101
தோழி கூற்று


தோழி தலைவிக்கு ஏறு தழுவுதலைச் சுட்டிக்காட்டுதல்

தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;
5 மணி புரை உருவின காயாவும்; பிறவும்;
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு
10 அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ
15மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி,
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
20வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி
விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி,
குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்
25 இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு,
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்
செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்
கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,
நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்
30ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன்
தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்

அது கண்டு தலைவி கொண்ட அச்சம் போக்க, தோழி நல் நிமித்தம் கண்டு கூறுதல்

என ஆங்கு
அணி மாலைக் கேள்வற் தரூஉமார், ஆயர்
35 மணி மாலை ஊதும் குழல்
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகை
ஈன்றன, ஆய மகள் தோள்
பகலிடக் கண்ணியன், பைதற் குழலன்,
40 சுவல்மிசைக் கோல் அசைத்த கையன், அயலது;
கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம், யாம்
'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆனுள்,
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒரு நாள்,
45 கேளாளன் ஆகாமை இல்லை; அவற் கண்டு
வேளாண்மை செய்தன கண்
ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்;
நாறு இருங் கூந்தற் பொதுமகளிர் எல்லாரும்
முல்லைஅம் தண் பொழில் புக்கார், பொதுவரோடு,
50எல்லாம் புணர் குறிக் கொண்டு

'ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர், ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே' என்னும் சூத்திரத்தில், 'திணை நிலைப் பெயராகிய கிழவரும் கிழத்தியரும் உளர்' என்னும் விதியால் கொண்ட அத் தலைவிக்கு அவள் தோழி ஆயர் ஏறு தழுவுகின்றமை காட்டி, அவள் அது கண்டு வருந்தாமல், ஆண்டுப் பெற்ற நல் நிமித்தம் கூறித் தெளிவித்து,அதனை அவ் விதியால் கொண்ட தலைவற்கும் கூறி, மீட்டும் அத்தலைவிக்குத் தம் சுற்றத்தார் கூறியிறுக்கும் கூற்றினையும் கூறி, 'தலைவனும் இன்னும் ஒரு ஞான்று ஏறு தழுவி நம்மை வரைந்து கொள்வன்' என்று ஆற்றுவித்தது (1)