114
தலைவி கூற்று


தலைவி

வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரைக் கண்டு? 'மதி அறியா
5ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ
தோழி! அவனுழைச் சென்று

தோழி

சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி

தலைவி

'சொல் அறியாப் பேதை' மடவை! 'மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
10நினக்கு வருவதாக் காண்பாய்'. அனைத்தாகச்
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய
15வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
20அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?

'ஆங்கு அதன் புறத்துப் புரைபட வந்த, மறுத்தலொடு தொகைஇ' என்பது, அவன் வரைவு வேண்டின இடத்து, அவ் வரைவு புறத்ததாகிய வழி, தலைவி தன் உயர்வு உண்டாகத் தோன்றிய மறுத்தலோடே முன் கூறியவற்றைத் தொகுத்து' என்று பொருள் கூறி, 'அதன் புறம் எனவே, அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவு ஆயிற்று' என்றாம். உயர்வு குடிப் பிறப்பும் கற்பும்; அதற்கு ஏற்ப, 'பிறர் வரைவு மறுத்து, தலைவன் வரையுமாறு நீ கூறு' எனத் தோழிக்குக் கூறியது (14)