142
கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை,
அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண்,
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது,
நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்
5பயன் இன்று மன்றம்ம, காமம் இவள் மன்னும்
ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்,
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி, தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப, நிரை வெண் பல்
10மீ உயர் தோன்ற, நகாஅ, நக்காங்கே,
பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண்கண்
ஆய் இதழ் மல்க அழும்
ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்;
காண்பாம் கனங்குழை பண்பு
15என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ?
நல்ல நகாஅலிர் மற்கொலோ யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லிப் புணரப் பெறின்
'எல்லா! நீ உற்றது எவனோ மற்று?' என்றீரேல், 'எற் சிதை
20செய்தான் இவன்' என, 'உற்றது இது' என,
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,
பைதல ஆகிப் பசக்குவமன்னோ என்
நெய்தல் மலர் அன்ன கண்?
கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று
25நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே,
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று
மாண் மலர்க் கொன்றையவன்?
'தெள்ளியேம்' என்று உரைத்து, தேராது, ஒரு நிலையே,
30'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலியுறீஇ,
உள்ளி வருகுவர்கொல்லோ? வளைந்து யான்
எள்ளி இருக்குவேன் மற்கொலோ? நள்ளிருள்
மாந்தர் கடி கொண்ட கங்குல், கனவினால்,
தோன்றினனாக, தொடுத்தேன்மன், யான்; தன்னைப்
35பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய
கையுளே, மாய்ந்தான், கரந்து
கதிர் பகா ஞாயிறே! கல் சேர்திஆயின்,
அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித்
தருகுவைஆயின், தவிரும் என் நெஞ்சத்து
40உயிர் திரியா மாட்டிய தீ
மை இல் சுடரே! மலை சேர்தி நீ ஆயின்,
பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை,
கைவிளக்காகக் கதிர் சில தாராய்! என்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு
45சிதைத்தானைச் செய்வது எவன்கொலோ? எம்மை
நயந்து, நலம் சிதைத்தான்
மன்றப் பனைமேல் மலை மாந் தளிரே! நீ
தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ?
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால், யான் காணேன்
50நன்று தீது என்று பிற
நோய் எரியாகச் சுடினும், சுழற்றி, என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே
நோய் உறு வெந் நீர்: தெளிப்பின், தலைக் கொண்டு
வேவது, அளித்து இவ் உலகு
55மெலியப் பொறுத்தேன்; களைந்தீமின் சான்றீர்!
நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ்
வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை
நலியும் விழுமம் இரண்டு
எனப் பாடி,
60இனைந்து நொந்து அழுதனள்; நினைந்து நீடு உயிர்த்தனள்;
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல்லிரா
நல்கிய கேள்வன் இவன் மன்ற, மெல்ல
மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம்
கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக்
65கலங்கிய நீர்போல் தெளிந்து, நலம் பெற்றாள்,
நல் எழில் மார்பனைச் சார்ந்து

'பொழுது தலை வைத்த கையறு காலை, இறந்த போலக் கிளக்கும் கிளவி, மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு, அவை நாற் பொருட்கண் நிகழும் என்ப.' இச்சூத்திரம்,' பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' என்ற சிறப்புடைப் பெருந்திணை அன்றி, பெருந்திணைக் குறிப்பாகக் கந்தருவத்துட்பட்டு வழுவி வரும் 'ஏறிய மடல் திறம்' முதலிய நான்கனுள் ஒன்றாய்,முன்னர் நிகழ்ந்த கந்தருவம் பின்னர் வழுவி வந்த 'தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்' ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது. ஓதலும் தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளாண் எதிரும் பிரிவும், முடியுடை வேந்தர்க்கும் அவர் ஏவலின் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின்,அப் பிரிவில் பிரிகின்றான், 'வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்' என்பதால், கற்புப் போல நீ இவ்வாறு ஒழுகி, யான் வருந்துணையும் ஆற்றி இரு' என ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கணம் அன்மையின், வாளா பிரியும் அன்றே? அங்ஙனம் பிரிந்துழி, அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்கும் தோழிக்கும் ஆற்றுவித்தல் அரிதுஆகலின், அவட்கு அன்பு இன்றி நீங்கினான் என்று, ஆற்றாமை மிக்கு ஆண்டுப் பெருந்திணைப் பகுதி நிகழும் என்று உணர்க. (இதன் பொருள்): பொழுது அந்திக் காலத்தே: கையறு காலை ' புறம் செயச் சிதைத்தல்' என்னும் சூத்திரத்தில், 'அதனின் ஊங்கு இன்று' எனக் கூறிய கையறவு உரைத்தல் என்னும் மெய்ப்பாடு எய்திய காலத்தே; தலை வைத்த அந்த ஆறாம் அறுதியின் இகந்தனவாக முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; மிகுதியொடு மடனே வருத்தம் மருட்கை நாற் பொருட்கண் நிகழும் தன் வனப்பு மிகுதியுடனே மடப்பமும் ஆற்றாமையும் வியப்பும் ஆகிய நான்கு பொருட்கண்ணே நடக்கும்; அவை இறந்த போலக் கிளக்கும் கிளவிஎன்ப அங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளும் கூற்று நிகழுங்கால், தன்னைக் கைகடந்தன போலக் கூறும் கூற்றாய் நிகழும் என்று கூறுவர் புலவர் என்றவாறு. தலை வைத்த மெய்ப்பாடு ஆவன: 'ஆறாம் அறுதியினும் ஒப்பத் தோன்றுதற்கு உரிய மெய்ப்பாடுகளாய் மன்றத்து இருந்த சான்றோர் அறிய, தன் துணைவன் பெயரும், பெற்றியும்,அவனொடு புணர்ந்தமையும், தோன்றக் கூறியும், அழுதும், அரற்றியும், பொழுதொடு புலம்பியும், ஞாயிறு முதலியவற்றோடு கூறத்தகாதன கூறுதலும், பிறவும் ஆம்' என்னும் விதி பற்றி வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழி, தலைவி பிரிவு ஆற்றகில்லாது நாணு வரை இறந்து கலங்கி மொழிந்து அறிவு அழிந்துழி, அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறிற்று என்று கூறியது. (25)