26
தோழி கூற்று

‘ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,
பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,
மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,
ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,
5ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு,
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல,
போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற,
நோ தக வந்தன்றால், இளவேனில் மே தக
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து,
10தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
வெல் புகழ் உலகு ஏத்த, விருந்து நாட்டு உறைபவர்
திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை,
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்
15நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி, தம்
இசை பரந்து, உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர்
அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறாகி,
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
20ஆறு இன்றிப் பொருள் வெஃகி, அகன்ற நாட்டு உறைபவர்’
என, நீ
தெருமரல் வாழி, தோழி! நம் காதலர்,
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்
செரு மேம்பட்ட வென்றியர்;
25‘வரும்’ என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே

‘மேவிய சிறப்பின் ஏனோர்’ என்னும் சூத்திரத்தில், பகைமேற் சென்ற அரசன் திறை பெற்ற நாடு காத்து, அதன்கண் தன் நெறி முறைமை அடிப்படுத்து வருதற்குப் பிரிவன் என்றலின், பிரிவின்கண் தலைவன் இளவேனிற் காலம் குறித்துப் பிரிய,அக் கால வரவின்கண் தலைவி ஆற்றாளாய், ‘அவர் நமக்கு அருளும் காலையில் அருளார் காண்’ என்றாட்கு, தோழி, ‘அவர் வரவிற்கு இக் காலம் தூதாயன்றே வந்தது; நீ ஆற்றுவாயாக’ என வற்புறுத்தியது(25)