34
தோழி கூற்று

‘மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று,
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின்,
சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற,
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
5பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல்,
பல் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப,
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்
விரி காஞ்சித் தாது ஆடி இருங் குயில் விளிப்பவும்,
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
10கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி,
எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும்ஆயின், எவன் செய்கோ?
பொறை தளர் கொம்பின்மேல் சிதரினம் இறை கொள,
நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு,
15பொறை தளர்பு பனி வாரும் கண்ஆயின், எவன் செய்கோ?
தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும்,
கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று,
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள்ஆயின், எவன் செய்கோ?’
20என ஆங்கு,
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா! நாம்
எண்ணிய நாள்வரை இறவாது, காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்
கண் உறு பூசல் கை களைந்தாங்கே

பருவம் கண்டு வன்புறை எதிரழிந்து ஆற்றாளாய தலைவிக்குத் தோழி அவன் வரவு உணர்ந்து, கழி உவகையால் கூறியது