49
தோழி கூற்று

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு, கதுமென வெரீஇ,
5புதுவதாக மலர்ந்த வேங்கையை
‘அது’ என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி,
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!
10போது எழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே,
மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய்,
இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை
இன்புற அளித்தனை இவள்மாட்டு நீ இன்ன
15அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே,
மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து,
அணங்குடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை
இருள் உறழ் இருங் கூந்தல் இவள்மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே,
20ஒளிறு வேல் வலன் ஏந்தி, ‘ஒருவன் யான்’ என்னாது,
களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை
அதனால்
இரவின் வாரல், ஐய! விரவு வீ
அகல் அறை வரிக்கும் சாரல்,
25பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே

‘நீர் இவ்வாறு வருகின்ற வரவு எமக்குத் துன்பத்திற்குக் காரணமாகாநின்றது’எனக் கூறி, இரவு வருவானைத் தோழி, ‘பகல் வருக’ என்றது