாலே மதிதன் நிறைவு அழிவதுபோல என்னும்
பொருள் தந்து அமரர் உண்டி என்பது குறிப்பேதுவாதல் உணர்க.
நீர்வரவு சுருங்க என்க. இருள்உவா என மாறுக. அஃதாவது அமாவாசை.
அன்று திங்கள் முழுதும் தேய்ந்தொழிதல் போல என்க. எண்மதி நிறை
- அட்டமித் திங்களளவு. ஆதலன்றி என வருவித்துக் கூறுக. குறைபடுதல்
நாள் என மாறுக. குறைபடுதலையுடைய நாள். யாரே என்னும் வினா
காணுநர் ஒருவருமில்லை என்பதுபட நின்றது. சேண் - நெடுந்தூரம்.
சேணிகந்து கல்லூர்ந்து வந்த என்பது. தான் வருந்தியும் பிறரை
வாழ்விக்கும் சான்றாண்மையுடையை என்பதற்குக் குறிப்பேதுவாய்
நின்றது மாணிழை என்றது முற்கூறப்பட்ட 'அரிமலர் மீப்போர்வை
ஆரம்" முதலியன. வய - வலி. நீர்க்கு வலிமையாவது மிகுதியே
ஆகலின், ஆசிரியர் பரிமேலழகர் வய என்றதற்கு மிகுதி என்று
பொருள் கூறினர். வய என்பதற்கே மிகுதி என்னும் பொருள்
உளதாயினும் கொள்க.

      40. இறுநாள் என்பதே பரிமேலழகர் கொண்ட பாடம் என்பது
அவருரையானும் குறிப்பானும் உணரலாம். ஈரிடத்தும் இருநாள் என
இருத்தல். திருத்தப்படுதல் வேண்டும். இறுநாள் - வற்றும்நாள்:
இறுநாளும் எனற்பால எச்ச உம்மை தொக்கது தணிந்தேகுதல் இருநாளும்
யாணர்பெற ஏதுவாகாமையான் இருநாளும் என்னும் முற்றும்மை தொக்கது
எனக்கோடல் பொருந்தாமையானும் இறுநாள் என்பதே பாடமாதலைத்
தெளிக.

      (பரிமே.) 34. பகர்ந்தென்பது பகரவெனத் திரிந்து நின்றது.

      40. இறுநாளும் என்னும் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

41 - 49: மாமயில் . . .. . . . . .. . . . அமைந்ததியாறு

      (இ-ள்.) (39 வையை) மறையிற்புணா மைந்தர் மாமயில் அன்னார்
- களவின்கண் புணர்தலையுடைய காதலரையுடைய சிறந்த மயில்போன்ற
மகளிர், காமம் களவிட்டு - காமவின்பச் சிறப்புமிக்க
அக் களவொழுக்கத்தை விட்டு, கைகொள் கற்பு உற்றென - இழிந்த
தன்மையைக் கொண்ட கற்பொழுக்கத்தினை மேற்கொண்டு
அக் கணவனுடைய இல்லிற் சென்று அடங்கிக்
கிடந்தாற்போல, மல்லல் புனல் வையை - வளமுடைய நீராகிய செல்வப்
பெருக்கினையுடைய வையை மகளே!, நீ மாமலை விட்டு - நீ நினது
பிறந்தையாகிய பெரிய மலையைக் கைவிட்டு, இருத்தல் இல்லத்துத்
தனிச்சேறல் இளிவரல் - நினது கடலாகிய தலைவனது இருத்தற்குரிய
இல்லத்திற்குத் தனியே செல்லுதல் இழிவாகும்; ஆதலால் அங்குச்
செல்லாதே கொள், என - என்று கண்டோர் சொல்லாநிற்ப, கடை அழிய
நீண்டு அகன்ற கண்ணாளை - எல்லையற நீண்டு அகன்ற
கண்ணையுடைய தலைவியை, காளை படையொடும் கொண்டு
பெயர்வானை - தலைவன் உடன் கொண்டு படைக்கலங்களோடு
செல்லாநிற்ப அங்ஙனம் செல்கின்றவனை, சுற்றம் இடைநெறி தாக்குற்றது
ஏய்ப்ப - அத் தலைவியினுடைய சுற்றத்தார் அச்செயலை அறிந்து
அத் தலைவன் செல்லும் இடைச்சுரத்துச் சென்று
அவனோடுபோரிட்டாற்போல, அடல் மதுரை - வெற்றியையுடைய
மதுரைக்கண் உள்ள மாந்தர் நீர் ஆடற்கு அமைந்தது யாறு- இடையே
புகுந்து தடை செய்து நீராடுதற்கு ஏற்றது இவ் வையையாறு;

      (வி-ம்.) மறை - களவு: மைந்தரையுடைய மயிலன்னார் என மாறுக.
காமச் சிறப்புடைய களவு என்க. களவு: ஈறு கெட்டுக் 'கள' என நின்றது.
மயிலன்னார் களவினைவிட்டுக் கற்பொழுக்க மேற்கொண்டு கணவன்
இல்லத்து அடங்கினாற்போல் வையையே நீ கடலிற் றனிச் சென்று
அடங்குதல் இளிவரல் என்க. காமத்தாற் சிறந்தது களவொழுக்கம்,
கற்பொழுக்கம் இழிந்தது என்றதனை 9ஆம் பாடலில்,

      "வாய்மொழிப் புலவீர்.. . . .. என்னும் 13 ஆம் அடி தொடங்கி 26
- கொள்ளாரிக் குன்றுப்பயன்' என்னும் அடியீறாகவுள்ள பகுதியானும்
அதன் உரையானும் உணர்க. கைகொள் கற்பு - சிறுமையையுடைய
கற்பொழுக்கம். கை - சிறுமை. 'இளிவந்த' என்பர் பரிமேலழகர்.

      மல்லல் - வளம். மாமலை - பெரிய மலை. இருத்தல் இல்லம் -
புக்கவில்லம். இதனால் மாமலையாகிய பிறந்தையை விட்டு என உரை
கூறப்பட்டது. பிறந்தை - பிறந்தவில்லம்.

      கணவன் உடன்கொண்டு போங்கால் அவனோடு சேறலே
மகளிர்க்குச் சிறப்பாதலன்றி அவன் மனைக்குத் தனியே சேறல்
இளிவரலாம். ஆகலின் நீ தனியே சேறற்க என்றவாறு.

      ஆங்கு: அசை. கடை - எல்லை. காளை - தலைவன். ஒரு
தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு இடைச்சுரத்தே சென்றானாக.
அஃதறிந்த தலைவியின் தமர் இடைச்சுரத்தே அவனை மறித்துப் போர்
செய்தாற் போல, மதுரையிலுள்ளோர் வையையின் போக்கை இடையே
தடை செய்து நீராடுதற்கு ஏற்றது வையை என்க. தடை செய்தல் -
அணையிட்டுத் தடுத்தல்.
      (பரிமே.) 45. என - என்று கண்டோர் சொல்ல

      46. கடையழிய - எல்லையற.

      48. இடைநெறி - இடைச்சுரம். மதுரை - மதுரையார்.

      49. அமைந்தது - ஏற்றது.

50-61: ஆற்றணி . . . . . . . . . வையையகம்

      (இ-ள்.) ஆற்று அணி - இனி அவ் வையையாற்றின்கண் அணி
அணியாக நின்று, வெள் வாள் விதிர்ப்போர் - நெட்டியாற் செய்த
வெள்ளிய வாட்படையைச் சுற்றுவோரும், மிளிர் குந்தம் ஏந்துவோர் -
விளங்காநின்ற குந்தப்படையைக் கையிலேந்தி நிற்போரும், கொள்வார்
கோல் கொள்ள - மகளிர் தேர்க்கு மகளிரும் மைந்தர் தேர்க்கு
மைந்தருமாகக் கோல் கொள்ளுதற்குரியோர் கோலினைக்
கைக்கொள்ளாநிற்ப, கொடித் திண் தேர் ஏறுவோர் - கொடியையுடைய
திண்ணிய தேர்களிலே ஏறுவோரும், புள் ஏர் புரவி பொலம்படைக்
கைம்மாவை - பறவை பறப்பதுபோன்று விரைந்துசெல்லும்
இயல்பினையுடைய குதிரைகளையும் பொன்னாலாகிய
நெற்றிப்பட்டத்தையுடைய யானைகளையும் ஏறி, வெள்ளநீர் நீத்தத்துள்
ஊர்பு ஊர்பு உழக்குநரும் - வெள்ளமாகப் பெருகிய அந் நீரின்கண்
நீந்துதற்குரிய ஆழியவிடத்தே அவற்றைச் செலுத்திச் செலுத்திக்
கலக்குவோரும், கண் ஆரும் சாயல் கழித் துரப்பாரை - கண்ணுக்கு
நிறைந்த அழகையுடைய மூங்கிற்குழாயாலே நீரைவாங்கித் தம்மேல்
செலுத்துகின்றவர்களை, வண்ணநீர் கரந்த வட்டு விட்டெறிவோரும் -
அரக்குநீரை அடக்கிய வட்டாலே எறிவோரும், மணம்வரும் மாலையின்
வட்டிப்போரும் - தம்மை நறுமணங் கமழ்தற்குக் காரணமான
மலர்மாலையினாற் சுழற்றிப் புடைப்போரையும், துணி இணர் மருப்பின்
நீர் எக்குவோரும் - அறுக்கப் பட்ட சருச்சரையையுடைய கொம்பின்கண்
அடக்கப்பட்ட மணநீரினை வீசுவோரும், தெரிகோதை நல்லார் நாளும்
தம் கேளிர்த் திளைக்கும் - இவ்வாறாக ஆராய்ந்தணிந்த
மாலையினையுடையமகளிர் தம் காதலரோடு நாடோறும் ஆடி
மகிழும், உருகெழு தோற்றம் உரைக்குங்கால் - அழகு பொருந்திய
காட்சிதனை உவமைகாட்டிக் கூறுமிடத்து, பரி கவரும் பாய்
தேரான் வையையகம் - பகைவருடைய குதிரைகளை வென்று
கவர்ந்து கொள்ளும் விரைகின்ற தேரினையுடைய பாண்டிய மன்னனது
வையையாற்றினது உள்ளிடம், பொருகளம் போலும் தகைத்து
- போர்க்களம் போன்ற தன்மைத்து எனலாம்.

      (வி-ம்.) வாள் குந்தம் என்னும் படைகள் நெட்டி முதலியவற்றாற்
செய்யப்பட்டன. சூந்தம் - ஒருவகைப் படைக்கலம். 'கொள்வார் கோல்
கொள்ள' என்றது, 'மகளிர்க்கு மகளிரும் மைந்தர்க்கு மைந்தரு (பாகரு)ம்
கோல் கொள்ள' என்றவாறு. புள்ளேர் என்புழி, ஏர்: உவமவுருபு.
பொலம்படை - பொன்னாற்செய்த நெற்றிப்பட்டம். கைம்மா - யானை.
நீத்தம் - நீந்துதற்குரிய ஆழிய இடம் என்க. ஊர்பு: செய்பு என்னும்
வாய்பாட்டெச்சம்: ஊர்ந்து - செலுத்தி. உழக்குதல் - கலக்குதல்.
கண்ணாரும் - கண்ணிறைந்த. சாயல் - அழகு. கழி - ஈண்டு மூங்கிற்
குழை. துரத்தல் - செலுத்துதல். வட்டு - வட்டமானதொரு மணநீர்
அடைத்த கருவி. இதனை,

      "குலிகநீர் நிறைந்த பந்து" (சீவக.968) எனவும், "அரக்குறு நறுநீர்
அஞ்செங் குலிகம் குங்கும வூறலொடு கொண்டகத் தடக்கிய எந்திர
நாழிகை" (பெருங். 1. 41: 16-8) எனவும் பிறர் கூறுமாற்றானும் உணர்க.

      பாய்தேரான் - பாண்டியமன்னன். பாண்டியமன்னனை ஈண்டு
நினைந்து கூறுதலின் பொருகளமும் அவன் போர்பொருதும் களம்
என்றல் மிகையன்று.

      (பரிமே.) 50. வாளும் குந்தமும் கிடை முதலியவற்றான்
அமைக்கப்பட்டன.

      இது காரின்கண் ஆடல்; மேல் இளவேனிற்காலம் (ஈண்டுக்
கூறியது வையையின்கண் கார்ப்பருவத்தே நீராடியதனை; இனிமேலே
இளவேனிற் காலத்து நிகழ்ச்சி கூறப்படும் என்றவாறு.)

62-71: நீரணி . . . . . . . . . ஆங்கதை

      (இ-ள்.) நீர் அணி - நீராடுதற்கேற்ற அணிகலன்களோடு, வெறி
செறி மலர் உறு கமழ் தண் தார் வரை அகலத்து - தேன் செறிந்த
மலர்களாற் புனைந்த மிக்க நறுமணத்தையுடைய குளிர்ந்த மாலைகளையும்
அணிந்த மலைபோன்ற மார்பினிடத்தே, அவ் ஏர் அணி - அவ் வழகிய
ஒப்பனையையும், நேர் இழை - அதற்கேற்ற பிற அணிகலன்களையும்,
ஒளி திகழ் தகை வகை செறி பொறி புனைவினைப் பொலங்
கோதையவரொடு - ஒளி விளங்காநின்ற கட்டுதல் வகைமை செறிந்த
மூட்டுவாய் புனைந்த தொழிலையுடைய பொன்னரி மாலையினையுடைய
மகளிரோடே, பாகர் இறை வழை மது நுகர்பு - பாகுதங்கிய
இளங்கள்ளைப் பருகி, களிபரந்து - களிப்பு மிகுந்து, நல் வளவினை
நாகரின் வயவு ஏற நளிபுணர்மார் - நல்ல செல்வத்தைத் தருகின்ற அற
வினையைச் செய்த நாகர்களைப் போன்று விருப்பம் மிக இடைவிடாது
இறுகப் புணர்தற்கு, சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி -
தாளம் அமைந்த பாடலின்பத்தாலே தமது கிளர்ச்சியை உடைய செவியை
நிறைத்துக் கொண்டு மேலும், ஒருவரின் ஒருவர் காரிகை மதுகண்ணிற்
கவர்புற - இருபாலரும் ஒருவரிடத்து ஒருவர் அழகாகிய
மதுவைக் கண்ணாலே கவர்ந்து பருகும்படி, உம்பர் உறையும் ஒளிகிளர்
வான் ஊர்பு ஆடும் அம்பி - தேவர்கள் உறைதற்கிடமான ஒளிமிக்க
வானத்தின்கண் வைமானிகர் ஊர்ந்து செல்லாநின்ற விமானத்தை,
கரவாவழக்கிற்று- தெளிவாகக் காட்டாநின்ற தெளிந்த நீரோட்டத்தையுடையது
அவ் வையை யகம்;


      (வி-ம்.) நீர் அணி - நீராடற்கேற்ற அணிகள். வெறி - கள்; தேன்.
வரையகலம் - தொய்யிலெழுதிய. மார்புமாம்: வரை அகலம் என்பதற்கு
வரையை ஆகுபெயராகக் கொண்டு நகிலாகிய மலைகளையுடைய மார்பு
என்க. இழை - அணிகலன். தகை - கட்டுதல். பொறி - மூட்டுவாய்.
பொலங்கோதை - பொன்னரிமாலை. பாகர் - பாகு. இறை - தங்கிய.
வழைமது - இளங் கள். நுகர்பு - நுகர்ந்து. நாகர் - தேவர்.
நாகலோகத்தில் உள்ள பாம்புகளுமாம். புணர்ச்சிக்கு நாகர் புணர்ச்சி
உவமை என்க. 'நல்வளவினை நாகர்' என மாறுக நளிபுணர்மார்
- இறுகப் புணரும் பொருட்டு. காரிகை மது - அழகாகிய மது. சீர் -
தாளம். பயம் - இன்பம். உணர்ச்சியாற் கிளர்ச்சியுடைய செவி என்க.
ஊர்பு ஆடும் - ஊர்ந்து திரியும். அம்பி - விமானம்: வானவூர்தி.
தெவி - கொண்டு.

      வானத்திலே செல்லும் வைமானிகருடைய விமானத்தைத்
தன்னுட்கரவாது நன்கு காட்டாநின்ற தெளிந்த நீரோட்டம் என்க.
வைமானிகர் - விமானமுடையவர்; தேவரில் ஒரு வகுப்பினர்.

      இனி, பரிமேலழகர் உரையின்கண் நீரோட்டத்தை என்பதன்றி
'நீரோடத்தை' என்றும் பாடபேதமுளது. கரவா என்றது மறைவின்றி
நன்குகாட்டும் என்பதுபட நின்றது. எனவே தெளிந்த நீரோட்டம்
என்பதாயிற்று.

      இனி உறை வானூர்பு ஆடும் உம்பர் அம்பி கரவா என மாறி
வானின் விமானத்து ஊர்ந்து திரியும் உம்பரை நீரோடம் மறைவின்றிக்
காட்டாநிற்கும் எனப் பொருள் கூறி, தெளிந்த நீரின்மேல் ஓடமூர்ந்து
செல்லும் மகளிரும் மைந்தரும் வானவெளியில் விமானமூர்ந்து செல்லும்
தேவமகளிரையும் மைந்தரையும் ஒத்துத் தோன்றா நின்றனர் என்பது
கருத்தாகக் கொள்ளினும் பொருந்தும்.

      ஆங்கு, அதை என்னுமிரண்டும் அசைகள்.

      (பரிமே.) ஐம்புலன்களாலும் இன்பம் நுகர்தற்கு
இடனாயிற்றென்றவாறு.

      64. (திகழ்தகை வகை செறி பொறி) வினைத்தொகை யடுக்கு.

      'பரந்து தெவி' என்னும் செய்தென்னெச்சங்கள் கவர்புற என்னும்
'வினைமுதல் வினைகொள்ள அச் செயவெனெச்சம் வழக்கிற்று' என்னும்
பிறவினை கொண்டது.

      'இத்துணையும் வையையைப் படர்க்கையாக்கிக் கூறிமேல் எதிர்
முகமாக்கி . . . .. . . .' (க் கூறுகின்றாள்.) . . . . . .

ப.--13

72 - 79: காரொவ்வா....................................பொலங்கல மேற்ப

      (இ - ள்.) வையை கார்வேனில் கலங்கித் தெளிவரல் -
வையையே! இவ்வாறு கார்காலத்திலே கலங்கி வேனிற்காலத்தே
தெளிதலானே, நீர் ஒவ்வா நினக்கு - உனக்கு இந்நீர்மை எப்பொழுதும்
ஒத்திருக்கின்றதில்லை, கார்வானம் கனைக்கும் அதிர்குரல் நீங்க -
கார்ப்பருவத்து முகில்கள் முழங்காநின்ற திசைகள் அதிர்வதற்குக்
காரணமான இடியொலி நீங்காநிற்ப, பனி படு பைதல் விதலைப் பருவத்து
- பனி மிகுதலானே குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப்
பருவத்தின்கண், ஞாயிறு காயா நளி பினமாரிக் குளத்து - ஞாயிற்று
மண்டிலம் சுடுதலில்லாத குளிர்ந்த கடைமாரியையுடைய
மார்கழித்திங்களில், மா இருந் திங்கள் மறுநிறை ஆதிரை - மிகப் பெரிய
திங்கள் மண்டிலம் தன்னகத்துள்ள களங்கத்தோடே வளர்ந்து நிறைந்த
திருவாதிரை நாளின்கண், விரிநூல் அந்தணர் விழவுதொடங்க - விரிந்த
மெய்ந்நூல்களையுணர்ந்த அறவோர் அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய
இறைவனுக்குத் திருவிழாவைத் தொடங்காநிற்ப, புரிநூல் அந்தணர்
பொலங்கலம் ஏந்த - முப்புரியாகிய பூணூலையுடைய பார்ப்பனர்
அவ் விழவின்கண் இறைவனுக்குப் பலிப்பொருள் பெய்த
பொற்கலங்களையும் பிறவற்றையும் ஏந்தாநிற்ப;

      (வி - ம்.) கார் கலங்கி வேனில் தெளிவரல் நீர் நினக்கு ஒவ்வா
எனக் கூட்டுக. நீர் - நீர்மை: இயல்பு. கார் - கார்ப்பருவம். தெளிவரல்
- தெளிதல். 'கார்.................நினக்கு' என்றது, பழிப்பாள் போன்று
வையையைப் புகழ்ந்தது இனி 'கனைக்கு மதிர்குரல்' என்பது தொடங்கி
மேலே தைந்நீராடல் கூறுகின்றாள்.

      வையை: அண்மைவிளி. கார்வானம் கனைக்கும் அதிர்குரல் நீங்க
என மாறுக. வானம்: ஆகுபெயர்: முகில். பைதல் - குளிர் விதலை -
நடுக்கம். முன்பனிப்பருவத்தே ஞாயிற்றின் வெயில் சுடுதலின்றாகலின்
'ஞாயிறு காயா மாரி' என்றார். நளி - குளிர்ச்சி: நளி பின்மாரி என
மாறிக் கூட்டுக. குளம் - மார்கழித்திங்கள். திங்கள் வளருந்தொறும்
மறுவும் வளர்தலின் 'திங்கள் மறுநிறை ஆதிரை' என்றார்.
மாயிருந்திங்கள்-மிகப்பெரிய திங்கள்: முழுமதி என்றவாறு.
ஆதிரை-திருவாதிரைநாள். விரிநூல் அந்தணர் என்றது அறவோரை.
புரிநூல் அந்தணர் என்றது பார்ப்பனரை.

      பொலங்கலம் - பொற்கலம். இறைவனுக்குப் பலிப்பொருள் பெய்த
பொற்கலம் என்க. எடுத்த மொழியின் இனஞ்செப்பிப் பொற்கல முதலிய
பூசனைப் பொருள்களை ஏந்தி என்க.

      (பரிமே.) 76. திருவாதிரை நிறைமதி நாளாங்கால் ஆதித்தன்
*பூத்தடத்தின்கண் (பூத்தடம்-புனர்பூசம்) நிற்குமாதலின் அதனையுடைய
மார்கழிமாதம் குளம் எனப்பட்டது.


(பாடம்.) * பூராடத்தின்கண்.
78. ஆகமங்களையுணர்ந்த பூசகர் அத் திருவாதிரைக்குத் தெய்வ மாகிய
இறைவனுக்கு (சிவபெருமானுக்கு) விழாவைத் தொடங்க.

80 - 87: வெம்பாதாக......................................மடைவாய்த்தன்று

      (இ - ள்.) வியல் நிலவரைப்பு - அகன்ற இந் நிலவுலகம்,
வெம்பாதாக - ஞாயிற்றின் தெறலாலே வெப்பமுடைத்தாகாமல்
மழையாலே குளிர்வதாக என்று வாழ்த்தி, அம்பா ஆடலின் ஆய்தொடிக்
கன்னியர் - அம்பா ஆடுதலையுடைய ஆராய்ந்திட்ட வளையலை
அணிந்த கன்னிமைப் பருவத்து மகளிர், முனித்துறை முதல்வியர் -
சடங்கறிந்த முதுபார்ப்பனிமார், முறைமை காட்ட - நோன்பு செய்யும்
முறைமையினை அறிவிக்க, பனி புலர்பு ஆடி - பனியையுடைய
வைகறைப்பொழுதிலே நீராடி, பருமணல் அருவியின் ஊதை ஊர்தர -
பரிய மணலிலே ஒழுகாநின்ற நீரின்கண்ணே குளிர்வாடை தவழ்ந்து
வருதலானே, உரை சிறை வேதியர்-நினது நீர் உராய்ந்து சென்ற
கரையின்கண்ணே உறையாநின்ற அந்தணரது, நெறி நிமிர் நுடங்கு அழல்
பேணிய சிறப்பின் - வேத நெறியாலே வளர்க்கப்பட்ட வளைந்தெரியும்
தீயினைப் பேணிய சிறப்புடனே, தையல் மகளிர் - ஒப்பனையையுடைய
அக் கன்னி மகளிர் சென்று, ஈரணி புலர்த்தர-அதன்கண் தம் ஈர
ஆடையை உலர்த்தாநிற்ப, வையை-வையையே, மடை நினக்கு வாய்த்தன்று.
அத் தீயின்கண் கொடுக்கும் அவி நினக்கு வாய்ப்புடையதாயிருந்தது;

      (வி - ம்.) வெம்பாதாக என்றது, மழையால் குளிர்வதாக
என்பதுபட நின்றது. அம்பாவாடல் - தைந்நீராடல். அம்பா - தாய்.
தாயோடு ஆடப்படுதலின் அம்பாவாடல் எனப்பட்டது கன்னியர் -
மணமாகாத இளமகளிர். முனித்துறை - சடங்கு முதல்வியர் என்றது.
பார்ப்பன முதுமகளிரை. முறைமை - நோற்கும் முறைமை. புலர்பு -
வைகறைப் பொழுது. புலர்பின்கண் என இடப்பொருட்டாக்குக. மணலருவி
என்றது, தெளிந்த நீர் என்பதுபட நின்றது. ஊதை - வடக்காற்று நீரிற்
றவழ்ந்து ஊதை வீசுதலானே குளிருடையராய் அக்குளிர் நீங்கத் தீயிற்
புலர்த்தர என்க. அத்தீயினை வலம் வந்து வழிபட்டு என்பார், 'பேணிய
சிறப்பின்' என்றார். உரைசிறை: வினைத்தொகை. உரைத்தல் -
உரிஞ்சுதல். நீரான் உரையப்பட்ட சிறை என்க. சிறை - கரை.
சிறைவேதியர் - கரையிலிறையும் அந்தணர். நெறி - வேதநெறி. நிமிர் -
வளர்ந்த: வளர்க்கப்பட்ட என்க. நுடங்கு அழல் - வளைந்து வளைந்து
எரியும் தீ. தையல் - ஒப்பனை. ஈரணி - ஈர ஆடை. வையை: விளி.
மடை - அவி. வாய்த்தன்று - வாய்த்தது.

      (பரிமே.) புலர்தற்கண் என்னும் ஏழனுருபு தொக்கது.

88 - 92: மையாடல்...............................நதி

      (இ - ள்.) மையாடல் மழபுலவர் மாறு எழுந்து - மையோலை
பிடித்த இளம் புலவரது விளையாட்டிற்கு மாறாக எழுந்து, பொய்
யாடல் ஆடும் புணர்ப்பின் அவர் - காமக்குறிப்பில்லாத விளையாட்டைச்
செய்கின்ற ஆயத்தினையுடைய அக் கன்னி மகளிர், அவர் தாய் அருகா
நின்று தவத் தைந்நீர் ஆடுதல் - அவரவர் தாயர் பக்கத்தே நின்று
நோன்புடைய இத் தைந்நீராடலை நின்னிடத்தே பெற்றது, எரி தீப்பாலும்
செறிதவம் முன்பற்றியோ - இங்ஙனம் நீர்க்கண் நின்றன்றி எரியாநின்ற
தீயின் பக்கத்திலே நின்று பொறிபுலன்களை அடக்கிச் செய்தற்குரிய
தவத்தினைப் பண்டைப் பிறப்புக்களினும் மேற்கொண்டாற்றினமையாலோ,
வையைநதி நீ உரைத்தி - வையைநதியே இப் பேற்றிற்குரிய காரணத்தை
நீயே கூறுவாயாக;

      (வி-ம்.) மையாடல் - மையோலை பிடித்தல். அஃதாவது, மை
தடவப்பெற்ற நெடுங்கணக்கு முதலிய சுவடிகளைக் கையிலேந்திப்
பயிலுதல். இங்ஙனம் முதன்முதலாகச் சுவடிபிடித்தலை மையாடல் என்று
பண்டையோர் வழங்கினர் என்றுணர்க. மை ஆகுபெயர். மையோலை
ஓலையின்கண்ணுள்ள எழுத்துக்கள் விளங்கித் தோன்றும்படி சுவடியில்
மைபூசுதலைச் செய்தலின் மையாடல் எனப்பட்டதெனினுமாம்.
இக் காலத்தார் இச் சடங்கினைச் 'சுவடிதூக்குதல்' என்று வழங்குகின்றனர்.
இச் சடங்குண்மையை.
"நனந்தலை உலகின் மிக்க நன்னுதன் மகளிர் தங்கள்
மனந்தளை பரிய நின்ற மதலைமை யாடு கென்றே"
(சீவக - 367)
எனவும்,
"ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்"
(சீவக - 2701)
எனவும் பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க.

      'மழபுலவர்' என்றது கல்லி தொடங்குமளவிலுள்ள
இளமாணவர்களை. மழபுலவர்க்கு மாறெழுதலாவது, இவ்
விளமாணவரோடு கூடி அவர்க்கு மாறாக நின்று விளையாடுதல். இதனை,

"இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயமாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமில் ஆயமொடு
. . . . . . . . . . . . . . . . . . . . .
குளித்து மணற்கொண்ட கல்லா இளமை"
(புறநா - 243)
என வரும் புறத்தானும் உணர்க.

      மறையெனலறியா மாயமில் ஆயத்தாராகலின் காமக்குறிப்பின்றியே
ஆடுதலைப் 'பொய்யாடல் ஆடும்' என்றார். புணர்ப்பு - ஆயம்: கூட்டம்.
'தீ எரிப்பாலும்' என்பதனை, 'எரிதீப்பாலும்' என மாறுக. உம்மை எச்ச
வும்மை. ஆகலான். இங்ஙனம் நீரின்கண் நின்று செய்தவமே யன்றி
நெருப்பின்கண்ணும் நின்று செய்தவம் பற்றியோ என விரித்துக் கொள்க.
செறிதவம் - புலன்களடங்கச் செய்யும் தவம். செறிதல் - அடங்குதல்.
'தவமும் தவமுடையார்க் காகும்' ஆகலின் தவம் முன் பற்றியோ
இத் தைந்நீர் ஆடற்றவம் இவர் பெற்றது என்க. உரைத்தி - கூறுக.
வையை: விளி.

      (பரிமே.) 88. கல்வி தொடங்கின அளவாதலின் 'மழபுலவர்' என்றார்.

93 - 105: ஆயிடை . . . .. . . . . .மாலைவளாய்

      (இ-ள்.) ஆயிடை - இங்ஙனமாக அக் கன்னியர் தைந்நீராடுங்கால்,
வேய் எழில் வென்று லெறுத்த தோள் - மூங்கிலினது அழகை வென்று
மிக்க தோள் அழகினையுடையாள் ஒருத்தி, மா இதழ்கொண்டு ஓர்
மடமாதர் நோக்கினாள் - நீலமலரைத் தன் காதிற் செருகிக்கொண்டு
அயல்நின்ற மடப்பமுடைய ஒருத்தியை நோக்கினாள், நோக்கிச் சாய்
இழை பிண்டித் தளிர் காதில் தையினாள் - அவளது குறிப்பறிந்து
அப்பொழுது அம்மாது குழைந்த அசோகினது தளிரைத் தன் செவியிற்
செருகிக் கொண்டாள், பாய்குழை நீலம் பகலாகத் தையினாள் -
அவ்வசோகு சூடினவள் அவ் வொளிபாயும் குழையையுடையாள்
அணிந்துள்ள நீலமலர் தான் அணிந்த அசோகந்தளிரின் செம்மையாலே
இளவெயில் படர்ந்தாற்போன்று ஆகும்படி சூடாநின்றாள், குழைக்காதின்
இவள் கோலச்செவியின் குவளை செரீஇ நான்கு விழிபடைத்தாள் என்று
- அதுகண்ட பின்னவள் முன்னவளைச் சுட்டிக் குழையணிந்த
காதினையுடைய இவள் தன் செவிகளில் நீலமலரை அணிந்து இப்பொழுது
நான்கு விழிகளை உடையவள். ஆயினாள் என்று அவளழகைப்
பாராட்டாநிற்ப, ஓர் பெண் - அதுகண்ட மற்றொருத்தி பின்னும்
அவளழகிற்கு அழகுசெய்வாளாய், கொற்றவை கோலம்கொண்டு -
அவ்வழகி கொற்றவைபோலத் தோன்றவேண்டும் என்று கருத்திற்
கொண்டு, நெற்றி விழியா நிறை திலகம் இட்டாள் - நெற்றிக் கண்போலத்
தோன்றும்படி அவள் நெற்றியிலே நிறையும்படி திலகமிட்டாள், பவள
வளை செறித்தாள் கண்டு - ஒருத்தி பவளவளையல்
அணிந்தாளொருத்தியைக் கண்டு, பச்சைக் குவளைப் பசுந்தண்டு கொண்டு
அணிந்தாள் - தன் கையில் மரகதமணிபோன்ற நிறமுடைய
குவளைமலரின் பசிய தண்டினை வளையலாகச் செய்து
அணிந்துகொண்டாள், கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை -
ஒருத்தி குளிரிப்பூவாலே மாலை தொடுத்தாளாக அங்ஙனம்
தொடுத்தவளை, நில் என்பாள் போல் - நீ இம் மாலை தொடுத்தலை
நிறுத்துக என்று தடை செய்வாள் போன்று மற்றொருத்தி அவள்
காணும்படி, மல்லிகா
மாலை நெய்தல் வளாய்த் தொடுத்தாள் - மல்லிகை மாலையின்
இடையிடையே நெய்தல்மலரை விரவித் தொடுத்தாள்;

      (வி-ம்.) மா - கருமை: நீலமலர்க்கு ஆகுபெயர் வெறுத்த - மிக்க;
தோளையுடையாள் என்க. நோக்கி - குறிப்பறிந்து. பிண்டி - அசோகு.
தையினாள் - அணிந்தாள்: தையினாள் இரண்டனுள் முன்னையது
வினையாலணையும் பெயர், பின்னது வினைமுற்று. குழை - தோடு:
இரண்டு காதினும் செருகப்பட்ட நீல மலர்கள் இரண்டு விழிகளாக
அவளியற்கை விழிகளிரண்டனோடும் நான்கு விழிகள் படைத்தாள்
என்றவாறு. இவள் நான்கு விழிபடைத்தாள் என்றது நலம் பாராட்டியது.
அது கண்ட மற்றொரு பெண் கொற்றவை கோலத்தைக் கருத்திற்கொண்டு
நெற்றி விழியாகத் திலகம் இட்டாள் என்க. குழைக்காதினையுடைய இவள்
தன் கோலச்செவியின் குவளை செரீஇ என்க. பவளவளையலினும் சிறந்த
மரகத வளையலாகக் குவளைத் தண்டால் வளையல்செய்து அணிந்தாள்
என்க.

      பச்சை - மரகதமணி. கல்லகாரப்பூ - குளிரிப்பூ. தனது மாலையின்
எழில்கண்டு கல்லகாரப் பூத்தொடுப்பாள் புனையும் மாலையை மேலே
புனையாமல் நிறுத்திவிடும்படி தனது மாலையைத் தொடுப்பாள் என்பார்
'நில்லிகா என்பாள்போல்' என்றார். இக என்னும் முன்னிலையசை இகா
என விகாரப்பட்டு நின்றது. மல்லிகா - மல்லிகை. வளாய் - விரவி.

      (பரிமே.) 63. ஆயிடை - அவராடுதற்கண்.

      99. திலகம் செம்மையால் நெருப்பாகிய நெற்றிவிழியாயிற்று.

      100. கொற்றவை கோலம் கொண்டது அவற்றின் மிக்க விழிகாட்டுதற்கு.

      மேல் அவர் கருத்தும் வேண்டிக்கோடலும் கூறுகின்றாள்.

106-114: தண்டு . . . . . . . . வரவு

      (இ-ள்.) தண்டு தழுவாத் தாவுநீர் வையையுள் கண்ட பொழுதில் -
முன்னர் ஒருவன் வாழைத்தண்டினைத் தழுவிப் பாய்கின்ற நீரையுடைய
வையையாற்றின்கண் ஆடினானாக அப்பொழுது அவன் அங்கு
ஆயத்துள் நின்றாள் ஒருத்தியைக் கண்டான் அங்ஙனம்
கண்டபொழுதிலே, கடும்புனல் கைவாங்க - அவன் நெஞ்சழிதலானே
கடிதாக ஓடும் நீர் அவனது கையை வலித்து வாங்காநிற்ப, நெஞ்சம்
அவள் வாங்க - அவனது நெஞ்சத்தை அம் மகளின் அழகு வலித்து
வாங்காநிற்ப, நீடு புணை வாங்க - இவ்வாற்றானே நீர் அவனது நெடிய
புணையைத் தனது போக்கோடு வலித்திழுத்துச் செல்லாநிற்ப, நேர் இழை
நின்றுழிக் கண் நிற்ப-நேரிய அணிகலன்களையுடைய அம் மகள்
நிற்குநிலையிலே அவன் கண்கள் நிலைபெற்று நிற்பனவாக, நீர் அவன்
தாழ்வுழி உய்யாது - நீரோ அவன் விரும்பின அவளிடத்தே அவனைக்
கொண்டு செல்லாமல், தான் வேண்டும்
ஆறு உய்ப்ப - தான் விரும்பிய வழியே அவனை ஈர்த்துச் செல்லாநிற்ப,
ஆயத்துடன் நில்லாள் அவன்பின் ஆங்குத் தொடரூஉ - அதுகண்ட
அப் பெண் அப் பிரிவினை ஆற்றாதவளாய் ஆயமகளிரோடே
நில்லாமல் அவன் பின்னே தொடரா நிற்ப, அத் திறம் தாய் அறியாள்
- அவள் அங்ஙனம் செல்லுதற்குக் காரணமான அன்பின் தன்மையை
அவள் தாய் அறியாதவளாய், தாங்கித் தனிச்சேறல் - அவளைத் தடுத்து
ஏடி நீ தனியே செல்லாதே கொள், ஆயத்தில் கூடு என்று - மீண்டு நின்
ஆயமகளிரோடே சென்று கூடுவாயாக என்று கூறி விலக்குதலானே,
அரற்றெடுப்ப - அப் பெண் அழும்படி, தாக்கிற்று கார் சேயுற்ற நீர்வரவு
- கரையினை மோதி வந்தது கார்ப்பருவத்துச் சிவந்த நிறமுடைய வையை
நீரினது வரவு;

      (வி-ம்.) தண்டு - வாழைத்தண்டு. தழுவா - தழுவி. நெஞ்சம்
அவள்பாற் சென்றமையானே கைசோர என்றவாறு. நீர் அவன் தாழ்வுழி
உய்யாது தான் வேண்டுமாறுய்ப்ப என்புழி நகைச்சுவை தோன்றுதலுணர்க.
தொடரூஉ என்னும் செய்யூவெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.
அத்திறம் - அதற்குக் காரணமான அன்பின்றன்மை. தாங்கி - தடுத்து.
சேறல்: முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று; செல்லாதே கூடென்று
என்புழி, என்றென்பதனை எனவெனெச்சமாகக் கொள்க. அரற்று -
அழுகை. கார் - கார்ப்பருவம். சேயுற்ற - செந்நிறமுடைய.

115 - 121: நீதக்காய் . . . . . . .மன்னுகவென்மாரும்

      (இ-ள்.) தைந்நீர் நிறம் தெளிந்தாய் நீ தக்காய் என்மாரும் - அக்
கார்ப்பருவத்து நீர்போலன்றித் தைந்நீரே நீ யாம் ஆடும்
அளவினையுடையையாய் மேலும் நிறமும் தெளிந்துள்ளனை ஆகலான் நீ
தக்காய் என்று பாராட்டுவாரும், காதலர் கழுத்து அமைகை வாங்காப்
புல்ல விழுத்தகை பெறுகென வேண்டுதும் என்மாரும் - எம் கணவர்
எமது கழுத்தில் அமைத்துத் தழுவிய கைகளை அகற்றாமல் எம்மைத்
தழுவா நிற்ப அதனால் யாம் வீறு பெறுக என்று நின்னை
வேண்டுகின்றோம் அங்ஙனமாக அருள்க என்று வேண்டிக்கொள்வாரும்,
வீழ்வார் பூவீழ் அரியில் யாம் புலம்பப் போகாது ஏமம் எய்துக
என்மாரும் - எம்மால் விரும்பப்பட்ட தலைவர் மலரூதும் வண்டுபோல
யாங்கள் தனித்துவருந்தும்படி எம்மை நீத்துப் போகாமல்
எம்மோடிருத்தலானே யாம் இன்பம் எய்தும்படி அருள்வாயாக என
வேண்டிக்கொள்வாரும், கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும் மழவு
ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் - எம் கணவரும் யாமும்
கிழவர் கிழவியர் என்று உலகத்தாராற் கூறப்படாமல் எமது ஏழாம்
பருவத்திற்குரிய ஆண்டு எய்துமளவும், இப்பருவமே நிலைபெறும்படி
இளமையை இத்தைந்நீர்த்தவம் தர யாம் செல்வத்தோடும் சுற்றத்தோடும்
நிலைபெறும்படி அருள்க என்று வேண்டிக் கொள்வாரும் ஆக;

      (வி-ம்.) தக்காய் - நற்பண்புடைமையாலே தகுதியுடையாய்.
என்மார் - என்பார். கழுத்தமை கை - கழுத்தைச் சுற்றிய கை. புல்ல -
தழுவ. விழுத்தகை - வீறு; அஃதாவது மற்றொன்றிற்கு இல்லாத அழகு.
அரி - வண்டு; மலரோரன்னர் மகளிர் வண்டோரனையர் மைந்தராகலின்.
'பூவீழ் அரியின் போகாது' என்றார். புலம்ப - யாம் தனித்து வருந்தும்படி
விட்டு என்க. இதனால் எங்கணவர் எம்மை நீத்துப் பரத்தையிற்குப்
போகாமலிருக்க என்று வேண்டினராதல் பூவீழ் அரியின் என்னும்
உவமையாற் பெற்றாம். வீழ்வார் - விரும்பப் பட்டார் என்க.

      கிழவர் கிழவியர் - முதிய பருவத்தினர். ஏழ் - ஏழாம் பருவம்;
அஃதாவது பேரிளம்பெண். ஏழு பருவமாவன. பேதை பெதும்பை மங்கை
மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்பன.
இங்ஙனம் வேண்டுவார் மங்கைப் பருவமகளிர் ஆகலான், யாம் எப்பொழுதும்
இப் பருவத்திற்குரிய இளமையுடையராக என வேண்டினர் என்றவாறு.

      மல்லல்கேள்: உம்மைத்தொகை: மல்லலும் கேளும் என்க. மல்லல்
- செல்வம். கேள் - சுற்றம்.

      வேண்டுதும், எய்துக, மன்னுக இங்ஙனமாமாறு அருள்க என்ற
படியாம்.

      மழவு - இளமை; ஈன்று என்பதனை ஈனவெனத் திரித்துக் கொள்க.

      (பரிமே.) ஆக என்பது வருவிக்கப்பட்டது.

      இனி ஒருவன் உவந்தவை காட்டல் கூறுகின்றாள்.

122 - 132: கண்டார்க்கு . . . . . . . எனவாங்கு

      (இ-ள்.) கண்டார்க்கு இக் காரிகை தாக்கணங்கு காண்மின் -
இப் பெண் தன்னைக் கண்டவரைத் தீண்டிவருத்தும் தெய்வமாவாள்,
ஆதலால் அத்தகையவளை நீயிரும் காண்மின், உவள்கண் காமன்
பண்டாரம் படை காண்மின் - இவளுடைய கண் மதவேளுடைய
கருவூலமும் படைக்கலங்களும் ஆகும் அவற்றின் அழகையும் பார்மின்,
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது - நீல நிறத்தையுடைய
தேனெய் தங்கிய மலர்மாலையையுடைய அம் மகளிர் ஓச்சித்
தடைசெய்யவும் நில்லாமல், பூ ஊது வண்டினம் யாழ்கொண்ட கொளை
கேண்மின் - அம் மாலையில் தேன் ஊதாநின்ற வண்டுகள்
யாழை ஒத்தற்குக் காரணமான அவற்றின் பாட்டைக் கேண்மின்,
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல் - பாடலின்

பொருள் விளங்கும்படி பாடாதிருக்கவேயும், குரல் கொண்ட கிளைக்கு
உற்ற உழை கேழ் கெழு சுரும்பின் பாலையிசை ஓர் மின் -
குரல்கொண்ட கிளையாகிய இளிக்குக் கிளையாகப் பொருந்தின
உழைகுரலான நிறம்பொருந்தின வண்டினது அரும்பாலையிற் றோன்றிய
மருதப்பண்ணாகிய இசையைக் கேண்மின், பண்கண்டு திறன் எய்தாப்
பண் - விளரிப்பாலையிற் றோன்றும் யாம் யாழினை, தாளம்பெற -
தாளத்தொடு பொருந்தப் பாடி, கொண்ட இன் இசைத்தாளம் -
மேற்கொண்ட அத் தாளத்திற்கும் கொளைச் சீர்க்கும் அப் பண்ணினது
சீருக்கும், விரித்து ஆடும் தண் தும்பி இனம் காண்மின் - ஏற்பத் தம்
சிறகுகளை விரித்து ஆடாநின்ற குளிர்ந்த இசையினையுடைய
தும்பித்திரளினைக் காண்மின், ஒரு தும்பி - தான் வீழ் பூ நெரித்தாளை.
முனைகெழு சின நெஞ்சின்முன் எறிந்து பின்னும் கனைவரல் காய்சினத்து
இயல் காண்மின் என - ஒரு தும்பி தான் படிந்த மலரினை
நெரித்தவளாகிய ஒருத்தியை மாறுபாடு பொருந்தின வெகுளியையுடைய
நெஞ்சுடனே முன்னரும் தாக்கிப் பின்னரும் தாக்குதற்கு விரைந்து
வருதற்குக் காரணமான அதனுடைய சுடுகின்ற வெகுளியின் இயல்பினைக்
காண்மின் என்று இவ்வாறு அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மைந்தர்
ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டாநிற்ப;

      (வி-ம்.) தாக்கணங்கு - தீண்டிவருத்தும் தெய்வம்; கண்டார்
வருந்துதல் ஒருதலையாகலின் இவள் கண்டார்க்குத் தாக்கணங்கு
என்றான். பண்டாரம் - கருவூலம். காமன் மயக்குதற்குரிய அழகெல்லாம்
அவள்பால் நிரம்பி இருத்தலின் காமன் செல்வமான அழகு குவிக்கப்பட்ட
கருவூலமாக இவளிருக்கின்றாள் என்றான். படை - சேனை;
படைக்கலமுமாம். அவை வில் அம்பு முதலியன என்க.
சேய்மையினுமின்றி அண்மையினுமின்றி இடைநின்றாளை உவள் என்று
சுட்டினான். நீல் - நீலம் என்பது ஈறுகெட்டு நின்றது. நீலநிற நெய்
என்றது விளைந்து முதிர்ந்த தேனினை; இது நீலநிற முடைத்தாதலையும்
இதனை ஒரி என்று வழங்குதலையும், "நீனிற வோரி பாய்ந்தென" (524-5.)
என வரும் மலைபடுகடாத்தானும் உணர்க. யாழ் கொண்ட - யாழை
ஒத்தற்குக் காரணமாகிய என்க. கொளை - பாட்டு வண்டினது பாடல்
பண்ணிற்குரிய பொருளறிந்து பாடப் படாதாகவும் என்பான்.
கொளைப்பொருள் தெரிதரக் கொளுத்தாமல் என்றான். குரல், இளி உழை
என்பன இசைவகைகள். கிளை இடமுறையால் ஐந்தாவதாகிய நரம்பு.
இணை நரம்பு, கிளைநரம்பு, பகை நரம்பு, நட்பு நரம்பு என்று நரம்புகள்
நால்வகைப்படும். குரல் தாரம் விளரி இளி உழை என எண்ணுமுறையால்
குரல் நரம்பிற்கு உழை நரம்பு ஐந்தாவதாதலின் குரலுக்கு உழை கிளை
நரம்பாயிற்று.

      இனி, கிளை என்பது ஐந்து நரம்பு என்பாருமுளர்; விளரி, "கிளை
யெனப் படுவ கிளக்குங் காலைக் குரலே இளியே துத்தம் விளரி,
கைக்கிளை என ஐந்தாகும்" (சிலப் 8: 33-4 உரை) என்பவாகலின். கேழ்
கெழு சுரும்பின் என மாறுக.
பாலையிசை - அரும்பாலையிற் றோன்றிய மருதப்பண்: ஆகுபெயர்.

      பண்கண்டு திறன் எய்தாப்பண் என்றது பண்மட்டும் பெற்றுத்
திறம் பெறாத பண் என்றவாறு. திறம் - குறைநரம்பு. அஃதாவது
விளரிப்பாலையிற் றோன்றும் யாமயாழ், அதனைத் தாளத்தோடு பாடி
என்க. தாளத்திற்கும் சீர்க்கும் ஏற்ப விரித்தாடும் என்க. தாளத்திற்கும்
சீர்க்கும் உள்ள வேற்றுமை முற்கூறப்பட்டது. தண்தும்பி - குளிர்ந்த
இசையையுடைய தும்பி என்க. முனை - மாறுபாடு. கனைவரல் -
விரைந்து வருதல்.

      (பரிமே.) இங்ஙனம் தைந்நீராடல் கூறி மேல் தலைமகன் கேட்ப
வையையை நோக்கிக் கூறுகின்றாள்.

134-140: இன்னபண்பின் . . . . . . நிறையே

      (இ-ள்.) இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் நறு நீர்
வையை - இனிய தன்மையில் மேம்பாடுற்ற தேர்ச்சியினையுடைய
இசையோடுகூடிய பரிபாடலாலே வாழ்த்தப்படுகின்ற நறிய நீரினையுடைய
வையையே! , மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட கன்னிமை
கனியாக் கைக்கிளைக் காமம் - மின்னுகின்ற அணிகலன்களையும் நறிய
நுதலையும் உடைய மகட்டன்மை மேம்பட்ட கன்னிமைத்தன்மை முதிராத
மகளிரிடத்தே மேற்கூறியவாறு கைக்கிளைக் காமத்தைத் தருகின்ற,
முன்முறை செய்தவத்தின் இம்முறை இயைந்தேம் - யாங்கள்
முற்பிறப்பிலே செய்த தவத்தாலே இப்பிறப்பிலே நின்பால் இத்
தைந்நீராடலாகிய தவத்தைப் பெற்றேம், நயத்தகு நிறை மறுமுறை
அமையத்தும் இயைக அத் தவத்தினை யாவரும் விரும்பத்தக்க நினது நீர்
நிறைவின்கண்ணே மறுப்பிறப்பினும் யாங்கள் பெறுவேமாக;

      (வி-ம்.) மின்னிழை - மின்னுகின்ற அணிகலன். மகள் - மகளாந்
தன்மை; பெண்டன்மை என்க. 'கன்னிமை முதிராக் கைக்கிளைக் காமம்'
என்றது. முன்னர்க் காமஞ்சாலா இளமையோராகிய கன்னிமகளிரின்
அழகிலீடுபட்டு ஏமஞ்சாலா இடும்பை எய்திச் சொல்லெதிர்பெறாது
கண்டார்க்குத் தாக்கணங்கு இக் காரிகை காண்மின் என்பது முதலாக
மைந்தர் சொல்லி யின்புற்றமையை என்க. என்னை?
"காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றுஇரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே"
(தொல்.அகத்-50)

என்பதோத்தாகலின்.
      பரிபாடல் இயற்றமிழும் இசைத் தமிழுமாக இருத்தலானே 'இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்' என்றார்.

      முன்முறை - முற்பிறப்பு. இம்முறை - இப்பிறப்பு. மறுமுறை - மறுபிறப்பு. வையை: விளி. நிறை - வெள்ளம்.

      (பரிமே.) 135. (மக்கட்டன்மை) மகட்டன்மை.

      136. கன்னிமை முதிராத கைக்கிளைக்காமம்.

      140. யாவரும் நயக்கத் தக்க நின்னீர் நிறைவின்கண்ணே