132
தோழி கூற்று

உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர்மேல்,
விரவுப் பல் உருவின வீழ் பெடை துணையாக,
இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள்ளினம் இறை கொள
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப,
5நிரை களிறு இடை பட, நெறி யாத்த இருக்கை போல்
சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்து,
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்,
'நன்னுதால்! அஞ்சல் ஓம்பு' என்றதன் பயன் அன்றோ
10பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள்
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?
பல் மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால்,
'சின்மொழி! தெளி' எனத் தேற்றிய சிறப்பு அன்றோ
வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள்
15நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை?
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ. 'மணந்தக்கால்,
கொடுங் குழாய்! தெளி' எனக் கொண்டதன் கொளை அன்றோ
பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள்
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை?
20என ஆங்கு
வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண்
கழியும் நோய் கைம்மிக அணங்குஆகியது போல,
பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி
அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே

வரைவு நீட்டித்துழிப் பகற்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டு, தோழிஅவனை நாணு நெஞ்சு அலைப்ப, வரைவு கடாயது