23
தலைவி கூற்று

இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,
புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம்
தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல்
5நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே:
இனி யான்,
உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்
10நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்
அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்
கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓரன்னர்
என ஆங்கு,
15யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது,
கொலை வெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப,
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைவி, ‘எம்மையும் உடன்கொண்டு சென்மின்’என்றாட்கு, உடன்படாது அவன் பிரியலுற, தனது இறந்துபாடு தோன்றக் கூறியது